கிரீன்வாக்22 கீழவளவு 12.5.13 ஞாயிற்றுகிழமை என அ.முத்துகிருஷ்ணன் அவர்களிடம் இருந்து குறுந்தகவல் வந்தவுடன், விருதுநகர் நண்பர்களிடம் தகவல் கூற ,அன்று முகூர்த்ததினம் என ஒரு சிலரும், காலை 4 மணிக்கு புறப்படவேண்டுமா என ஒரு சிலரும் வரவில்லை என்றனர். கடந்தமுறை விருதுநகரில் இருந்து 14 பேர் கலந்துகொண்டோம்., இந்தமுறை 4 பேர் மட்டுமே புறப்பட்டோம்.
மிக கண்டிப்பாக காலை 6 மணிக்கே வந்துவிடவும் என கூறியதால், விருதுநகரில் 4.30 மணிக்கு பஸ் ஏறினோம், 6.15 மணிக்கு மாட்டுதாவணியில் இறங்கினோம். பேருந்துநிலையத்தின் எதிர்புறம் சென்றபோது பசுமைநடை ஆர்வலர்கள் பலர், பேராசிரியர்.சாந்தலிங்கம் ஐயா, மற்றும் அ.முத்துகிருஷ்ணன் ஏற்கனவே வந்து இருந்தனர்.
இது வரை சென்ற பசுமைநடை மதுரையில் இருந்து 15 கி.மீ க்குள் தான் இருக்கும், இந்த முறை 45 கி.மீ தள்ளி உள்ள கீழவளவு மலை, கிரானைட் மாபியா கும்பலால் உடைக்கப்பட்ட மலைகளின் குவியல் நிறைந்த பூமி, இன்றும் வெட்டிய கிரானைட் கற்களை மதிப்பிடமுடியாமல் திணரும் இடம்.அங்கு ஓர் பசுமைநடையா.?
45 கி.மீ தள்ளியுள்ளதால் பைக்கில், காரில் வந்த நண்பர்களை வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு பேருந்தில் அழைத்து செல்வது என முடிவு செய்து பேருந்தும் , வேனும் ஏற்பாடு செய்து இருந்தார் அ.முத்துகிருஷ்ணன். இன்னும் வராதவர்களை போனில் தொடர்புகொண்டிருந்தார். நானும் நண்பர் எஸ்.அர்ஷியா இன்னும் வரவில்லையை என போன் செய்தபோது ஒரு திருமணத்திற்கு செல்லவேண்டியுள்ளதால் வர இயலவில்லை என்றார். அவசியம் கலந்து கொள்வதாக கூறிய கவிஞர். பேனா மனோகரன் அவர்கள் எனக்கு முன்பாகவே அங்கு வந்துயிருந்தார்.
நண்பர்களுடன், குடும்பத்துடன் என பலரும் இணைந்துகொண்டிருந்தனர். காலை 6.30 ம்ணிக்கு குரு மெட்ரிக் பள்ளியை சேர்ந்த பேருந்தும்,வேனும் வந்தது. இன்றைய பசுமைநடைக்காக இலவசமாக தந்து உதவினார்கள், பள்ளியின் தாளாளர், திரு.குகன் அவர்கள், விபரத்தை அ.முத்துகிருஷ்ணன் கூற, திரு. குகன் அவர்களுக்கு பாராட்டுதலை தெரிவிக்கும் விதமாக கைதட்டி தங்கள் மகிழ்வை தெரிவித்தனர்.
