ஞாயிறு, ஏப்ரல் 21, 2013

தூப்புக்காரி நாவல்

 



         தூப்புக்காரி நாவல் பற்றி என் எண்ணபதிவுகள் பதியும் முன்,   நாவலை வாங்கும் முன் எனக்கு ஏற்பட்ட அனுபவபதிவுகள்...,

        விருத்தாசலத்தில் இருந்து எழுத்தாளரும், நண்பருமான, தம்பி கண்மணிகுணசேகரனிடம் இருந்து போன் அண்ணே தூப்புக்காரி படித்தீங்களா? இங்கு கிடைக்கவில்லை அங்கு கிடைத்தால் வாங்கி              அனுப்பமுடியுமா என்றார்.
          அதன்பின் ஆனந்தவிகடனில் தூப்புக்காரிபற்றி எழுதியதை படித்தேன். அதேநேரம் பேஸ்புக்கில் திருவில்லிபுத்தூர் ரத்தினவேல் அவர்கள் தூப்புக்காரி நாவல்பற்றியும் அதன் பதிப்பக விலாசம் மற்றும் போன் என்னை குறிப்பிட்டு இருந்தார். அவர்கள் குறிப்பிட்ட நாகர்கோவில் திருவள்ளுவர் புத்தகநிலையத்தை தொடர்புகொண்டபோது தற்சமயம் மிக குறைவான பிரிதியே இருப்பதால் இங்குவந்து கேட்டபவர்களுக்கு மட்டுமே தரவேண்டியநிலை,  
      இன்னும் பத்துநாளில் மறுபதிப்பு வந்துவிடும் என்றார்கள்,     உடன் நான் அங்கு உள்ள உறவினருடன் தொடர்புகொண்டு அந்த புத்தகம்   வாங்கமுடியுமா என்றேன்,    நாளை செல்கிறேன் என கூறினார். மறுநாள் புத்தகம் வித்துவிட்டது என தகவல் கூறினார்.
        அன்றைய மதுரை தினமலரில் தூப்புக்காரி நாவல் எழுதி இளம்படைப்பாளர் படைப்புக்களுக்கான சாகித்ய அகடாமி விருது பெற்ற மலர்வதி அவர்களை பாராட்டி கட்டுரை வந்து இருந்தது, அதில் அவருடைய செல்பேசி எண் குறிப்பிட்டு இருக்க, உடன் அவர்களுக்கு விருதுபெற்றமைக்கு பாராட்டு தெரிவித்து பேசினேன், நன்றி கூறி நாவல்படித்தீர்களா என்றார், நாவல்கிடைக்கவில்லை என விபரம் தெரிவித்தேன்,
           அதற்கு அவர் எனக்காக இரண்டு நூல் எடுத்து வைத்துள்ளனர் நான் தங்களுக்கு அனுப்ப கூறிகிறேன் என்றார், இல்லை நான் நான்கு தினத்தில் நாகர்கோவில் அருகில் உள்ள குலசேகரம் ஊருக்கு வர இருப்பதால், முடிந்தால் நேரில் பெற்றுக்கொள்கிறேன் என கூறிவிட்டேன்.
     
                 ஏப்ரல் 10ம் தேதி உறவினர்களுடன் குலசேகரம் ஊருக்கு செல்லும் வழியில் நாகர்கோவிலில் மதிய உணவுக்காக ஹோட்டல் செல்ல நான் மட்டும் திருவள்ளுவர் புத்தககடைக்கு சென்று கடையில் விபரம் கூறி தூப்புக்காரி நாவல் வாங்கிகொண்டு, நாவல் பெற்றுக்கொண்ட விபரத்தை நாவலாசிரியர் மலர்வதிக்கு போன்செய்து நன்றிகூற, அவர் கடைக்கு ஐந்துநிமிடத்தில் வந்துவிட்டார்,  
         விருது பெற்றவர் வாசகனை தேடி வந்து சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. நாவல்களை படித்துவிட்டு நாவலாசரியர்களை சந்தித்த அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு ஆனால் நாவல் படிக்கும்முன்பே நாவலாசிரியரை சந்தித்த அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது.
               நாவல் பற்றி

                       தூப்புக்காரி, மனித கழிவுகளை சுத்தம் செய்யும் ஒருபெண்ணின் மன வலிகளையும், அவள் மகளின் மனவலியையும் நம்முன் சித்திரமாக வரைந்துள்ளார்.
          அழுக்கான உடைஉடுத்தி அழுக்கில் நின்றாலும் அந்த மனிதர்களின் வெள்ளை மனதை நம்முன் காட்டும்போது, நம் அழகான சட்டைகூட அழுக்காக தெரியும் மன அழுத்தத்தை நமக்கு உணர்த்தும் விதமாக உள்ளது, நாவலை படித்துவிட்டு இயல்புநிலைக்கு திரும்ப மிக சிரமமாகவே உள்ளது.
           இதுவரை யாரும் சொல்லாத கதைகளம் படிக்கும் போது நம் அகத்தின் அழுக்கை நமக்கு உணர்த்துகிறது.
        கதை தனிமனிதரையோ, இந்த சமூகத்தையோ சாடவில்லை, ஆனால் சுட்டிகாட்டுகிறது.
அம்மா ஆஸ்பத்தரியில் கழிவரையை சுத்தம் செய்யும் தொழிலை வெறுக்கும் மகள் பூவரசி, சந்தர்ப்பவசத்தால் அதே வேலைக்கு செல்லவேண்டிய நிலை பூவரசி கழிவரையை சுத்தம் செய்யும் போது அவளுக்கு ஏற்படும் மனவேதனையை நாம் அருகில் நின்றுகொண்டு மூக்கை பொத்திக்கொண்டு நேரில் பர்ப்பதை போன்ற  உணர்வை தருகிறது கதையின் நடை. நாலுபேரு பாராட்டனும்னு பத்துபேருக்கு விழாநடத்தி உதவிசெய்வானுங்க ஆன தனியேபோய் உதவி கேட்டு போனா செய்யமாட்டாக என வசதிபடைத்தோரின் குணநலனை சாடும்போது இன்றைய அரசியல்வாதிகளின் முகமுடிகளும் நம்முன் வந்து செல்கிறது.
   கிளைகளின் சலனம்
   ஊருக்கு தெரியும்?
   வேர்களின் அழுகை
   யாருக்கு தெரியும்?
  இப்படி நாவல்களின் இடையே கதாபாத்திரங்களின் வேதனைகள் கவிதைகளாக பதிவு செய்துள்ளது நாவலுக்கு அழகுசேர்க்கின்றன.
 மாரியும், பூவரசியும் மனதை விட்டு அகலாத கதாபாத்திரங்களாக உலாவருகின்றனர்.
இது பெண்களின் மன உலகை சுட்டிகாட்டுவதால் ஒரு பெண்ணியநாவலாக உள்ளது. விருது பெற்றமைக்கு தகுதியுள்ள நாவல்.



