சனி, அக்டோபர் 18, 2014

பாறைத்திருவிழா



                                              பாறைத்திருவிழா
        நாற்பதாவது பசுமைநடையை கொண்டாடும் விதமாக பாறைத்திருவிழா சமணர்மலை அடிவாரத்தில் 28.09.14 ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
     40 வது பசுமைநடையை சிறப்பாக கொண்டாடவேண்டும் என பசுமைநடை ஒருங்கினைப்பாளர்கள் முடிவு செய்து, விழாவிற்கான பெயர், மற்றும் இடம் தேர்ந்து எடுத்தனர். கடந்த ஆண்டை போலவே கீழ்க்குயில்குடி சமணர்மலை அடிவாரத்தில் உள்ள ஆழமரத்தின் கீழ் நடத்துவது என்றும், அதற்கு பாறைத்திருவிழா எனவும் பெயர் முடிவு செய்து இரண்டு மாதமாக அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன, மதுரை நண்பர்கள் பல வழிகளில், வேலைகளை பிரித்து பார்த்துகொண்டனர், பேனர் , அழைப்பிதழ், மதுரை வரலாறு ஆங்கில நூல் தயாரிப்பு பணி, பதாகைகள் தயார் செய்வது, டிசைன் வெட்டி ஒட்டுவது , பலசரக்கு, காய்கறி வாங்குவது என நண்பர்கள் தேனீக்களை போல் சுறுசுறுப்பாக பணியாற்றினர்.
     மதுரை புத்தகதிருவிழாவில் ஸ்டால் போடப்பட்டு நோட்டீஸ் வினியோகம் நடந்தது, ஆனால் எதிலும் நான் பொறுப்பாக இல்லாமல் போனதால் , விழா நடைபெறும் முன் தினம் முழுமையாக பணியாற்ற வேண்டும் எனவும், இரவில் அவ்விடம் தங்கி ஆழமரத்தின் கீழ் அல்லது மலை மீது பேச்சிபள்ளத்தில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிதிரிவது என முந்தினம் மதியம் 12 மணிக்கு சமணர் மலை அடிவாரத்திற்கு வந்தேன் ,   ஆனால் நான் செல்லும்முன்பே பலசரக்கு, காய்கறிகள் வந்து இறக்கி அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைத்து சென்றுயிருந்தனர்.
    நான் சென்ற சில நிமிட இடைவெளியில் மதுமலரன், சுந்தர் வந்தனர், அடுத்து அடுத்து நண்பர்கள் ஹ்யூபர்ட், ராஜண்ணா, கந்தவேல், சதீஷ் வந்துவிட்டனர், மூன்றுமணிக்கு அ.முத்துகிருஷ்ணன் தோழமையில் ஓவியர் ரவி, உதயகுமார், பிரகாஷ், ரகு, வஹாப் ஷாஜகான், மணிகண்டன், சதீஸ் தமிழன், சித்து, மற்றும் வக்கீல் ராபர்ட் தன் துணைவியாருடன் ஒரு பெரும் பட்டாளம் வந்து இறங்கியவுடன் அந்த இடமே களைகட்டியது,
    மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் கைது, பதவி பறிக்கப்பட்டது என்ற செய்தியும் அதை தொடர்ந்து தமிழகத்தில் பேருந்துகள் ஓடுவது நிறுத்தப்பட்டது, கட்சிகாரர்கள் கலவரத்தில் ஈடுபடுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. எனக்கோ நாளை பாறைத்திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகமாக இருந்தது, ஆனால் முத்துகிருஷ்ணனோ விழா கண்டிப்பாக நடக்கும் கவலைபடாதே சகோதரா என நம்பிக்கை இழக்காமல் நம்பிக்கை ஊட்டினார்...
  





    

     விழா நடைபெறும் இடத்தை துப்புறவு தொழிலாளர்கள் சுத்தும் செய்து கொண்டிருந்தனர், சிறிது நேரத்தில் சமையல்காரகள், அதைதொடர்ந்து அரங்க அமைப்பாளர்கள் வந்து இறங்கி பணியை பார்க்க தொடங்கி விட்டனர்.
   நண்பர்கள் பதவி, வசதிகளை மறந்து களபணியாற்றினார்கள் ஒருவர் மினிலாரியில் விறகு வாங்கி வண்டி ஓட்டி வருகிறார், சிலர் தாமரை தடாகத்தில் இறங்கி மக்களால் வீசி எறியப்பட்ட பிளாஷ்டிக் பாட்டில் பேப்பர், என கழிவுகளை சேகரித்து இடத்தை சுத்தம் செய்கின்றனர். அங்கு நடைபெற்ற அசாதரணமான நிகழ்வுகளை பார்த்து கீழக்குயில் மக்கள் சிலர் கூடிவிட்டனர் என்ன ஏதேனும் சினிமா சூட்டிங்கா என் வினைவினார்கள் அவர்களுக்கு பாறைத்திருவிழா என்றதும் அப்படியா என்றனர்,
  சிறிது நேரத்தில் புத்தக பண்டல்கள் வந்து இறங்கின, விழாவில் புகைபட கண்காட்ச்சியை வைக்க ஓவியர் ரவி, ரகு படங்களை ஒட்டும் பணிகளை தொடர்ந்தனர். இப்படி இரவு 10 மணி ஓயாத பணி நண்பர்களுக்கு, அங்கேயே இரவு உணவு தயாரிக்கப்பட்டன.
    பாறைத்திருவிழாவில் கலந்து கொள்வதற்காகவே அலகாபாத்தில் இருந்து சுந்தரராசன் சார், சென்னையில் இருந்து முத்துகுமரன் அந்த இரவிலும் அங்கு வந்ததனர், கடந்த விருட்சத்திருவிழாவில் சுந்தரராசன் சார் தான் ஒருங்கினைப்பாளர்களுக்கு  வழிகாட்டியாக இருந்தார், இந்த முறை ஹ்யூபர்ட் சார் அந்த பொறுப்பை ஏற்றுகொண்டு களத்தில் இறங்கினார்.
    இரவு 11 மணிக்கு சில நண்பர்கள் காலை வருவதாக விடை பெற்று சென்றனர், நான் , ஹ்யூபர்ட்,  மதுமலரன், கந்தவேல், சதீஸ் மற்றும் சென்னை நண்பர்கள் மட்டும் அங்கு தங்கினோம்.  கடந்த ஆண்டை போல் நாகமலை விலக்கில் இருந்து சமணர்மலை வரை பாறைத்திருவிழாஅரங்கம்வரை  பதாகைகளை மின்கம்பங்களில் கட்ட சென்றோம், நாகமலையில் பதாகைகளை கட்டும் போது ஒரு போலீஸ்காரர் வந்து நீங்கள் யார் என்ன செய்றீங்க என சப்தம் போட்டார். அவருக்கு,  பாறைதிருவிழா பற்றி கூறி விழாவிற்கு காவல்துறை ஆணையரிடம் அனுமதி பெற்ற கடிதத்தை காட்ட சரிசரி நிலமை சரியில்லை எனவே விரைவாக அமைதியாய் கட்டி விட்டு செல்லுங்க என்றார், அங்கிருந்து சமணர்மலை அடிவாரம் வரை கட்டி வந்தபோது மணி 12.30 ஒரே அசதி ஆழமரத்தடியில் இருந்த சிமிண்ட் மேடையில் படுத்தோம் அசதியில் நான் படுத்தவுடன் தூங்கிவிட்டேன்.
   ஆனால் அதிகாலை 3.30 மணிக்கு மழை வந்து எழுப்பிவிட்டது. வேறு இடம் தேடி சென்றால் அங்கு ஏற்கனவே வேறு நபர்கள் இருந்தனர். அப்படியே தூக்க கலக்கத்துடன் மரத்தின் அடியில் ஒதுங்கினேன்.இரவில் மலையை பார்த்தால் மலை இருளில் ஒளிந்து கொண்டது, அடிவாரத்தில் உள்ள கருப்பனசாமி கோவிலில் மட்டும் விளக்கு ஒளியை சிந்த எங்கும் இருள் இருள் அமைதி ஆஹா அந்த பொழுது எவ்வளவு ஆனந்தமான தருணம்.
   காலை ஐந்து மணிக்கு [28.9.14] நான், மதுமலரன், தமிழினி வசந்தகுமார் மூவரும் கீழக்குயில்குடி ஊரின் எல்லையில் உள்ள  குளியல் தொட்டியில் குளித்திவிட்டு விழா இடம் வரும் போது விடிய ஆரம்பித்துவிட்டது. இரவு இருளில் மறைந்த மலை கண்ணுக்கு புலப்பட ஆரம்பித்தது. அதே நேரம் மழை வானில் இருந்து கொட்ட அடை மழையாக மாறியது வான் எங்கும் கருமேகங்கள் தான்
    அந்த மழையிலும்  சமையல் காரர்கள் சமையல் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர், காலை 6.30 மணி சிறு துளிகளாய் மழை பெய்துகொண்டே இருக்க விழாவிற்கு முதல் நபராக மழையில் நனைந்தவாரே தீபாநாகராணி அவர்கள் தன் கணவர், மகனுடன் வந்து இறங்கினார்கள், அடுத்து அடுத்து அருண், மற்றும் எபி தன் துணைவியாருடன் பைக்கில் வந்து இறங்க எங்களை போல் மழைக்கும் உற்சாகம் அடைந்து மழைபெய்ய ஆரம்பித்தது, என் தங்கை லதா தன் மகள் வித்தியாவுடன், உறவினர் துர்கா தன் மகள்,மற்றும் பெற்றோர்களுடன் வந்து இறங்கினார்கள், மழை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வண்னம் பசுமைநடை ஆர்வலர்கள் பேருந்து ஓடாதநிலையிலும் கார், பைக், ஆட்டோ என குடும்பம் சகிதமாக, நண்பர்கள் படை சூல மழையில் நனைந்துகொண்டே வந்தனர், எங்களுக்கு உற்சாகம் அளித்தது. ஹலோ வேல்ஸ் என அழைக்கும் சப்தம் கேட்டு திரும்பிபார்த்தால் நண்பர் எஸ்.அர்ஷியா வந்து இறங்கினார் ஆச்சரியமாகவும் மகிழ்வாகவும் இருந்தது.
       வாகனம் ஓடவில்லை, கலவரம் என ஒதுங்கிகொள்ள காரணம் தேடும் நண்பர்கள் மத்தியில் பாறைத்திருவிழாவில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என காலை 5 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு வந்த நண்பர்  முத்துகுமார் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்வு, இவரை பார்த்தாலே நமக்கு உற்சாகம் வந்துவிடும்.
      இப்படி முகம் அறிந்த ,அறியாத நண்பர்கள் வர வர பசுமைநடை நண்பர்களுக்கு ஆனந்தம், 9 மணிக்கு எல்லாம் மழையில் நனைந்த படி சிறப்பு அழைப்பாளர் தியோடர். பாஸ்கரன் தன் சகோதருடன் வந்து சேர்ந்தார்கள்.