காலை 6.40 மணிக்கு புறப்பட்டோம். பசுமைநடை ஆர்வலர்கள் ஒரே பேருந்தில் பயணம் செய்தது ஒரு சமத்துவபயணமாகவே இருந்தது. ஆங்கிலநாளிதழ், தமிழ் நாளிதழ் நிருபர்களும் எங்களிடன் வந்தனர். மேலூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் கீழவளவு உள்ளது. மேலூர் தாண்டியவுடன் கீழவளவு வரை ரோட்டின் இருபக்கமும் கழிவு கிரானைட் கற்கள் கொட்டப்பட்டுள்ளது. கீழவளவு தாண்டியவுடன் வலதுபக்கம் ரோட்டில் இருந்து 300 மீட்டர் தள்ளி பஞ்சபாணடவர் மலை உள்ளது.7.30 மணிக்கு மலையை அடைந்தோம்.
மலையில் சிறிது தூரம் ஏறியவுடன் சமணர் படுக்கை குகை காணப்படுகிறது. அந்தகுகையின் பாறை இயற்கையாகவே பம்பரம் போன்ற அமைப்பில் உள்ளதால் சுமார் 30 பேர் வட்டமாக படுக்கும் விதமாக படுக்கைகள் வழவழப்பாக அமைக்கப்பட்டுள்ளது., இந்த சமணபடுக்கைகள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டவை. அந்த இடங்களில் உட்கார்ந்து பார்த்தால் குளுகுளு என காற்று அடித்தது, படுத்தால் தன்னை மறந்து தூங்கலாம். மழை பெய்தால் வழியும் தண்ணீர் படுக்கையை நனைக்காமல் செல்ல வாய்க்கால் போன்று காடி வெட்டியுள்ளனர்.
பசுமை ஆர்வலர்கள் அங்கு அமர்ந்தோம்.பேராசிரியர். சொ.சாந்தலிங்கம் ஐயா அவர்கள் இந்த இடங்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார். இந்த இடம் 2500 வருடங்களுக்கு முந்தி உருவாக்கப்பட்டுள்ளது, 1903 ம் ஆணடு திரு.வெங்கோபராவ் என்பவரால் இந்த இடம் கண்டரியப்பட்டது. இக் குகையின் மேல் உள்ல பாறையில் இரண்டு தீர்த்தங்கரர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது, அதன் கீழ் தமிழ்பிராமிய எழுத்துக்கள் தலைகீழாக இடவலமாக பொறிக்கப்பட்டுள்ளது. நேராக நின்று பார்த்தால் தலைகீழாக உள்ள எழுத்துக்கள், படுத்துக்கொண்டு பார்த்தால் படிக்கும் விதத்தில் உள்ளது,
படுக்கைகளின் கிழக்கில் உள்ள பாறைகளில் 6 தீர்த்தங்கரர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இப்போது உள்ள ரெசிடன்சி பள்ளியை போன்று இங்கு மாணவர்கள் தங்கி கல்வி கற்றுள்ளனர்.
தென் தமிழகமே சமணசமயத்தில் இருந்துள்ளது. அவர்கள் கல்வி அறிவை கற்றுதந்துள்ளதால் தான் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள், சீவகசிந்தாமணி போன்றவை படைக்கப்பட்டுள்ளது, சமணம் அகிம்சையை வழியுறுத்தியதால் மற்ற சமயங்கள் சமணர்களை கொடுமைபடுத்தியபோதும் இவர்கள், ஒதுங்கி போய்விட்டனர். மதுரையை சுற்றி சமணர் மலைகள் இருந்தும் இப்போது யாரும் இல்லை, தமிழகத்தில் வந்தவாசி பகுதியில் இப்போதும் சமண சமயத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்துவருகின்றனர்.