        21.4.2013 அன்று காலை விருதுநகரில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில்  தூப்புக்காரி நாவல் எழுதிய மலர்வதி அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. பல இலக்கிய படைப்பாளர்கள் கலந்துகொண்டனர். பலர் பாராட்டி பேசினர், ஏற்புரையில் மலர்வதி சிறப்பாக பேசினார்.

ஞாயிறு, மார்ச் 03, 2013

கல்லூற்று ஊரணி


              கடந்தவாரம் மதுரையில் உறவினர் வீடு சென்றேன். எப்போது மதுரை வந்தாலும் நண்பர் எழுத்தாளர் S.அர்ஷியாவுக்கு போன் செய்து சந்திப்பது வழக்கம், அதன் படி நண்பர்க்கு போன்போட எதிர்முனையில் என்ன சார், நலமா! எங்க இருக்கீங்க? என்றார், மதுரை ஆரப்பாளையம் வந்துள்ளேன் என்றேன். வேலைமுடிந்தபின் கோரிப்பாளையம் வந்துடுங்க என்றார், மதியம் 12 மணிக்கு கோரிப்பாளையத்தில் நண்பரை சந்தித்தேன், ஒவ்வொருமுறை சந்திப்பின் போதும் நேரம் கிடைத்தால் மதுரைக்கு பக்கத்தில் உள்ள சிலர் அறிந்தும் பலர் அறியாத இடங்களுக்கு செல்வோம்.

             மதுரையில் 35 வருடங்கள் இருந்து இப்போது விருதுநகரில் வாழ்ந்துவந்தாலும் மதுரையில் வாழ்ந்தபோது, மீனாட்சிஅம்மன் கோவில்.திருப்பரங்குன்றம், அழகர்மலை மற்றும் காந்திமியூசியம், திருமலைநாயக்கர் மஹால் என இந்த இடங்களுக்கு மட்டுமே அடிக்கடி சென்றுள்ளேன். மதுரையை சுற்றி பல மலைகளும் அதன் சார்ந்த வரலாற்று சிறப்புகளை பசுமைநடை இயக்கம் மூலம் நான் அறிந்துகொள்ள நண்பர் அ.முத்துகிருஷ்ணன் உதவியதுபோல், நண்பர் அர்ஷியா அவர்கள் மூலம் மதுரையின் அருகில் உள்ள இயற்கை அழகுகொஞ்சும் இடங்களை பார்த்து ரசிக்கமுடிந்தது.
       அவரது பொய்கைக்கரைப்பட்டி நாவல் படித்த போது இவ்வளவு அழகான இடங்கள் மதுரையில் உள்ளதா என ஆச்சரியப்பட்டபோது, ஒரு முறை அவரைசந்தித்தபோது பொய்கைக்ரைப்பட்டி கிராமத்திற்கே கூட்டிசென்றார், அழகர்மலைக்கு செல்லும் பாதையில் அழகர்மலைக்கு அடிவாரத்தில் உள்ள கிராமத்தின் பெயர் பொய்கைகரைப்பட்டி, அந்த கிராமத்தை பலர் கடந்து சென்றாலும் அந்த கிராமத்தின் அழகை பலர் அறிந்து இருக்கமாட்டார்கள், கிராமத்தை ஒட்டி மேற்கே செல்லும் பாதையில் சென்றால் மிகப்பெரிய தெப்பக்குளம் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது, அந்த குளத்தின் படியில் உட்கார்ந்து நான்குபக்கமும் கண்களால் சுற்றிபார்க்கும் போது அழகுஅழகு தான்,
    அங்கிருந்து வடக்கே ஆரம்பிக்கும் அழகர்மலையின் அடிவாரம் தொடங்குகிறது, கரையில் உள்ள ஆழமரம்தான் நாவலின் அட்டைபடமாக உள்ளது, அந்த இடத்தைவிட்டு நகரவே மனம் இல்லை, கவிஞராக இல்லாதவரும் கவிஞர்களாக மாறிவிடுவர். பார்த்துவிட்டு வந்து நண்பர்களிடம் சொன்னபோது, நண்பர் ஒருவர் அழகர்கோவில் சென்றபோது அந்த இடத்திற்கு சென்றுவந்து ஆச்சரியப்பட்டார், எத்தனையோமுறை அழகர்கோவில் சென்றுஇருந்தாலும் நீங்கள் சொன்னபிறகுதான் இதுபோன்ற இடத்தை அறிந்துகொள்ளமுடிகிறது என்றார்.
                 அடுத்த முறை நண்பரை சந்தித்தபோது பைக்கில் அலங்காநல்லூரில் இருந்து வாடிப்பட்டி செல்லும் பாதையில் 5கி.மீட்டர் தள்ளி சாத்தையார் அணை சென்றோம். அப்படியொரு அணை இருப்பதை அப்போதுதான் நான் தெரிந்துகொண்டேன் விரகனூர் அணைதான் மதுரைக்கு அருகில் உள்ளது என நிணைத்த எனக்கு இது ஆச்சரியப்பட்டது, இரண்டு மலைகளுக்கு இடையே இந்த அணைகட்டப்பட்டுள்ளது , மலைபாதைவழியாக வாடிப்பட்டி ஊருக்கு செல்லலாம் அந்த மலைபாதை குமுளி செல்லும் பாதையை போல் இருந்தது அங்கிருந்து அணையின் மொத்த அழகையையும் ரசிக்கும் போது மனம் குளிர்ந்துவிடுகிறது