  
  9 மணிக்குள் 300 பேர் சேர்ந்துவிட்டனர். அந்த மழையில் மலை நோக்கி, சமணர்மலை செட்டிபுடவு குகை நோக்கி, 40 வது பசுமைநடை புறப்பட்டது,செட்டிப்புடவில் மழையில் நனைந்து கொண்டே மலையின் வரலாற்றை அய்யா.சாந்தலிங்கம் கூறினார்கள்.
   மலையில் இருந்து கீழே இறங்கி வந்தவுடன் காலை உணவு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் வழங்கப்பட்டது. மழையில் நனைந்தபடி மலை அடிவாரத்தில் உள்ள தெப்பகுளத்தின் தாமரை மலர்களை ரசித்துகொண்டு சாப்பிட்டது பசுமைநடை ஆர்வலர்களுக்கு மட்டும் கிடைத்த பாக்கியம்.
    சரியாக 10.30 க்கு பாறைத்திருவிழா ஆரம்பம்மானது ஒரு பக்கம் வரலாற்று நிகழ்வும் மறுபக்கம் குழந்தைகளுக்கான விழா ஆரம்பித்தது, குழந்தைகள் விழா எனில் அது வெறும் விளையாட்டு அல்ல பன்முக தன்மை கொண்ட விளையாட்டு குழந்தைகளின் முகங்களில் தான் எவ்வளவு மகிழ்வு, 
     பாறைத்திருவிழாவை அ,முத்துகிருஷ்ணன் தொடங்கிவைத்தார், பசுமைநடையின் முதல் நடையில் இருந்து பாறைத்திருவிழா வரை கடந்துவந்த வரலாற்றை எளிமையாக எடுத்து கூறினார். நான் 2 வது பசுமைநடையில் இருந்து தொடர்ந்து சுமார் 34 நடைகளில் பங்கேற்றுள்ளேன். என எண்ணும்போது மகிழ்வாகதான் இருந்தது. மதுரை வரலாற்றின் ஆங்கில நூல் அறிஞர்.கிறிஸ்டோபர் ஜெயகரன் வெளியிட்டார்கள், தியோடர்.பாஸ்கரன் தொல்லியல் சார்ந்த உரைவீச்சு பார்வையாளர்களை மயக்கியது என்றால் சாந்தலிங்கம் அய்யா பசுமைநடை குடும்பத்தை பற்றியும் அதனால் அவர் அடைந்த மகிழ்வை கேட்கும் போது எங்கள் அகம் மகிழ்ந்தது.
   மதியம் 1 மணிக்கு பாறைத்திருவிழா முடிந்தது, மதிய உணவு வழங்கப்பட்டது பாறைதிருவிழாவில் கலந்து கொண்டவர்களே மற்றவர்களுக்கு உணவு பறிமாற உணவு மேலும் சுவையானது.
   மதிய உணவுக்கு பின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சுமார் மாலை 3 மணிவரை விழாவில் கலந்துகொண்டவர்கள் கிளம்ப மனம் இல்லாமல் அங்கேயே இருந்தனர். விழாமுடிவில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கையை பார்த்தபோது சுமார் 500 பேர். தமிழகத்தின் அசாதாரண சூழ்நிலையில் இந்த மக்கள் கூட்டம் பசுமைநடையை அடுத்த நகர்வை நோக்கி உற்சாகமாக நகர்த்தி செல்லும்.
   விருதுநகர் போக்குவரத்து நண்பர்கள் திரு,பாலசுப்பிரமணியம், ஜான்கென்னடி மகள், மகனுடன், மாரிக்கண்னு மகனுடன், அன்பழகன், கண்ணன் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
   விழாவை பற்றி அடுத்தநாளே பத்திரிக்கை முழுவதும் படங்களுடன் செய்தி வந்தது, கலந்து கொள்ளாதவர்கள் வருந்தினர், கலந்துகொண்டவர்களுக்கோ அவர்கள் நினைவில் செதுக்கிய சிற்பங்களாக அழியாத நினைவுகளாக பதிந்துபோனது.
   சொன்ன நிகழ்வுகள் குறைவு
   சொல்லாத நிகழ்வுகள் அதிகம்
     