நாங்கள் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து மலையின் வடக்கு பக்கம் பார்த்தபோது கண்ணுக்கு எட்டியதூரம் வரை பசுமை பசுமை என தென்னை மரங்களும், வயல்வெளிகளும் தான், கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்சியை தந்தது, அங்கிருந்து மேலும் நடந்து மலையின் உச்சிக்கு சென்ற போது நான்கு பக்கமும் பார்க்கமுடிந்தது,
மலையின் வடக்கு பகுதியை பார்த்தபோது பச்சை ஆடை உடுத்தியது போல் பசுமையை ரசித்தவாரே மலையின் தென் பகுதியை பார்த்தபோது அதிர்ச்சிதான் கண்ணுக்கு எட்டியதூரம் வரை கிரானைட் பாறைகளின் அணிவகுப்புதான், மைசூர்பாக்கை வெட்டி வைத்தது போன்று வயல்வெளிகள், கண்மாய்கள் என நிலம் தெரியாதயளவு ஒரே பாறை துண்டுகள், கிரானைட் குவியல்கள். கிழக்கே தூரத்தில் தெரிந்த ஒரு மலை பாதியாக காணப்பட்டது. கீழவளவு தென்பகுதியில் ஒரு மலைகுன்று காணப்பட்டது, அதில் ஒரு கோவிலும் இருந்தது ஆனால் இன்று அது கிரானைட் கற்களாக மாறி மலை காணாமல் போய்விட்டது.
மலைகள் உடைக்கப்பட்டு அடுக்கப்பட்ட காட்சியை பார்த்து கலங்கிநின்ற பசுமைஆர்வலர்கள் மத்தியில் அக்னி குஞ்சுகள் என்ற தன் கவிதையை கணீணென்ற குரலில் கவிஞர்.பேனாமனோகரன் அவர்கள் வாசிக்க, கவிதையின் பொருளும் அந்த இடமும் பொருந்தி போக பசுமைஆர்வலர்கள் மனதில் அந்த இடம் மறக்கமுடியாத அனுபவபதிவை பதித்து சென்று இருக்கும்.
மலையின் அடிவாரத்தில் அழகிய ஆலமரம் அங்கு காலை உணவை சாப்பிட்டுக்கொண்டே சாலையில் செல்லும் வாகனங்களை பார்த்துகொண்டிருந்தோம்.அந்த சாலையில் தினசரி ஆயிரம் பேர் கடந்துகொண்டிருக்கின்றனர். இந்த மலையையும் பார்ப்பார்கள்.. ஆனால் இந்தமலையின் சிறப்பை அறிந்து இருக்கமாட்டார்கள், நானும் இந்த வழியா திருப்பத்தூர், காரைக்குடி சென்று இருக்கின்றேன் ஆனால் பசுமைநடை மூலம் இப்போது தான் அறிந்து நேரில் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தென்றலின் கையை பிடித்து கொண்டு நந்தவனத்தில் நடந்தைபோல் எழுத்தாளர்களுடன், கவிஞர்களுடன் மலைஏறிய அனுப்வம், சித்திரைக் காரனுடன் மலையில் உலாவிய அனுபவம் என மறக்கமுடியாத பசுமைநடையாகவே கீழவளவு பயணம் அமைந்தது.
அருமையான பதிவு.
பதிலளிநீக்குஅருமையான பயணம், தமிழ் வரலாற்றையும், மலைகளின் இன்றைய நிலையையும் அறிந்து கொள்ள முடிந்தது. பதிவிட்டமைக்கு நன்றி தோழரே.
பதிலளிநீக்குமே.இளஞ்செழியன் அவா்களுக்கு நன்றி,தங்களுடன் பசுமை நடையில் கலந்து காெண்டது மகிழ்ச்சி
பதிலளிநீக்குகீழவளவு பசுமைநடையில் தங்களுடன் கலந்து கொண்டது பெருமகிழ்வைத் தருகிறது. தொன்மையான இடங்களை நோக்கிய பயணம் இனிதே தொடரட்டும்.
பதிலளிநீக்கு- அன்புடன்,
சித்திரவீதிக்காரன்.
சித்திரவீதிக்காரன் அவர்களுக்கு,
பதிலளிநீக்குபசுமைநடை நட்புவட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது, தொடர்ந்து பயணிப்போம்.
நல்ல பயண அனுபவக்கட்டுரை.படங்கள் தனி சேதி சொல்லிச்செல்கிறதாய்.
பதிலளிநீக்கு