.
             இந்த முறையும் பயணம் என இடத்தை எனக்கு தெரிவிக்காமல் பைக்கில் புறப்பட்டார், பைக்கை இப்போதுதான் வேலைபார்த்துள்ளார், வேறு பைக் வாங்கிடலாமே சார் என்றேன், அதற்கு இந்த பைக் என குடும்ப உறுப்பினர் போல் என்றும் இருக்கும் என்னுடன் என. தல்லாகுளம், பாண்டியன் ஹோட்டல் வழியாக நத்தம் பாதைக்கு வண்டியை திருப்பினார். ரிசவர்லைன் கடந்த போது,
          1980ல் நான் நரிமேட்டில் இருந்து புதூர் ITI க்கு படிக்க சைக்கிளில் இந்த பாதைவழியாக தான் நண்பருடன் செல்வேன் அப்போது இந்த பகுதி ஆள் நடமாட்டமே இருக்காது. ஆனால் இப்போது இந்தபகுதியை பார்த்தபோது ஆச்சரியமாக உள்ளது, நாராயணபும் கண்மாயும் அதை சுற்றிலும் உள்ள வயல்வெளிகள் இன்று கட்டிடமாக உருமாறியுள்ளது,
        ஐய்யர் பங்களாவை தாண்டியும் கட்டிடங்களின் வளர்ச்சி பிரமிப்பைதந்து, அங்கிருந்து கிழக்குநோக்கி ஒருபாதை மாட்டுதாவணிவரை செல்கிறது. எனில் மதுரையின் அசூரவளர்ச்சியை தெரிந்துகொள்ள முடிகிறது. காஞ்சிரம்பேட்டை தாண்டி சத்திரப்பட்டி கடவூர் என பைக் சீரான வேகத்தில் கடந்துகொண்டு இருந்தது. சத்திரப்பட்டியும், கடவூரும் மதுரைக்கு அருகில் இருந்தாலும் இன்னும் கிராமத்தின் சாயலிலேயே இருக்கின்றது, செல்லும் பாதை இருபுறமும் மாமரங்கள் கண்களுக்கு குளிர்சியை தந்தது,  
             பெரியார்பாசன கால்வாய் வறண்டு காணப்பட்டது என்றாலும் கரையோரம் பசுமையாகவே மரங்கள் காணப்பட்டது, கடவூர் தாண்டி பாலமேடு செல்லும் பாதைக்கு திரும்பினார், நான் எந்த இடம் செல்கிறோம் சார் என்றாலும் தலைமட்டுமே ஆட்டினார், பாலமேடு பாதையில் சென்று சிறிது தூரம் கடந்தபின் வலதுபக்க காட்டுபாதைக்குள் வண்டி சிறிது தூரம் சென்று பெரியகுளக்கரையில் வண்டியை நிறுத்தினார், இந்த இடம்தான் நண்பா என்றார்,
          ஒரு நடுத்தரகுளம் குளக்கரையில் நாலுபக்கமும் ஆழமரம், குளத்தில் தண்ணீர் இருந்தது, சுற்றிலும் மலை சார்ந்த காடு என அந்த இடம் அழகாய் இருந்தது என்றாலும் இந்த இடம் என்ன சிறப்புசார் என்றேன், இந்த குளம் இதுவரை வற்றியதில்லை காரணம் இந்த குளம் ஊற்றுதண்ணீரால் ஆனது என குளத்தின் அருகில் உள்ளகிணறு போன்ற ஒரு பள்ளத்தை காட்டினார் பள்ளத்தை சுற்றி கற்களால் தடுப்புசுவர் போல் எழுப்பியுள்ளனர் தண்ணீர் அதிமாகவே ஊற்றாகி வாய்கால்போல் குளத்தில் போய் சேர்கிறது, இந்த இடத்திற்கு "கல்லூற்று ஊரணி " என பெயர் என்றார் நாங்கள் சென்றபோது மணி மதியம் 1மணி அந்த நேரத்தில் குளத்தில் சிலர் குளித்துகொண்டு இருந்தனர்,

    ஆழமர நிழல் தண்ணீரில் விழ அங்கு குளிப்பது ஆனந்தம் தான் டைவ் அடித்து குளித்ததை பார்க்கும் போது நமக்கும் குளிக்கவேண்டும் என ஆசைவந்தது, துண்டு கொண்டுவந்திருந்தால் நாமும் குளித்து இருக்கலாம். சிறுது நேரம் இருந்துவிட்டு மதுரை கிளம்பினோம். அர்ஷியா வீடு சென்று அவரது நூலகத்தில் இருந்து புத்தகம் ஒன்று எடுத்துகொண்டு விருதுநகர் திரும்பினேன்

.

செவ்வாய், பிப்ரவரி 26, 2013

பசுமை நடை பயணம் [கிரீன் வாக்]

 

                  கிரீன் வாக் 20 வரும் 24.2.13 காலை திருப்பரங்குன்றம் என அ.முத்துகிருஷ்ணன் அவர்களிடம் இருந்து sms தகவல் ஒரு வாரத்திற்கு முன்பே வந்துவிட்டது. இந்தமுறை விருதுநகரில் இருந்துஅதிக நண்பர்களை அழைத்து செல்லவேண்டும் என, வேலைபார்க்கும் நண்பர்கள், வெளிவட்டார நண்பர்கள் என பலரிடம் தகவல் கூற பலர் வருவதாக கூற எண்ணிக்கை 15 ஆனது. உடன் நண்பர் அ.முதுகிருஷ்ணன் அவர்களுககு இந்தமுறை 10 பேர் கலந்து கொள்வோம் என தகவல் கூறினேன்,ஆனால் 22ம் தேதி மாலை வருவதாக கூறிய நணபர்களுக்கு தகவல் கேட்ட போது அப்புறம் பார்க்கலாம் என கூற 15 எண்ணிக்கை என்னை சேர்த்து 4 ஆகி போனது,சிலர் போனை எடுக்கவே இல்லை,சரி இரண்டு பைக்கில் கிளம்புவோம் என முடிவு செய்தோம்.
          சனிகிழமை மாலை நண்பர் விமலன் நான் குடும்பத்துடன் 3பேர் கலந்து கொள்வதாக தகவல் கூறினார், அப்புறம் இரவு 7 மணிக்கு மேலும் இரண்டு பேர் குழந்தைகளுடன் வருவதாக போன் செய்ய எண்ணிக்கை 13 ஆனது.ஒரு கார் ,3பைக் என 24.2.13 ஞாயிற்றுகிழமை காலை 5.30 மணிக்கு புறப்பட்டோம்.
          அதிகாலை பனி காரணமாக பைக்கில் செல்வது கஷ்டமாக இருந்தது, திருப்பரங்குன்றம் அடைந்தபோது 6.40 மணி எங்களுக்கு முன்பே அ.முத்துகிருஷ்ணன் மற்றும் சில நண்பர்கள் அங்கு இருந்தனர்.[பேரா.சாத்தலிங்கம் ஐயா, பேரா.ரத்தினகுமார், பேரா.பெரியசாமிராஜா] வா நண்பா என அ.அர்ஷியா எங்களை வரவேற்றார்,மேலும் சிலர் வர சுமார் 80 பேர் மலைஏறினோம்

 

                     ஏற்கனவே ஒருமுறை இந்தமலையின் மேற்குபகுதியில் உள்ள சமணர்குகைக்கு பசுமைநடை சென்றுயிருந்தாலும், இநத முறை மலை உச்சியில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயம் அருகில் உள்ள சமணர் கல்வெட்டுகளை காண பயணம் ஆரம்பம்மானது. மலையேரும் வாசல் வரை வீடுகள் இருந்தன, அடிவாரத்தில் உள்ள பிள்ளையார் கோவிலை கடந்தவுடன் கானகம் செல்லும் பாதை ஆரம்பித்துவிடுகிறது, மழையில்லாததால் மரங்கள் இலைகள் உதிர்ந்து காணப்பட்டது. மலையின் பாதை செங்குத்தாக இருந்ததால் மூச்சு வாங்கியது உட்கார்ந்து உட்கார்ந்து தான் சென்றோம்.
             