 பாறைத்திருவிழாவின் நண்பர்கள் பதிவு பெயர் மீது கிளிக் செய்யவும்
  சித்திரைவீதிக்காரன்
   ராஜண்ணா
    ஷாஜஹான்
    பாடுவாசி

புதன், ஜூலை 02, 2014

பசுமைநடை பேரையூர்

   
மொட்டைமலை

    இந்த முறை பசுமைநடை பேரையூர் என செய்திவந்தவுடன் வழக்கபோல் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பசுமைநடையில் கலந்து கொள்ள கேட்டு கொண்ட போது தங்கையின் மகள் வித்யா கலந்துகொள்வதாக கூறி முன் தினம் மாலையே விருதுநகர் உள்ள என் வீட்டுக்கு வந்துவிட்டாள், நண்பர்கள் ஐந்து பேர் வருவதாக உறுதிதந்தனர்.
  .45. 29.6.2014 ஞாயிற்றுகிழமை காலை 5.30 மணிக்கு எழுந்து நான், எனது மகள், மருமகள் வித்யா பேருந்து நிலையம் வரும் முன்பே நண்பர்கள் முருகன், கணேசன், அன்பழகன், ரவிச்சந்திரன் காத்து இருந்தனர், நாங்கள் இந்தமுறை மதுரை வராமல் டி.கல்லுபட்டி வந்துவிடுகிறோம் என முத்துகிருஷ்ணனுக்கு தகவல் தந்ததால் விருதுநகரில் இருந்து டி.கல்லுபட்டியை அடைந்தபோது காலை மணி 6.45
    மதுரையில் பசுமைநடை டீம் கிளம்பி விட்டதா என போன் போட்டு கேட்டபோது அபோதுதான் கிளம்பி வந்துகொண்டு இருக்கிறோம் என்றனர். இவ்வளவு தாமதமாகும் என தெரிந்து இருந்தால் நாங்களும் சற்றே தாமதமாக கிளம்பி இருக்கலாம்,
    டி.கல்லுபட்டி பேருந்து நிலையம் ஓரளவு சுத்தமாகவே காணப்பட்டது, பேருந்து நிலையம் உள் பக்கம் கடைகள் அதிகமாக கட்டி விடப்பட்டுள்ளதால் கண்ட இடத்தில் அசுத்தம் செய்யாமல் இருப்பதாக எனக்கு பட்டது. அம்மா மருந்தகம் என்ற கடையும் பச்சைகலர் பெயிண்ட் அடித்து காணப்பட்டது, பேருந்து நிலையத்தின் இரு வழியிலும் பஸ் உள்ளே, வெளியே வந்து சென்றது இது விபத்து ஏற்பட வழிவகுக்கும் என எண்ணியபடி நேரத்தை கடத்தினோம்.
   காலை 7.45 மணிக்கு ”பசுமைநடை” பேனருடன் குகன் பள்ளி பேருந்து வர அதில் 7 பேரும் ஏறிக்கொண்டோம், பேருந்தில் நண்பர் எஸ்.அர்ஷியா வாங்க சார் என அன்பாக வரவேற்றார், நண்பரும் கலந்து கொண்டது மகிழ்வாக இருந்தது. புதிய முகங்கள் அதிகமாக இருந்தனர், 8 மணிக்கு பேரையூர் “மொட்டை மலை” அடிவாரத்தை அடைந்தோம். கீழே முருகன் கோவில் அதை ஒட்டியே மலை ஏறும் பாதை, செங்குத்தான மலை பாறையில் சிரமம்மில்லாமல் ஏற சிறு சிறு படிக்களாக செதுக்கி கைபிடித்து ஏற கம்பியும் அமைத்து இருந்தனர், படிகட்டுகள் சமீபத்தில் தான் அமைத்துள்ளனராம். படிகட்டு அமைத்து ஒவ்வொரு படிக்கட்டிலும் படிஅமைக்க உதவியவர் பெயர், ஊர் என்ற விபரம் செதுக்கியுள்ளனர். செக்குத்தான மலை என்பதால் சற்றே ஏற சிரமமாகத்தான் இருந்தது, இந்தமுறை அரசு தேர்வு, முகூர்த்த நாள் என்பதால் பசுமைநடை ஆர்வலர்கள் குறைவாக இருந்தனர். மலை ஏற ஆரம்பித்த அந்த நேரத்திலேயே வெயில் சுள் என அடிக்க ஆரம்பித்தாலும் எங்கள் பசுமைநடை ஆர்வலர்களின் ஆர்வத்தின் முன் வெயில் தாக்கம் எடுபடவில்லை, உற்சாகமாகவே ஏறினோம்  கந்தவேலும், மதுமலரனும் ஆர்வலர்களை உற்சாக படுத்தி ஏற்றிகொண்டே இருந்தனர்.
   
       அரைமணி நேர மலை ஏற்றத்திற்கு பின் காலை 8.30 க்கு மலை உச்சியை அடைந்தோம். மலை உச்சியில் இருந்து சுற்றிலும் கீழே பார்த்தால் பசுமை, பசுமை தான் ஆக உலகம் எவ்வளவு அழகானது, அடிவாரத்தில் நாங்கள் வந்த பேருந்து பொம்மைபோல் காணப்பட்டது, ரோட்டில் செல்லும் வாகனத்தைபார்த்தபோது பொம்மைகார்கள் ஊர்ந்து செல்லுவதைபோல் காண்பதற்கே மகிழ்வாக இருந்தது. மலை உச்சியில் ஒரு பக்கம் சிவன் கோவில், அதற்கு சற்றே தள்ளி முஸ்லீக் சமாதி கட்டி இருப்பதை பார்க்கும் போது மத ஒற்றுமைக்கு உதாரணமாக இருந்தது, மலையின் உச்சி ஒரு சிறு மைதானம் போல் பரந்து காணப்பட்டது, அதில் இயற்கையாகவே மூன்று தடாகம் அமைந்து தண்ணீர் இருந்தது. அல்லி மலர் மலர்ந்து பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது.

    அதில் ஒரு தடாகம் சற்றே பெரிதாக இருந்ததில் படிகள் அமைத்து, மழைகாலங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படும்போது குளிக்க வசதி ஏற்படுத்தி இருந்தனர், மலையில் தான் முருகன் கோவில் காணப்படும், ஆனால் மதுரை திருப்பரங்குன்றம் கோவிலை போலவே இங்கும் மலை அடிவாரத்தில் முருகன் கோவிலும், ,மலை உச்சியில் சிவன் கோவில், முஸ்லீம் தர்ஹா வைபோல் சமாதியும் காணப்படுகிறது, இது அதிசயமாக இருந்தது, மதுரை திருப்பரங்குன்றம் கோவில் செல்லமுடியாதவர்கள் அடிவாரத்தில் உள்ள கோவில்லில் காணிக்கை ,நேர்த்திகடன் செலுத்திகொள்வார்களாம்.

     மலைமீது உள்ள சிவன் கோவில் பின்னால் சிறிது நிழல் காணப்பட ஆரவலர்கள் அங்கு உட்கார மலையின் சிறப்பை முத்துகிருஷ்ணன் விளக்கி கூறினார், சதுரகரிமலையும் அங்கு இருந்து பார்க்கமுடிந்தது. வெயில் தாக்கம் அதிகம் இருந்ததால் மலையில் இருந்து கீழே இறங்கினோம். அடிவாரத்தில் வெயிலே தெரியாத அளவுக்கு மரங்கள் நிறைந்த சோலைபோல் கோவில் முன்புறம் அமைந்து இருந்தது, அணைவரும் அங்கு அமர்ந்தஉடன் காலை உணவு பசுமைநடை சார்பாக வழங்கப்பட்டது. பசுமைநடை அமைப்பாளர்களில் ஒருவர் ரகுநாத் அவரது கையால் எலும்பிச்சை பழம் பிழிந்து அன்பை ஊட்டி சர்பத் தயாரித்து தந்ததால் சர்பத் மிக ருசியாக இருந்தது. 

   அதன் பின் வீடு திரும்பினோம். வழக்கம்போல் மறக்கமுடியாத அனுபவத்தை இந்த பசுமைநடையும் தந்தது.
 [  பேரையூர்
 மதுரை மாவட்டத்தில் ஒரு வட்டத்தின் தலைநகரமாக பேரையூர் உள்ளது.
இது நாயக்கர் , மற்றும் ஜமீன்தாரகளால் ஆளப்பட்ட ஊர். இவ்வூரைச் சுற்றிலும் பெருங்காலத்து தாழிகள் கிடைப்பது இவ்வூரின் தொன்மையை உறுதிபடுத்தும், இவ்வூரின் அருகில் தான் மொட்டைமலை காணப்படுகிறது.
இதன் உச்சியில் சிவன் கோவில் உள்ளது, அதன் அருகில் திரந்த வெளிபாறையில் ஒரு பெரிய கல்வெட்டும் உள்ளது, சிவன் கோவில் மல்லிகார்ச்சுனர் கோயில் என அழைக்கப்படுகிறது. இந்த ஊர் பாண்டியர் ஆட்சி காலத்தில் கடுங்கோ மங்கலம் என அழைக்கப்பட்டதாக வரலாறு உண்டு.
மலையடிவாரத்தில் மேல்ப்பரங்கிரி சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது, ஆலம்பட்டி நீர்நிலையை கடந்து திருப்பரங்குன்றம் செல்ல முடியாத நிலை ஏற்பட்ட போது முருகன் வேல் வடிவில் காட்சியளித்த இடம் என ஐதீகம் உண்டு. ]

    

ஞாயிறு, ஜூன் 29, 2014

அப்பாவின் மரணம்

                                             அப்பாவின் மரணம்




       அன்று அலுவலகத்தில் கன்ரோல் பிரிவில் பணி செய்பவர் திடீர் என விடுப்பு போட்டதால் நான் பணிசெய்யவேண்டிய நிலை. விருதுநகர் அருகில் ஒரு விபத்து நாகர்கோவில் செல்லும் பேருந்து லாரியுடன் மோதி பெரும்விபத்து, 15 நபர்களுக்கு மேல் காயம் , எனவே விபத்து விபரம் காயப்பட்டவர் நிலை  பற்றி தகவல் கேட்டு கொண்டு இருக்கும் போது ,காலை மணி 10 இருக்கும் , திருமங்கலத்தில் இருந்து அம்மாவிடம் செல்பேசியில் அழைப்பு வந்தது, அவசரமாக என்ன என கேட்க அப்பாவுக்கு உடம்புக்கு முடியவில்லை  ஆஸ்பத்திரிக்கு கூட்டி செல்கிறேன், என அப்பாவுக்கு வீஷிங் இருப்பதால் அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு கூட்டி செல்வார்கள், அதுபோல் இருக்கும் என எண்ணி நீங்கள் கூட்டி செல்லுங்கள் நான் மாலைவந்து பார்க்கிறேன் என பேசி கொண்டு இருக்கும் போது மீண்டும் அலுவலக போன் வர அம்மாவிடம் நான் பிறகு பேசிக்கொள்கிறேன் என போனை கட் செய்து விட்டு அலுவலக வேலையில் மூழ்கினேன்.
  
   விபத்து விபரங்கள் சேகரிப்பதில் இருந்ததால் அப்பா எப்படியுள்ளார்கள் என்பதை கேட்க மறந்துபோனேன்,  மதியம் 2மணி இருக்கும் அம்மாவிடம் இருந்து மீண்டும் போன் பதட்டத்துடன் செல்லை எடுத்து பேசினேன் அப்பா எப்படியுள்ளார்கள் என கேட்டேன், அப்பாவுக்கு ரொம்ப முடியலைமூச்சு விட முடியவில்லை, எனவே மதுரைக்கு கூட்டி செல்கிறேன் உடன் வா, என. அம்மா அழுதுகொண்டே போனை கட்செய்தார்கள்.

  எனக்கு உடன் வியர்த்து விட்டது, எனக்கு கன்ரோல் பணி என்பதால் மாற்று நபர் வந்த பின்னரே என் பணியை முடிக்கமுடியும், அச்சமயம் பார்த்து டெக்னிக்கல் பிரிவில் பணிபுரியும் முருகன் என் நிலை அறிந்து நான்  பார்த்துகொள்கிறேன் என கூறிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டேன் என் மனைவியும் தயாராக இருக்க மதுரை புறப்புட்டேன்,
   பஸ்ஸில் செல்லும் போது அம்மாவுக்கு போன்போட்டேன், போனை எடுக்காததால் மேலும் பதட்டமானது, பதினைந்து நிமிடம் கழித்து அம்மாவிடம் இருந்து போன் எடுத்து என்ன என கேட்டபோது, அப்பாவை மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐ.சி.யூ வில் சேர்த்துள்ளோம் எனகூறி விட்டு போனை கட் செய்துவிட்டனர், மருத்துவமனையை அடைந்தபோது மாலை 6 மணி, தங்கை உமா, லதா அங்கு இருந்தனர், அம்மா என்னை பார்த்ததும் அழுதனர், எனக்கு உடம்புக்கு முடியவில்லை எனில் ஆஸ்பத்திரிக்கு குறிப்பா ஐசியூ வில் அனுமதிக்காதீர்கள் என சொல்லுவார்கள் இப்ப அப்பாவை ஐசியூ வில் சேர்க்கும் படி ஆனதே என அம்மா அழுதார்கள்,

  ஐ.சி.யூ கதவை திறந்து கொண்டு சென்று அப்பாவை பார்த்தபோது, அதிர்ந்து விட்டேன், மூக்கு வழியாக டியூப் சொருகி நெஞ்சு முழுவதும் வயர் சொருகி மானிடரில் செக்செய்து கொண்டு இருந்தார்கள், எனக்கு பேச்சே வரவில்லை கண்ணில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது, அப்பா, அப்பா என அழைத்தேன் அப்பா கண் முழித்து பார்த்தார்கள், ஆனால் ஒன்றும் பேசவில்லை என்னை பார்த்துகொண்டே இருந்தார்கள், என்னால் தாங்க முடியவில்லை, அங்கு நிற்க தைரியம்மில்லாமல் வெளியே வந்து விட்டேன்.
  ஐ.சி.யூ வின் வாசலில் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்துவிட்டேன், அப்பாவின் நினைவுகள் என் மனதுக்குள் அலைபாய்ந்து கொண்டு இருந்தது, அப்பாவும் அம்மாவும் என் மகள் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவம் படிப்பதால் அவளுக்கு துணையாக திருமங்கலத்தில் வீடு எடுத்து உடன் இருந்தனர், என் மகள் அப்பா, தாத்தாவுக்கு இப்ப அடிக்கடி மூச்சி இறைக்கிறது, எனவே பேசாமல் விருதுநகரில் நம் வீட்டில் வைத்து கொள்வோம், என்றால், அம்மா தான் படிப்பு முடியும் வரை இங்கே இருக்கிறோம், என தடுத்துவிட்டனர்.
    