                     இந்த பாதை மத ஒற்றுமை பாதை என்றும் கூறலாம் காரணம் மலை உச்சியில் ஒருபக்கம் காசிகோவில் இன்னொறுபக்கம் சிக்கந்தர் தர்கா என இருப்பதால் மலைபாதையில் முக்கால்வாசிதூரம் இந்துக்களும் முஸ்லீம்கலும் ஒன்றாகவே மலை ஏறுகின்றனர். மலையின் கிழக்கு பகுதியில் இருந்து இந்துகோவிலுக்கு சிமென்ட் படிக்கட்டுட்களுடன் பாதை அமைக்கபட்டு இருந்தாலும் அந்த பாதையில் யாரும் வருவதில்லை சிலநேரங்களில் அந்த பாதையில் வழிபறிநடைபெறுகிறது. எனவே இந்த வடக்குபாதையை தான் அதிகம் பயன் படுத்துகின்றனர்.
              சிறிது தூரம் ஏறியபின் பெரும் பாறையுடன் கூடிய திட்டுகாணப்படுகிறது. அங்கிருந்து அந்த நேரத்தில் மதுரை நகரின் மொத்த அழகையும் பார்ப்பது அழகு, ஆனந்தம் ஏற்படுத்தும் பரவசம்தான். குழந்தைகள் ஓடிபிடித்து விளையாடினர், ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாவிட்டாலும் அந்த நேரத்தில் ஏற்பட்ட சந்திப்பின் பயன்படுத்திகொண்டனர், அந்த இடத்தில் தர்காவுக்கு தனிபாதை பிரிந்தது. சிறிது தூரம் நடந்தோம், மலையின் கிழக்கு பகுதியில் இருந்து கோவிலுக்கு செல்லும் பாதையுடன் இணைகிறது. மலைஏற பாதுகாப்புடன் சுவர்கள் எழுப்பப்பட்டு படிகள் அமைக்கப்பட்டு இருந்தாலும் ஏறுவது கடினமாக இருந்தது.
          உச்சியில் ஒருமண்டபம் ஓய்வு எடுக்க பெஞ்சுகளுடன் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து தென்பகுதிகளை பார்த்தால் அற்புதகாட்சி, கீழே தென்குன்ற குடைவறை கோவில் வாசலில் உள்ள பார்க் மற்றும் வீடுகள் கண்மாய்கள் (தண்ணீர் குறைவாக) மற்றும் நிலையூர் ஊர் அழகாக காட்சியளித்தது. பாதையில் செல்லும் லாரிகள், பஸ்கள்,பைக் போன்றவை விளையாட்டு மொம்மைகளாக காட்சியளித்தது. திருப்பரங்குன்ற இரயில் நிலையத்தில் இருந்து நெல்லைநோக்கி சென்ற இரயில் அப்போதுதான் புறப்பட்டுகொண்டு இருந்தது. மேலிருந்து ஒரு பறவையின் பார்வையில் பார்த்தபோது குழந்தையின் மனநிலைக்கு எங்களைமாற்றிவிட்டது.

 
         
              அங்கிருந்து சிறிது இறக்கம் வலதுபக்கம் பாதுகாப்புசுவர், இடதுபக்கம் மேலேரும் நீண்ட பாறை இடையில் தண்ணீர்சுனை விழுந்துவிடாமல் இருக்க பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு அந்த இடம் பாதுகாப்பாக இருந்தாலும் குரங்குகளால் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது வழிபறி திருடர்கள் போல் எங்களிடம் உள்ள பை, தண்ணீர்பாட்டிலை பிடிங்கிசென்றது, ஒரு குழந்தையிடம் தண்ணீர் பாட்டிலை பிடுங்க அது தரமறுக்க அங்கு ஒரு அலறல் போராட்டம் நடந்தது, நாங்கள் கம்பை எடுத்து விரட்டி சென்றாலும் பயம் அறியா குரங்காக இருந்தது.முடிவில் குரங்கு வெற்றிபெற்று பாட்டிலை பிடிங்கி சென்றது, சுவர் மீது உட்கார்ந்து பாட்டில் மூடியை திறக்க முயற்சித்து முடியாமல் கீழே போட்டுவிட்டது.
                  இன்னொறு குழந்தயிடம் கேன்பாக்கை பிடிங்கி ஜிப்பை திறந்து பிஸ்கட்பாக்கெட்டை எடுத்துகொண்டு பையை கீழே போட்டுவிட்டு நல்லவராய் நடந்துகொண்டது. இப்படி குரங்குகளின் தொல்லை அதிகம். கோவில் முன் இடதுபக்கம் சுனைக்கு மேல் செங்குத்தான உயரமான பாறை அதில் சமணமுனிவர்களின் இரண்டு அழகான சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருந்தது. அறிவியல் வளர்ந்த இந்தகாலத்தில் கூட இந்த உயரத்தில் செதுக்குவது சிரமம் என எண்ணிபார்கையில் ஆச்சரியமாக இருந்தது.
        அதன் எதிரில் கலந்துகொண்டவர்கள் உட்கார போராசரியர். சாத்தலிங்கம் ஐயா அவர்கள் அந்த சிற்பங்களின் சிறப்பை அந்த பகுதி வரலாற்றை விளக்க மேலும் ஆச்சரிய தகவலாக இருந்தது, இன்று முருகன் கோவிலாக இருந்தாலும் திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தர் பாடல்களில் இது சிவன்கோவிலாக பாடல் பாடப்பட்டுள்ளதாக கூறி கோவில் அமைப்பை எடுத்துகூறினார்கள். இந்த மலைக்கு மேல் உள்ள சிக்கந்தர் தர்கா பற்றியும் கூறினார்கள், கோவில் பின்புறம் உள்ள இயற்கை குளம் மற்றும் அந்த இடத்தின் அழகை வார்த்தையால் வர்ணிக்கமுடியாது, பார்த்து உணர்ந்தால்மட்டுமே முடியும்.
     
      அழகை உண்ட மயக்கத்தில் மலையின் கீழே இறங்கினோம். எஸ்.அர்ஷியா அவர்கள் தன் அப்பாஷ்பாய் தோப்பு நாவலில் சிக்கந்தர் தர்கா பற்றி குறிப்பிட்டு இருப்பார், அதைபடிப்பவர்கள் அங்கு இரவு தங்கி இருந்த உணர்வை பெறுவார்கள், தர்கா பற்றி உண்மை வரலாற்றை அறிய அடுத்தமுறை அங்கு ஓர் பசுமைநடை போடவேண்டும் என அ.முத்துகிருஷ்ணன் கூறினார்கள், பேசிக்கொண்டும் அங்கிருந்த படி மதுரை அழகை ரசித்துக்கொண்டும்,கீழே அடிவாரத்திற்கு வந்தோம்,
           நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்தவர்கள் காலை உணவு வழங்க மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு பசுமைநடையின் பசுமையான நிணைவுகளுடன் வீடு திரும்பினோம்


.