      இரவு 8 மணி இருக்கும் மருத்துவர் வந்து பார்த்துவிட்டு வெளியே வந்தார்கள் , அப்பா எப்படியுள்ளார்கள் என கேட்ட போது இப்போது பரவாயில்லை பிரஷர் அதிகமாக உள்ளது, பார்ப்போம் என கூறிவிட்டு லிப்டில் ஏறி சென்று விட்டார், நர்சிடம் கேட்டால் மருந்து சீட்டை தந்து விட்டு உடன் மாத்திரை வாங்கிவாருங்கள், இனி நாளை தான் டாக்டர் வருவார்கள் என கூறி விட்டு சென்றுவிட்டனர்.

   நான் மட்டும் இரவு ஆஸ்பத்திரியில் தங்கினேன், அம்மாவும், மனைவியும் தங்கைவீடு சென்றுவிட்டனர், மறுநாள் காலை {7.5.14} 6 மணிகெல்லாம் மனைவி , அம்மா, தங்கை வந்துவிட்டனர், அப்பாவை சென்று பார்த்தபோது நன்றாக பேசினார்கள், ஆனால் மூச்சு விட சிரமப்பட்டனர், காலை 10 மணிக்கு   டாக்டர் வந்து பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, எப்படி சார் உள்ளார்கள், என்ற போது பிரஷர் குறையவில்லை , பிரஷர் குறைந்தால் தான் எதுவும் சொல்லமுடியும் என்றார்கள் யூரின் போனால்தான் பிரஷர் குறையும் பார்ப்போம் என  கூறிவிட்டு சென்றுவிட்டார்கள். மாத்திரை கேட்கும் போது மாத்திரை, மருந்து வாங்கிதந்தோம் ,
   மாலை நன்றாக இருப்பதால் நான் விருதுநகர் சென்றேன் அன்று இரவு  மூத்த மாப்பிள்ளை ஆஸ்பத்திரியில் தங்கினார்கள், நான் விருதுநகர் சென்றபின் மனைவி போன் செய்தால் மாமா உங்களையும் உங்கள் தம்பியையும் தேடினார்கள் என்றால் மாமா இன்று ஏதோ போல் உள்ளனர் என்றால் அப்ப நான் கிளம்பி வரவா என்றேன் இல்லை காலையில் வாங்கள் என்றால் அன்று சரியான துக்கம் வரவில்லை,

     மறுநாள் [ 8.05.14] காலை நான் என் மகள்கள் பிரியா, பிரீத்தி இருவரையும் கூட்டி கொண்டு மதுரை ஆஸ்பத்திரிக்கு சென்றேன், நான் செல்லும் முன் சென்னையில் இரண்டாவது தங்கை உஷா, மகன் விக்கியுடன் வந்து இருந்தால் , அப்பா அவளிடம் நன்றாக பேசினார்கள், எனவே அவளும் அக்காவீட்டுக்கு போய்விட்டு வந்துவிடுகிறேன், என கூறி சென்றால், அப்பா தம்பி வந்துவிட்டானா, என கேட்டார்கள் அவன் இப்ப வந்துவிடுவான் என கூறிவிட்டு வெளியே உட்கார்ந்து இருந்தோம், நண்பர்கள் முத்துகிருஷ்ணன்,  கியூபட், மதுமலர் உடன் இருந்தனர் அவர்கள் இருந்தது மனதுக்கு ஆறுதலாக இருந்தது, காலை 10 மணி இருக்கும் ஐசியூ வில் இருந்து டாக்டர் அவசரமாக என்னை அழைத்தார்கள் பதட்டத்தோடு உள்சென்றேன், அப்பாவுக்கு திடீர் என பல்ஸ் ரொம்ப குறையுது, காப்பாத்த முடியாது, வென்டிலேட்டரில் வைக்கவா என்றார், இல்லை டாக்டர் நாங்கள் கூட்டி செல்கிறோம், என அழுதுகொண்டே கூறிவிட்டு வெளியே வந்து அம்மாவிடம் அப்பாவை காப்பாத்தமுடியாதாம் கூறியபோது அம்மா அப்படியே விக்கித்துபோய் விட்டனர், நான் தங்கைகளுக்கு போன் செய்து உடன் வாங்க அப்பாவை காப்பத்தமுடியாது என கைவிரித்துவிட்டனர்.
      அடுத்த பத்தாவது நிமிடத்தில் தங்கைகள் ஆஸ்பத்திரிக்கு அப்பா என கதறியபடி வந்திவிட்டனர், தங்கைகள் தடுப்பையும் மீறி ஐசியூ க்குள் சென்றனர், அங்கு டாக்டர் அவர்களிடம் வெண்டிலேட்டரில் வைத்து பார்க்கலாம் என்றார்கள் உடன் சரி வைக்க ஏற்பாடு செய்யுங்கள் என கூறிவிட்டார்கள்,
   வெளியே வந்து அம்மாவிடம் கூறினார்கள் , அம்மா அப்பா வை சிரப்படுத்தவேண்டாம் மிஷின் எல்லாம் வேண்டாம் , உயிர் இருக்கும் போதே அண்ணன் வீட்டிக்கு கூட்டி போய்விடுவோம், என்றார்கள், கடைசி முயற்சி செய்து பார்ப்போம் வெண்டிலேட்டரில் வயதானவர்களை வைத்தால் பிழைப்பது கடினம் தான் என்றாலும் 2 சதவீதம் பிழைக்க வாய்ப்பு உள்ளது, எங்கள் அத்தையை இப்படி வைத்து பிழைத்து ஆறு மாதம் உயிருடன் இருந்தார்கள் என் தங்கை உஷா கூறவும் , சரி என அம்மா ஒத்துகொண்டனர்.
    வெண்டிலேட்டரில் வைத்தபின்னரே தம்பி வந்தான் சென்று பார்த்து வந்து அழுதான், அப்பா எங்களை அனைவரையும் ஒன்னா பார்க்க ஆசைபட்டனர், இப்ப மகன், மகள் , மாப்பிள்ளைகள், பேரன், பேத்திகள் என வெளியே அனைவரும் இருக்க அப்பா ஐசியூ வின் உள்  நினைத்தபோது மனம் கனத்தது.
     ஒவ்வொருவராக உள் சென்று பார்த்தபோது அப்பா முழித்து இருந்தனர் அப்பா என அழைத்தால் திருப்பி பார்த்தனர், பிழைத்துவிடுவாரா, பிழைத்துவிடவேண்டும் என ஒவ்வொருவர் மனதிலும் வேண்டுதல். இரவு 8 மணிக்கு டாக்டர் வந்தார் பார்த்தார் வெளியே வந்து பார்ப்போம் என கூறிவிட்டு   சென்றார். அன்று இரவு நான் தங்கை மகன்கள் விக்கி, விஷால் மூவரும் ஆஸ்பத்தரியில் தங்கினோம்,
      9.5.14 காலை 2 மணி இருக்கும் அம்மா தங்கை வீட்டில் இருந்து வந்தார்கள் என்னம்மா என நான் கேட்டேன் அப்பா தண்ணி கேட்டார்கள் என கூறிய வாரு ஐசியூ க்குள் சென்றனர், அம்மா அழுகவும் நர்சு அனுமதித்தார்கள், அப்பா வை பார்க்க, பார்த்துவிட்டு வந்து அழுது கொண்டே இருந்தார்கள்,

     7 மணிக்கெல்லாம் தங்கை, தம்பி, என அனைவரும் வந்து விட்டனர், 9மணிக்கு ஒருவர் பின் ஒருவர் சென்று பார்த்தோம் அப்பா, கண் முழித்து காணப்பட்டாலும், பிழைக்கமாட்டார் என தோன்றியது, 10 மணிக்கு டாக்டர் வந்து பார்த்தார்கள், 11 மணிக்கு வெண்டிலேட்டரில் இருந்து யூனிட் குறைத்து பார்ப்போம் அவர்களாக மூச்சு விட்டார்கள் எனில் பிழைத்து விடுவார்கள் என கூறிவிட்டு வழக்கம்போல் லிப்ட் ஏறி சென்றுவிட்டார்.
      மதியம் தங்கை உஷாவும், தங்கை மகள் வித்தியாவும்[ பல் டாக்டர்] ஐசியூ விற்குள் சென்று பார்த்து விட்டு வந்தார்கள், அப்பா பிழைப்பது கஷ்டம் ரிப்போர்டில் நாட் இம்ரூவ்மெண்ட் என ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை எழுதியுள்ளது என்றால், நான் சென்று உள்ளே பார்க்க முயன்றபோது நர்ஸ் அனுமதிக்கவில்லை, எனவே சப்தம் போட்டேன் ஐசியூன்னு சொல்லுறீங்க டாக்டரே இல்லை நாங்க அப்பா பிழைத்தி விடுவார் என நம்பி இருந்தால் ஒன்னுமே சொல்லமாட்டிறீங்க டாக்டரை கூப்பிடு என சப்தம்போட , நர்ஸ் உடன் டாக்டருக்கு போன்போட்டு சொல்ல ஆபரேஷன் தியேட்டரில் இருந்ததால் 9 மணிக்கே வந்தார்கள் ,

   டாக்டரை சென்று தங்கை பார்த்த போது கண்ணாடி போட்டவரை வரசொல்லுங்க என கோபமா கூறவும்,நான் உள் சென்றேன். என்னை பார்த்தவுடன் ஐசியூ விற்குள் இப்படி கோபமாக பேசகூடாது என கோபமாக பேசினார், நானும் அப்புறம் என்ன சார் காலை 11 மணிக்கு அப்பா நிலை பற்றி சொல்றீங்கன்னு சொன்னீங்க ஆனால் இன்றும் வெண்டிலேட்டருக்கு பணம் கட்ட  சொல்லுறீங்க இவ்வளவு நேரமா ஐசியூ வில் டாக்டரே இல்லை அப்பா நிலை என்ன என கேட்டா டாக்டர் வருவார் என மட்டும் சொல்றாங்க என கோபமா நானும் கேட்க டாக்டர் கோபத்தை குறைத்து கொண்டு, சரி உங்க நிலை புரிகிறது, என கூறி விட்டு அப்பாவுக்கு நுரையிரல் பாதிப்பு அதிகம் உள்ளதால் காப்பாற்ற இயலாது, எனவே வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என்றார், அதற்கு தங்கைகள் அப்பா உயிர் அண்ணன் வீட்டில் தான் போகவேண்டும் எனவே அதற்கு உதவுங்கள் என்றவுடன்.
    வெர்ண்டிலேட்டரில் இருந்து எடுத்தவுடன் இறந்து விடுவார்கள் எனவே வெண்டிலேட்டர் உள்ள ஆம்புலன்ஸ்ஸில் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன் , அங்கு அப்பாவை வீட்டுக்குள் கொண்டு வந்த பின் வெண்டிலேட்டரை ரிமூவ் செய்கிறோம் என டாக்டர் கூறினார்கள். வெண்டிலேட்டரில் இருந்து எடுத்தவுடன் ஒரு சில நிமிடத்தில் இறந்து விடலாம், உங்கள் கண்முன் அப்பாவின் உயிர் பிரியும் அச்சமயத்தில் நீங்கள் அனைவரும் தைரியமாக இருக்கவேண்டும், என்றார். சரி என ஒத்துகொண்டோம்.

   அன்று இரவு என் மனைவி, அம்மா, என் பிள்ளைகள் தம்பி மனைவியை விருதுநகர் அனுப்பிவிட்டு, நான் தம்பி, தங்கைகள், என ஐந்து பேர் மட்டும் அங்கு நின்றோம், மறுநாள் காலை 6 மணிக்கு டிஸ்சார்ஜ் என்பதால் தம்பி, தங்கைகள் வீட்டுக்கு செல்ல நான், தங்கை பிள்ளைகள் விக்கி,விஷால்,ஆஸ்பத்திரியில் தங்கினோம். தூக்கம் வரவில்லை, அப்பாவின் நினைவுகளுடன் நேரம் கடந்து சென்றது,

   10.6.2014 காலை 5.30 மணி இருக்கும் ஐசியூ வார்டுபாய் வந்து அப்பாவுக்கு கட்டி விட வேஷ்டி வேண்டும் என்றார், தங்கைகளுக்கு போன் செய்ய எண்ணிய போது தங்கைகள் உமா,உஷா, லதா, தம்பி சுரேஷ் வந்துவிட்டார்கள், வெளியே ஆம்புலன்ஸ் ரெடியாக நின்றது, தாய்மாமா  ஜெகதீஷன், பாலுமாமா வந்து இருந்தார்கள், நண்பர்கள் கியூபட், மதுமலரன் வந்து விட்டனர், 6 மணிக்கு ஐசியூ வில் இருந்து அப்பா வை ஸ்டிச்சரில் கீழே கொண்டு வந்து ஆம்புலன்ஸ்ஸில் ஏற்றினார்கள்.
     அப்பாவை வண்டியில் ஏற்றும் போது உடம்பு அசையவே இல்லை அப்பா இறந்துவிட்டார்களோ என அய்யமாக இருந்தது, ஆம்புலன்ஸ்சில் நான், பாலு மாமா, ஜெகதீசன் மாமா, விக்கி ஏறிகொண்டோம். காரில் தங்கைகளும், இன்னொருகாரில் கியூபட், மது, தங்கை குழந்தைகளும் ஏறிகொண்டனர். ஆம்புலன்ஸ் விருதுநகரை நோக்கி சென்றது.
     7 மணி என் வீட்டு முன் வண்டி நிற்க நண்பர்கள் உதவியுடன் வீட்டுக்குள் அப்பாவை கொண்டு சென்று கட்டிலில் படுக்க வைத்து வாயில் இருந்து வெண்டிலேட்டர் டியூப்பை கழட்டும் போது அப்பா பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தனர், அப்பா இறந்துவிட்டார்களோ என எல்லோரும் எண்ணிய போது அப்பா கண்ணைன் திறந்து பார்த்தார்கள், நன்றாக மூச்சை இழுத்துவிட்டனர், அப்பா, அப்பா, தாத்தா என்ற குரலே என் வீடு முழுவதும் அலைபாய்ந்தது.
 அம்மா அப்பாவை பார்த்து என்னங்க முருகானந்தம் வீட்டுக்கு விருதுநகர் வீட்டுக்கு வந்து விட்டோம் என அழுதுகொண்டே சொல்ல அப்பா வீட்டை சுற்றிலும் பார்த்தார்கள் அவர்கள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் தெரிந்தது உடனே கையை வைத்து வேஷ்டியை கட்டினார்கள், எங்களுக்கும், உறவினர்கள், நண்பர்கள் என கூடியிருந்தவர்களுக்கு ஆச்சரியம், இடுப்பை தூக்கி வேஷ்டியை சரிசெய்து கொண்டே வலதுகாலை தூக்கி இடது கால் மீது போட்டுகொண்டணர்.எப்போதும் படுக்கும் போது இடது கால்மீது வலதுகாலை போட்டு தான் தூங்குவார்கள்.  எங்களை பார்த்து ஏதோ பேசினார்கள், என்ன சொல்லுகிறார்கள் என எங்களுக்கு புரியவில்லை, எனக்கு ஒரு நம்பிக்கை அப்பா பிழைத்துவிடுவார்கள் என , அதற்குள் அம்மாவும் உறவினர்களும் அப்பாவுக்கு பால் தந்தனர், நான் வேண்டாம் என்றபோதும் அவர்கள் கேட்கவில்லை.
   பால் குடித்த அரை மணிநேரம் நன்றாக இருந்தார்கள், அதன் பின் பல்ஸ் வீக்கானது கால் அசைவு நின்றது, அடுத்து கை அசைவு நின்றது கண்ணை மூடிக்கொண்டனர், தொண்டை அருகில் மட்டும் துடிப்பு இருந்தது, பத்துநிமிடம் இருக்கும் கண்ணை திறந்து பார்த்தனர், உதட்டில் புன்னகை தோன்றியது, அடுத்த நிமிடம் துடிப்பு நின்றது.