சனி, பிப்ரவரி 16, 2013

இலக்கியவாதிகள் சந்திப்பு 2


         கடந்த வாரம் அம்மாவை பார்க்க திருமங்கலம் சென்றேன். அப்படியே எழுத்தாளர் நண்பர் திரு.ஷாஜஹான் அவர்களை பார்க்கலாம் என போன் செய்தபோது என்ன வேல்முருகன் ஆளையே காணாம் வாருங்கள் வீட்டில் தான் உள்ளேன் என கூற அவரை பார்க்க சென்றேன். அவரை சந்தித்தபோது நான் வெகு நாட்களுக்கு முன்கேட்ட வண்ணநிலவன் எழுதிய ”கடல்புறத்திலே” நாவல் மற்றும் நான் கேட்காத ”கம்பா நதி” நாவலையும் சேர்த்து தந்தார், சென்னை புத்தககண்காட்சிகு சென்றபோது உங்களுக்கா வாங்கினேன் என்றார்.
          மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. மற்றும் பல விஷயங்களை பற்றி பேசினோம். நண்பர் அர்ஷியா,மற்றும் முத்துகிருஷ்ணன் அவர்களை பார்தீர்களா என கேட்டார், மதுரை சென்று வெகு நாள் ஆகிவிட்டது என சொன்னேன்,, திருநகர் போவோம் என உடன் முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு போன் போட்டார், அவர் வேறு நிகழ்வில் இருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் வந்தது எழுத்தாளர்.பெருமாள்முருகன் திருமங்கலம் வந்துள்ளதாக உடன் அவரை சந்திக்க அவரது வீட்டுக்கு போனோம்.
          அதற்கு முன் இரண்டு விஷயங்களை கூற வேண்டும் நான் முதன் முதலில் சந்திக்க சென்ற அர்ஷியா மற்றும் கவிஞர்.சாம்ராஜ்(தனிதனியாக சந்தித்த நாளில்) அவர்கள் வீடுகளுக்கு போன போது முன்பின் அறிமுகம் ஆகாத நிலையிலும் வெகு நாள் பழகிய நண்பர்களை போல் பேசினார்கள் விடைபெற்று போகும் போது அவர்கள் பொகிஷமாக வைத்து இருந்த புத்தகங்களை படிக்க தந்தார்கள். நானே இப்படி தந்ததில்லை,ஆச்சரியமாக இருந்தது.

 
         அதேபோல் தான் ஷாஜஹான் அவர்களும், இவர் கவிஞர்,நாவலாசிரியர்,மொழிபெயர்ப்பாளர். என்விகடனில் ”எனது ஊர் திருமங்கலம்” என கட்டுரை எழுதியுள்ளார். வீடு முழுவதும் புத்தகம் புத்தகம் தான் இவர் நல்ல விமர்சகர் இவரை பற்றி எழுத்தாளர்களுக்கு தெரியும். இவரை மொழிபெயர்புக்கு பதிப்பகங்கள் பயன்படுத்திகொண்டால் பல அறிய நூல்கள் தமிழுக்கு கிடைக்கும்.
           பெருமாள்முருகன் இருவரையும் வரவேற்றார். நான் அவரை இப்போது தான் சந்திக்கின்றேன்.இருவரும் தமிழ் இலக்கிய போக்கு பற்றியும், பதிப்பகங்கள் பற்றியும் பேசினார்கள், நான் பார்வையாளனாக அமர்ந்து கேட்டுகொண்டு இருந்தேன்,இரண்டு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை, அன்றைய நாள் மறக்கமுடியாத நாளாக என் மனதில் பதிந்துபோனது.

செவ்வாய், ஜனவரி 29, 2013

'தவம் கலையும் காலம்' ஆய்வுநூல்


       நண்பரும், பேராசிரியரும்மான முனைவர்.த.கண்ணா கருப்பையா அவர்களால் எழுதப்பட்ட ஆய்வுநூல் 'தவம் கலையும் காலம்' இன்றைய தமிழ் பேராசிரியர்கள் பலர் இன்றைய இலக்கியங்களில் கவனம் செலுத்தாத நிலையில், இன்றைய இலக்கியவாதிகள் நூல்களையும், ஏற்கனவே இலக்கிய உலகில் வளம் வந்து பிறரால் மறக்கப்பட்ட இலக்கியவாதிகள் பற்றியும் படிப்பவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் நூலில் குறிப்பிட்டுள்ளார். 

               எஸ்.அர்ஷியாவின் "பொய்கைக்கரைப்பட்டி" நாவல், பாண்டியகண்ணனின்  'சலவான்' நாவல் ( விருதுநகரில் நடந்த உண்மை சம்பவம், மறைக்கப்பட்ட நிகழ்வுகள் நாவலாக்கப்பட்டுள்ளது), கீரனூர் ஜாகீர்ராஜாவின் மீன்குகை வாசிகள் மற்றும் வடக்கே முறி அலிமா நாவல்கள் பற்றியும், அரவாணிகளின் உண்மை முகத்தை காட்டும் அவன்- அவள்- அது, " மூன்றாம் பாலின் முகம்" நாவல்கள் பற்றியும் நாம் படித்து இருந்தாலும், அதில் உள்ள அதில் உள்ள கருத்தின் ஆழத்தை கட்டுரை மூலம் நமக்கு உணர்த்தி மீண்டும் அந்த நாவல்களை வாசிக்க தூண்டும் நிலையை ஏற்படுத்துகிறார்.
       
        குயிலன் பற்றியும், ரா.சிதம்பரம் அவர்களை பற்றிய கட்டுரைகள் படிக்கும் போது மறக்கப்பட்ட. மறைக்கப்பட்ட இரண்டு உன்னத இலக்கியவாதிகளை பற்றி தெரிந்து கொள்ளமுடிகிறது. ரா.சிதம்பரத்தின் சிறுகதைகள் இப்போது கிடைக்குமா என தெரியவில்லை. நாவல்கள் திரைப்படமாக்கப்பட்ட பட்டியலும், அவைகள் படமாக்கப்பட்டபோது நடத்த நிகழ்வுகளையும் கட்டுரைகள் படிக்கும் போது அறிந்து கொள்ளமுடிகிறது.
\          ஆய்வுகட்டுரைகள் கல்லூரிகளில் சமர்க்கிப்படும் போது நடக்கும் நிகழ்வுகளை ஆழமாகவும், கவலையுடனும் சுட்டிகாட்டியுள்ளார். கல்லூரிமாணவர்கள் மட்டுமல்ல இலக்கிய ஆர்வலர்களும் படிக்கவேண்டிய நூல். தொடர்ந்து நல்லபடைப்பாளர்களை இனம் கண்டு மாணவர் சமுதாயத்துக்கு எடுத்துசொல்வதுடன் அவர்களின் செயல்பாடுகளை இலக்கியவாதிகளும், ஆர்வலர்களும் அறிந்து கொள்ள இது போன்ற நூல்கள் தங்களிடம் இருந்து வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.


நூல் வெளியீட்டு விழா 26.1.13 மாலை மதுரையில் வடக்குமாசி வீதியில் மணியம்மை மழலையர் பள்ளியில் நடைபெற்றது. சிறப்பானதொரு நிகழ்வாக இருந்தது. .ஐந்துபேர் நூலை வாழ்த்தியும், ஐந்துபேர்கள் நூலைபற்றிய விமர்சனம் செய்தும் நடைபெற்ற கூட்டம் அருமையாக இருந்தது. எழுத்தாளர்கள் எஸ்.அர்ஷியாவும், பாண்டியகண்ணன் அவர்களை அழைத்து பேசசெய்து சிறப்பு செய்ததும், குயிலன் மற்றும் ரா.சிதம்பரம் அவர்களின் குடுபத்தினர்களை அழைத்து சிறப்பு செய்ததும் பாராட்டுதலுக்குரியது.