  இறந்த அந்த நிமிடம் அப்பா என கத்தி அழுத தங்கைகளை தேற்ற இயலாத நிலையில் மொளனமாக நின்று கொண்டிருந்தேன். என் மகளுக்கு திருமணம் முடியும் வரை கண்டிப்பாக இருப்பார்கள் என எண்ணினேன், அப்பா இறந்த முதல் நாள்தான் என் மகள் ஹோமியோபதி மருத்துவராக சென்னையில் பதிவு செய்துவிட்டு வந்தால் ஆனால்  என் மகள் வரும் முன்னே  அப்பா இறந்துவிட்டார்கள். 

    அப்பாவின் கடைசி ஆசை கண் தானம் , உடல் தானம் செய்ய வேண்டும் என விரும்பினர், ஆனால் கண் தானம் மட்டுமே செய்தோம்.

     அப்பா இறந்துவிட்டார்கள் என்பதை இன்னும் என்னால் நம்பமுடியாதநிலையில்….   

      


                                                                                                                                   



சனி, மார்ச் 29, 2014

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா


    கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா…..
      





      இந்த வருடம் மார்ச் மாதம் 15, 16 ம் தேதிகளில் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் திருவிழா நடைபெற்றது. வருடத்திற்கு ஒரு முறை நடை பெறும் இந்த இரண்டு நாள் விழாவில் இந்தியாவை சேர்ந்த பக்தர்கள், இலங்கையை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

    1974 ம் ஆண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி இந்திய கட்டுபாட்டில் இருந்த கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. அன்று முதல் இலங்கை அர்சு கட்டுபாட்டில் கச்சதீவு இருந்தாலும் மார்ச் மாதம் நடைபுறும் புனித அந்தோணியார் திருவிழாவுக்கு இந்தியாவை சேர்ந்த பக்தர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். 1983 ல் இலங்கையில் நடைபெற்ற  இனகலவரத்திற்கு பின் விழா நடைபெறவில்லை. 2011 ம் ஆண்டு முதல் மீண்டும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த வருட கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் மதுரை பசுமைநடை குழுவின் சார்பில் 10 பேர் கலந்துகொண்டதில் நானும் ஒருவன்.
   
     விழா நடைபெறும் 20 தினங்களுக்கு முன்பே இராமேஸ்வரம் திருச்சபை யில் விழாவில் கலந்துகொள்ள விண்னப்பம் தந்து அனுமதிபெறவேண்டும். இந்த ஆண்டு 3432 பேர் விண்ணப்பம் தந்து 3160 பேர் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அதில் ஆண்கள் 2466 பேர், பெண்கள்- 528 பேர், சிறுவர்கள்- 166 பேர்,

   அனுமதிக்கப்பட்டவர்கள் 15.3.2014 சனிக்கிழமை காலை 6 மணிக்கு இராமேஸ்வரம் படகு துறைக்கு வந்துவிட்டோம். கலந்துகொள்பவர்கள் 40 பேர் என தனி தனி குழுவாக பிரித்து அவர்களுக்கு படகுகள்  ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தனர்.  
    மொத்தம் 96 படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன, எங்கள் குழுவினர்க்கு 84 ம் எண் படகு ஒதுக்கப்படுயிருந்தன, நாங்கள் ஒரே குழுவாக இருந்ததால் மொத்தமாக செக் செய்து கொண்டு செல்லும் தங்கநகை, கேமிரா, பணம் என்ன என்பதை ஒரு விண்ணப்பத்தில் பூர்த்திசெய்து தந்தபின் படகில் செல்லும் போது அணியும் ;லைப்ஜாகெட் தருகின்றனர், அதன் பின்  காவல்துறையினர் நாம் கொண்டு செல்லும் பைகளை முழுமையாக செக்செய்து தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்தால் எடுத்து வைத்துகொள்கின்றனர்.

     காவல்துறைக்கு அடுத்து சுங்கதுறையினர் மீண்டும் நமது அடையாள அட்டை செக்செய்து நமது முகமும் அடையாள அட்டை புகைபடமும் சரியாக உள்ளதா என கவணித்து அதன் பின் நமது உடமைகளை தீவிர சோதனை செய்த பின் படகு ஏற அனுமதிக்கின்றனர். இந்த சோதனை முடிந்து படகில் ஏறவே மூன்று மணி நேரம் ஆனது.
     
    அதில் 1.30 நிமிடம் வெயிலில் நிற்கவேண்டி இருந்தது போதிய வசதி செய்யப்படவில்லை, படகில் ஏறும்போது தமிழக அரசு அதிகாரிகள் நம் பெயரை செக்கெய்து படகில் ஏற்றுகின்றனர், 36 பேர் படகில் ஏறியபின் படகு புறப்பட்ட போது மணி மதியம் 12.15 ஆனது, படகில் எத்தனை பேர் ஏறுகிறோமோ அதே நபர்கள் தான் வரவேண்டும் ஒரு நபர் குறைந்தாலும் திருப்பும்போது உள்வர அனுமதி இல்லை என எச்சரிக்கை செய்து அனுப்புகின்றனர்.








    எங்கள் குழுவில் உள்ள 36 பேரில் 28 பேர் முதல் முறையாக கச்சதீவு பயணம் செய்கின்றோம். படகு செல்ல செல்ல இராமேஸ்வரம் எங்கள் கண்ணில் இருந்து மறைந்துகொண்டு இருந்தது, சுமார் 1 மணி நேரம் பயணம் செய்தபின் எங்களை சுற்றியும் கடல் மட்டுமே கரையே தெரியவில்லை திசையும் அறிய முடியவில்லை, இராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு 18 மைல் ,ஒவ்வொரு 3 கிமீ க்கும் இடையில் தமிழகமரைன் காவல்படை, இந்திய கடலோர காவல்படை, இந்திய கடற்படை என நம் படகை நிறுத்தி செக்செய்கின்றனர், கச்சத்தீவு அருகில் இலங்கை கடற்படையினர் ஆய்வுக்கு பின் நம்படகை கச்சதீவுக்குள் அனுமதிக்கின்றனர்.
  
    நாங்கள் சென்ற படகு நடுக்கடலில் சென்று கொண்டு இருக்கும் போதே இயந்திர கோளாறு ஏற்பட்டு படகு நின்று விட்டது, இன்சின் டெலிவரி வால்வில் கடற்பாசி அடைத்துகொண்டதே காரணம் அதை சரி செய்ய 10 நிமிடம் ஆனது, அந்த பத்து நிமிடம் படகு ஆடிய ஆட்டம் எங்கே படகுகவிந்து விடுமோ என பயந்துவிட்டோம், படகு ஆடிய ஆட்டத்தில் சிறுகுடல் தொண்டைக்கு வந்து சென்றது, படகு சரி செய்து புறப்பட்ட பின்னரே உயிர் திரும்பி வந்தது, உச்சி வெயிலும், படகு முழுவதும் கவுச்சி நாற்றமும் வாந்தி வரும் படி செய்தாலும் படகில் இருந்து கரையில் இறங்கிய பின்னரே வாந்தி எடுத்தேன். வாந்தி எடுத்த பின்னரே தலைவலி குறைந்தது.
         
    கச்சதீவில் படகில் இருந்து இறங்க தற்காலிக மிதக்கும் படகு துறை ஏற்பாடு செய்து இருந்தனர்.   கச்சதீவு பற்றி தினம் ஒரு செய்தியாக செய்தி தாள்களில் படித்து வந்த நான் இன்று கச்சதீவில் நிற்கின்றேன் என நினைத்த போது ஆச்சரியமாக இருந்தது, 15 தினத்திற்கு முன் கச்சதீவு பற்றியே எண்ணவில்லை.
    
    கடற்கரை பகுதியிலேயே இலங்கை அரசு செக்போஸ்ட் அமைத்து இருந்தனர், இந்தியாவில் இருந்து வருபவர்களும், இலங்கையில் இருந்து வருபவர்களும்  அந்த செக்போஸ் கடந்தே உள்செல்ல வேண்டும் ஆனால் இலங்கை அரசு எவ்விதகெடுபிடியும் செய்யாமல் அனுமதிக்கின்றனர், பக்தர்கள் கச்சதீவின் மேற்கு கடற்கரையில் இறங்கி கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயம் செல்லவேண்டும், செல்லுவதற்கு பாதை ஏற்படுத்தி மின் வசதியும் செய்து இருந்தனர்.
  
    மரங்களின் கீழ் உள்ள புற்களை அகற்றி பக்தர்கள் தங்கிகொள்கின்றனர், நாங்களும் ஒரு பெரிய மரத்தின் கீழ் இடத்தை சுத்தம் செய்து பெரிய பிளாஸ்டிக் பாய் விரித்து தங்கினோம், இந்திய விழாவை போன்று சிறுசிறு கடைகள் அங்கு இருந்தன , டீ கடையும் இருந்தது ஒரு டீ 20 ரூபாய் நமது பணத்தை வாங்கிகொள்கின்றனர், மேலும் இலங்கை வங்கி ஒன்றும் தற்காலிகமாக முகாம் இட்டு நமது பணத்தை பெற்று கொண்டு இலங்கை பணம் தருகின்றனர், பலர் இலங்கை பணமாக பெற்றுக்கொண்டாரகள். நமது ரூபாய் மதிப்பில் இரட்டிபாக தருகின்றனர், நம் இந்திய மதிப்பில் ஒரு டீ 20 ரூபாய் எனில் இலங்கை மதிப்பில் டீ 40 ரூபாய் என விற்கின்றனர்.
  

    இந்தியாவில் இருந்து வரும் பகதர்கள் தவிர இலங்கையில் இருந்து இரவு 9 மணி வரை பக்தர்கள் படகில் வந்துகொண்டே இருந்தனர்,

    மாலை 5 மணிக்கு புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடக்கியது, முதல் நிகழ்வாக சிலுவைப்பாதை திருப்பலிபூசை நடந்தது, ஒரு பெரிய மரசிலுவையை பக்தர்கள் சுமந்துவர காவிலை சுற்றியுள்ள மைதானத்தை சுற்றி வருகின்றனர் சுமார் 2 மணிநேரம் விழா நடந்தது, அந்த நேரத்தில் கடற்கரையில் பொளர்னமிநிலா வெளிச்சத்தில் நண்பர்களுடன் உட்கார்ந்து அழகை ரசிப்பது  எவ்வளவு ஆனந்தம்.

    கடற்கரை முழுவதும் இலங்கை கொடி தான் பறக்கவிட்டுள்ளனர். சில நண்பர்கள் கடற்கரை மணலில் படுத்துகொண்டணர். குளிர் அதிகம் இருந்ததால் நான் மரத்தின் கீழ் வந்து படுத்துக்கொண்டோம்.




ராஜண்ணாவுடன்

சரவணன், கியூபட் அந்தோணி,  அ.முத்துகிருஷ்ணன், வேல்முருகன். இபி.ராஜ் இவர்களுடன் ராஜண்ணா[பின்பக்கம்]








தங்க இடம் ஏற்பாடு ஆயுத்தம்

தலைப்பைச் சேருங்கள்

செடிகளை ஒதுக்கிய பின் 

  காலை 5 மணிக்கு எல்லாம் எழுந்துவிட்டோம், கடற்கரையில் வந்து குளித்திவிட்டு தெற்கு பகுதிக்கு நடந்து சென்றோம், அங்கு ஓர் இராணுவ கப்பல் நிறுத்தப்பட்டு இருந்தது, அதில் இருந்துதான் கச்சதீவு முழுவதும் தண்ணீர் சப்ளை செய்வதை பார்க்கமுடிந்தது. அதை பார்த்தவாரே தெற்கு பகுதிக்கு சென்றோம் , அங்கு பெரிய பாறைகள் நிறைந்து காணப்பட்டது, அவ்வளவும் பவள பாறைகள், அங்கு காணப்பட்ட அழகை வார்த்தையால் வர்ணிக்க முடியாத அழகு, அந்த பகுதியில் ஓர் முற்றிலும் பாழடைந்த ஓர் கோவிலையையும் கண்டோம். 
      பின் மீண்டும் கோவில் திடலுக்கு திரும்பினோம் காலை  8 மணிக்கு மீண்டும் சிறப்பி திருப்பலி பூசை தொடங்கியது, அதன் பின் தேர்பவணி வந்தது, காலை 10 மணிக்கு கொடியிற்றக்கத்திற்க்கு பின் விழா நிறைவு பெற மக்கள் கூட்டம் கச்சத்தீவின் மேற்குகடற்கரைக்கு புறப்பட்டனர்,
    \]
      மேற்கு கடற்கரை முழுவதும் மனித தலைதான் , அவர் அவர் படகு குழுவை தேடி அலைந்து கொண்டிருந்தனர், காலை 10 மணிக்கு முதல்படகு வர பகதர்கள் ஏறி இந்தியா புறப்பட்டோம், எங்களது படகு 5 வதாக வந்ததால் 10.30 க்கு கச்சத்தீவை விட்டு புறப்பட்டோம்,
  
     இராமேஸ்வரம் வந்தடைந்த போது மதியம் 12 மணி, நாங்கள் இறங்கிய பின் சுக்கதுறையினர் படகு முழுவதும் சோதனை செய்கின்றனர், அதன் பின் மீண்டும் எங்கள் உடமை, அடையாள அட்டை செக்செய்து பின் வெளியேற அனுமதிக்கின்றனர்,

   
       ஒரு மறக்கமுடியாத அனுபவமாக மட்டும்மல்லாது யாருக்கும் எளிதில் கிடைக்காத கச்சதீவு அனுபவமாக அமைந்துபோனது, மீண்டும் அடுத்த வருடமும் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் விருதுநகர் திரும்பினேன்.
    
    என்னுடன் கச்சதீவு பயணத்தில் கலந்துகொண்டவர்கள்
             அ,முத்துகிருஷ்ணன்
             சோபியா
             ராஜண்ணா
             சரவணன்
             கியூபட் அந்தோணி
             மதுமலரன்
             சதீஸ்
             அருண்பாஸ்
             இபி.ராஜ்
             வக்கில் ராபர்ட் குடும்பத்தினர்
              வக்கில் அருண் மற்றும் அவரது நண்பர்கள்
             















































       






நாங்கள் சென்ற படகின் ஓட்டுனரும், படகு ஓனரும்





படங்கள் உதவி.அருண்பாஸ்