சனி, ஜனவரி 19, 2013

சதுரகிரி மலை பயணம் பாகம் 1

அருள்மிகு சுந்தரமகாலிங்கம்

       மார்கழி அம்மாவாசை அன்று மகாலிங்கம் கோவிலுக்கு போகிறேன் என நண்பர்        கூற         நானும் வருகிறேன் எனகூறினேன்.
  10. 1. 13 வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு விருதுநகரில் இருந்து எனது
பைக்கில் புறப்பட்டு 51 கி.மீ பயணம் செய்து சதுரகிரி மலையின் அடிவாரம்,
தாணிப்பாறைக்கு இரவு 9.30க்கு வந்தோம்.
          அந்த நேரத்திலும் அங்கு அன்னதானம் வழங்கி கொண்டிருந்தனர், ஆடி
அம்மாவாசையெனில் அந்த இடத்தில் நிற்க இடமில்லாத அளவு பக்தர்கள் கூட்டம்இருக்கும்,   ஆனால்   இன்று   ஐம்பதுபேருக்கும்       குறைவானவர்களே அங்கு இருந்தனர். அடிவாரத்தில் டார்ச்லைட் இருபது ரூபாய்க்கு விற்றுகொண்டிருந்தனர்,
 7மலைகடந்து    ( 11 கி.மீட்டர் )      சுந்தரமகாலிங்கம் அடைய குறைந்தது 3மணி நேரமாகும்    அதுவரை இருட்டில் தான் நடக்க வேண்டும், என்பதால் வீட்டில் இருந்து டார்ச்    கொண்டு வந்து விட்டோம்.
  மார்கழி மாதம் பனிவிழும் நேரம் அம்மாவாசை இருட்டு நாங்கள் இருவர்
மட்டுமே மலை ஏறினோம், பத்து நிமிடத்திற்கு முன் 4 பேர் சென்றுள்ளனர்
வேகமாக சென்றால் அவர்களுடன் இணைந்து கொள்ளலாம் என ஒரு சாது கூறினார்.
      டார்ச் வெளிச்சத்தில் மலை பாதயில் நடந்தோம், சிறிது தூரம் சாதாரண
பாதையாக இருந்தது பத்து நிமிட நடைக்கு பின் வனக்காளி கோவில் வந்தது
அருமையான இடம் இயற்கையை ரசிக்க வேண்டிய இடம்
அந்த கோவிலில் இரவு 10மணிக்கு அன்னதானம்  வழங்கிகொண்டிருந்தனர், சுட,சுட, ரசம் சாதம் பொறியலுடன் சாப்பிட்டு விட்டு பயணத்தை தொடர்ந்தோம்.

             நான் குளிராக இருக்கும் என ஸ்வட்டர் அதன்மேல் சட்டை அணிந்து
இருந்தேன், நண்பரோ மேல் சட்டையை கழட்டி வெற்றுடம்புடன் புறப்பட்டார்,
குளிரபோகுது என்றேன் அவர் சிரித்துக்கொண்டே மலையில் ஏற ஏற வியர்க்கும்
என்றார், அந்த இடத்தில் இருந்த கடினமான பாதை ஆரம்பித்து விடுகிறது,
வழுக்குபாறை, செங்குத்துபாறை என டார்ச் லைட் வெளிச்சத்தில் கடந்தோம் மலைஏறும்  போது எனக்கு மூச்சு வாங்கியது அப்போது உட்காரபோவேன் நண்பர்   உட்கார விடமாட்டார் பாறையில் சாய்ந்து நில்லுங்கள்,    மூச்சுவாங்குவது     சரியானபின் நடப்போப் உட்கார்ந்தால் பின் நடக்கும் போது கால்வலிக்கும்என்பார், பத்துநிமிடம் நடப்பது இரண்டுநிமிடம் ஓய்வு என பயணம் தொடர்ந்தது,

       ஒரு மணி நேர நடையில் என் ஸ்வட்டர், சட்டை வியர்வையால் நனைந்து விட்டது,நானும் மேல் சட்டையை கழட்டிவிட்டேன்.
  அடுத்த ஒரு மணிநேர பயணம் மிக கடினமாக இருந்தது. வானில் நட்சத்திரங்கள்  கூட தெரியாத அளவு மரங்கள் உயரமாகவும் அடர்த்தியாகவும் இருந்தது,     சிலஇடங்களில் இடது பக்கம் பெரியபள்ளம் காணப்படுகிறது விழுந்தால் பிழைப்பது கடினம் ஜாக்கிரதையாக நடக்கவும் என நண்பர் கூறிக்கொண்டே வருவார், ஐந்து வருடமாக மாதம்மாதம் அம்மாவாசைக்கு வருகிறார் ஒன்னரை மணிநேரத்தில் செருப்புபோடாமல் கோவிலுக்கு சென்றுவிடுவார் எனக்கா அவரும் மெதுவாக நடந்துவந்தார்.

     இரண்டு மணிநேரத்திற்கு பின் பெரிய பசுகிடை பகுதிக்கு வந்தடைந்தோம்,  இயற்கையாகவே பெரிய பாறைகளால் ஆன சமவெளி நூறு பேர் கூட
படுத்துக்கொள்ளலாம், காட்டில் மாடு மேய்பவர்கள் மாடுகளுடன் ஓய்வு
எடுக்கும் பகுதி என்பதால்  பெரிய பசுகிடை என பெயராம், இடமும் அருமை
காலைநீட்டி படுத்தேன் உடம்பில் வடியும் வேர்வை மீது
மார்கழிபனி உடம்பில் படும் போது உடலில் ஜஸ் வைத்து ஒத்தடம் தருவது போன்ற ஆனந்தம்,  டார்ச் லைட்டை அணைத்து விட்டு அந்த இருளில் யாருமில்லா கானகத்தில்படுத்துகொண்டே வானத்தில் உள்ள நட்சத்திரங்களை பார்ப்பது ஆனந்தம் ஆனந்தமே,பக்கத்தில் இருப்பவர் கூட தெரியாத அளவு இருள், கானகத்தில் எழும் சப்தம் கூட இல்லை,ஆனால் மனதில் கொஞ்சம் கூட பயம் ஏற்படவில்லை  எல்லாம் சுந்தரமகாலிங்கம் அருள்தான்.

     பத்துநிமிட ஓய்வுக்கு பின் புறப்பட்டோம் அரைமணி நேரம் பயணம் சின்ன
நாவல் ஊற்று
8.6.2013 அன்று சுந்தரமகாலிங்கம் மலை சென்றபோது வறண்டு காணப்பட்ட நாவல் ஊற்று
பசுமடை வந்தது அங்கு'நாவல்ஊற்று' உள்ளது தண்ணீர் கலங்கலாக இருந்தாலும்சுவையோடு இருந்தது. இந்த நீரை குடித்தால் சக்கரைநோய் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது.  3மணி நேர பயணத்திற்க்கு பின் இரவு 12.30 க்கு         மகாலிங்கம் சன்னதியைஅடைந்தோம். கோவிலும் சுற்றியுள்ள பகுதியும் இருட்டாக இருந்தது.ஜெனரேட்டர் மூலமே அங்கு மின்சாரவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அருள்மிகு.சுந்தரமகாலிங்கம் சன்னதி

         அதனால் காலை 5 மணிக்கு முதல் பூஜை ஆரம்பிக்கும் போது தான் ஜெனரேட்டர் போடுவார்கள்.நாங்கள் சன்னதி வாசலில் படுத்தோம், குளிரின் கடுமையை அப்போதுதான்   உணர்ந்தேன், கொண்டுபோன துண்டு போர்வையாக பொத்திபடுத்தாலும்    குளிர்தாங்கமுடியவில்லை, ஆனால் நடந்தவந்த களைப்பு தூக்கத்தை   ஏற்படுத்தியது.
     காலை 3.30 இருக்கும் நண்பர் எழுப்பிவிட்டார், மகாலிங்கம் கோவிலுக்கும்
மேல் சந்தனமகாலிங்கம் சன்னதியில் பூசை ஆரம்பித்துவிட்ட மணி ஓசை கேட்க  அங்கு போவாம் என அழைத்து சென்றார், மரத்துபோன கால்கள் எட்டுவைக்க    சிரமப்பட்டாலும் அங்கு சென்று பூசையை பார்த்தோம், அந்த குளிர்நேரத்திலும் பலர் கலந்து கொண்டனர், சக்கரைபொங்கள் பிரசாதம் தந்தனர் சுவையாக இருந்தது.
    அதன் பின் சுந்தரமகாலிங்கம் சன்னதி வந்தோம் அங்கும் பக்தர்கள் தந்த
இளநீர்,விபூதி,மஞ்சல், பஞ்சாமிருதம் பொருட்களை வைத்து அபிஷேகம் செய்து  அதன் பின் மலர்அலங்காரம் செய்து பூசை நடந்தது .   ஆனந்தமான தரிசனம் ஒருமணிநேரம் நடந்தது.அபிஷேக விபூதி அனைவருக்கும் வழங்கினார்கள்.
 காலை6 மணிக்கு பூசை முடிந்தவுடன் அந்த பகுதியில் அன்னதானம் ஆரம்பமாய்     விடுகிறது,  இரவு வரை அன்னதானம் நடைபெறுமாம்.காலை சுடசுட உப்புமா சாப்பிட்டுவிட்டு,  காலை 7மணிக்கு கீழே இறங்க ஆரம்பித்தோம்,
       இரவு ஆள்நடமாட்டம் இல்லாதபாதையில் சாரைசாரையாக பக்தர்கள் கூட்டம் மலை ஏறிகொண்டிருந்தனர்.
ஏறும்போது மூச்சு இறைத்தது எனில் கீழே இறங்கும் போது கால் அதிக வேதனை  தந்தது, ஏறுவதை விட மலை  இறங்குவது கடினமாக இருந்தது, இறங்கும் போது, பாறையிடுக்கில் கால் மாட்டிகொள்ளாமல் இறங்கவேண்டும். ஏறுபவர்கள் வழிவிடாவிட்டால் சிரமம்தான் காரணம் சில இடங்கள் பாதை குறுகி உள்ளது.
பயணகட்டுரையாளர்
மலையின் மொத்த அழகையும் ரசித்தபடி அடிவாரத்தை அடைய காலை9.30மணி. அதற்கு முன் வழியில் பல இடங்களில் சுக்குமல்லி காபி வழக்கினர், ஒரு இடத்தில் மலைகிழங்கு மூலிகை டீ போட்டு விற்பனை செய்கின்றனர், வாங்கி குடித்தோம் அருமையான சுவை களைப்பு போன இடம் தெரியவில்லை.
 அடிவார பாதை முழுவதும் காவிஉடை பிச்சைகாரர்கள். சிலர் அவர்களிடம்
பிச்சைபோட்டு விபூதி பூசிக்கொண்டனர். அடிவாரத்தில் சப்பாத்தி, பொங்கல்
அன்னதானம் நடைபெற்றது. பொங்கல் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டோம். அரசுபேருந்து வசதிகள் அதிகமாகவே உள்ளது.{விழா காலங்களில்}
மறக்கமுடியாத அனுபவம். 
          பயணம் மீண்டும் தொடரும் ...








திங்கள், ஜனவரி 14, 2013

ஒற்றைநட்சத்திரம்

ஒற்றைநட்சத்திரம் அணுஉலையால் ஆபத்து என்று எந்த மாநிலமும் இடம் தராத நிலையில் தமிழ்நாட்டில் தான் தமிழ் உணர்வு பேசிக்கொண்டு என இருபிரிவுகளாய் நிற்பதை அறிந்து இடிந்த கரையில் இடம் வாங்கி அணுஉலையை நிறுவி விட்டனர் இருபது ஆண்டுகளாய் ஆனாலும் மின்சாரம் இதுவரை உற்பத்தியாகவில்லை அணு உலை ஆபத்தை அரசியல் கட்சிகள் தெரிந்து இருந்தும் வாய்மூடி மெளனமாய் நின்ற போதும் ஒற்றை ஆளாய் அப்பகுதி மக்களுக்கு ஆபத்தை உணர்த்திட்டாய் இன்று, அந்த பகுதி மக்களுக்கு சுப.உதயகுமார் என்பவர் மட்டுமே நம் வாழ்வியலை காப்பாற்ற போராடும் வீரனாய் தெரிகின்றாய் அதனால் நீ எங்களுக்கு இருண்ட அரசியல் வானில் ஒற்றைநட்சத்திரமாய் தெரிகின்றாய்...

ஞாயிறு, டிசம்பர் 02, 2012

காலத்தின் குரல்


இன்று நூலகத்தில் இருந்து "காலத்தின் குரல்" கவிஞர்மீராவின்முதலாம்
ஆண்டுநினைவஞ்சலி நாளில் வெளியான நூலைபடித்தேன்.

        தமிழகத்தின் முக்கிய இலக்கியவாதிகள் அவருடன் பழகிய நினைவுகளை பதிவு செய்திருந்தார்கள். நூலை படிக்கபடிக்க மீரா அவர்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொள்ளும்வாய்ப்பைபக்கத்தில்இருந்தும்தவறவிடப்பட்டுள்ளேன்.

      அவரின் அன்னம் விடு தூது இதழ் வெளிவந்த போது வாங்கிபடிப்பேன், மற்றவர்கள் குமுதம்,ஆனந்தவிகடன், கல்கி வாங்கிபடிக்கும் போது நான் செம்மலர், அன்னம் விடுதூது வாங்கி எப்போதும் கையில் வைத்து திரிவேன்.

   அப்போது இப்போது உள்ள குமுதம் இதழ் அளவில் 2 புத்தகம் வெளிவந்தது. அப்போது மதுரையில் போக்குவரத்துக்கழகத்தில் அப்பிரண்டிஸ் பார்த்த நேரம்.

அச்சமயம் கரிசல்காட்டு கதை வெளியிட்டார்கள்வாங்கி படித்தேன் வியந்தேன்  அதன்பின்தான் கி.ராஜ்நாராயணன் எல்லோரும் அறியும் நிலை ஏற்பட்டது என எண்ணுகிறேன்.

          அப்பிரண்டிஸ்முடிந்து சிவகங்கையில் 1986 ல் மருதுபாண்டியர் போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்ப பணியாளராக சேர்ந்தேன். தினசரி மதுரையில் இருந்து சிவகங்கை சென்றுவருவேன். காலை 6.20க்கு சிவகங்கை பஸ்,  பலநாட்களில் அந்த நேரத்தில் எங்களுடன் மீரா அவர்களும் சிவகங்கை பயணம் செய்வார் கையில் பிரிப்கேஷ் சூட்கேஷ் வைத்து இருப்பார் சிலநேரம் இடம் கிடைக்காதபோது நான் எழுந்து இடம் தந்துள்ளேன். அப்போது புன்னகைமட்டுமே செய்வார்,

அவரது அகரம் அச்சகத்திற்கு 2முறை சென்றுள்ளேன்.நீளமான வெரன்டாவில் அவர்கள் வெளியிட்டநூல்களை பார்வைக்கு விற்பனைக்காக வைத்திருப்பார்கள், எனது கூச்ச சுபாவத்தால் மீராவை தள்ளி இருந்தே பார்த்துவியந்துள்ளைன்.

3 வருடத்தில் பணி இடம்மாறியதால் என் தடம்மாறிவிட்டது. இந்த நூலை படித்தபோது அவரின் நினைவு என்மனதில் வந்து சென்றது. அவசியம் அடுத்தமுறை காலத்தின் குரல் சொந்தமாகவாங்கவேண்டும்.  அவரின் கவிதைஒன்று

 " என்எழுதுகோல்வெறும்எழுதுகோல்அல்ல!
   தேசம்தழுவும்பொதுவுடமைக்கு
   வரவேற்புரை எழுதும் பொதும்
   தேகம் தழுவும்
    உனக்கு என் தனியுடமைக்கு
   வாழ்த்துரை எழுதும் போதும்
    என் எழுது கோல் வெறும் எழுதுகோல் அல்ல
  
   .

செவ்வாய், அக்டோபர் 23, 2012

வேதனைக்குரல்


தன் குழந்தைக்கு டாட்டா காட்டிவிட்டு புறப்பட்ட அப்பாவை மழலை குரலில் சாக்லெட்வாங்கிவாப்பா என சொல்ல மகிழ்வோடு சரிப்பா என பைக்கில் புறப்பட்டான் குமரன்.

தொடர்மழையால் மண்பாதை நசநசத்து போய் பைக் ஓட்டுவது சிரமமாக இருந்தது, சிறிது தூரம் தான் அதன்பின் தார் ரோடு வந்துவிடும், தார்ரோடும் மழைகாரணமாக குண்டும் குழியுமாக இருப்பதும், தண்ணீர்தேங்கி இருப்பதால் டம்டம் என சப்ததுடன் ஒட்டவேண்டியுள்ளது,

சிறிது தூரம் சென்றவுடன் நான்கு வழிசாலை வர சர்வீஸ் ரோட்டில் இடதுபக்கம் திருப்பி வண்டியை வேகமெடுத்தான். கலெக்டர் அலுவலகம் வந்து வலதுபக்கம் திரும்பி நான்குவழி சாலை கடந்து ஊருக்குள் நுழையும் பாதையில் செல்லும் போது எதிரில் ஷேர்ஆட்டோ ரோட்டின் மையத்தில் வெள்ளை  கோட்டை   ஒட்டியே வந்தது.  இடதுபக்கம்  இடம்  இருந்தும்  ஏன்
இப்படி  வண்டியை ஓட்டுகின்றனர் இவர்களை சைடுவாங்குவதும் சிரமம் என மனதுக்குள் திட்டிகொண்டே வரும் போது இரயில்வே கிராஸிங்யை கடந்து வேகமாக வந்த மணல் லாரி ஹாரன் அடித்துக்கொண்டே ஷேர்ஆட்டோவை முந்த ஷேர் ஆட்டோ அப்போதும் இடதுபக்கம் ஒதுங்காமல் மையபகுதியில் செல்ல அதையும் மீறி லாரி சைடுவாங்க எதிரில் ஒரமாய் வந்த குமரன் பைக்கோடு தூக்கி எறியப்பட்டான்.






அடிபட்டவன் நிலையை கண்டவுடன் லாரி டிரைவரும் கிளினரும் ஓடிவிட கொஞ்சம் ஒதுங்கி இருந்தால் விபத்தை தவிர்த்து இருக்க வேண்டிய ஷேர்ஆட்டோவோ அதில் பயணம் செய்தவர்களோ கவலைபடாமல் சென்றுவிட்டனர்.

சப்தம் கேட்டு சிறிது தூரத்தில் உள்ள டீ கடையில் இருப்பவர்கள் ஓடிவந்து 108 க்கு போன் செய்து ஆஸ்பத்தரியில் சேர்த்தனர்.

ஆஸ்பத்திரியில் இருந்து எங்கள் அலுவலகத்துக்கு தகவல் வந்தவுடன் நானும் நண்பர்களும் ஆஸ்பத்தரிக்கு வந்த போது ஐசியு வார்டு வாசலில் குமரன் மனைவி உறவினர்களோடு சோகமாக உட்கார்ந்திருக்க குமரனின் குழந்தை நடந்த சோகம் அறியாமல் விளையாடி கொண்டிருந்ததை நான் உட்பட அங்கு உள்ளவர்கள் சோகமாக பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஐசியு கதவு திறக்கும்போதெல்லாம் வெளியே காத்து இருக்கும் உறவினர்களிடம் ஒருவித பயம் கலந்த பதட்டம்ஏற்படும்,அவர்அவர் தனக்கு பிடித்த கடவுள் அல்லது குலதெய்வத்தை நினைத்து பால்குடம் எடுக்கிறேன் மொட்டை போடுகிறேன் என வேண்டும் வேதனைக்குரல்
அங்குள்ளவர்களுக்கு கேட்கவே செய்தது,

அப்போது கதவு திறந்து வெளிவந்த டாக்டர் குமரன் என அழைக்கவும் அவர் மனைவியும் அவரது உறவினர்களும் டாக்டரை நோக்கி ஓடினர் சிறிது நொடியில் ஐயோ என அலறல் அங்கு எல்லோரையும் திடுக்கிடவைத்தது. மார்சுவரி அறைக்கு அழதுகொண்டே செல்லும் உறவினர்களுக்கு பின்னே குமரனின் குழந்தையை தூக்கிகொண்டே சென்றது மனம்வலித்தது,

குமரனின் நட்பை எண்ணிபார்த்த போது அழுகைதான் முட்டிக்கொண்டு வந்தது, உடலை பெற்றுக்கொண்டு வேனில் செல்லும் போது விபத்து நடந்த இடத்தை கடக்கும் போது ஒரு ஷேர்ஆட்டோ ரோட்டின் மையத்திலேயே சென்றதை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.