சனி, மே 26, 2012

பக்கத்து தெருசூலக்கரைமேடு எனும் பகுதி குடியிருப்புகளாக வளர்ந்து வரும் பகுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ளதால் வேகமாக வீடுகள் அங்குஇங்கும் கட்டப்பட்டும், கொய்யா தோப்புகள் பிளாட்டுகளாக மாறிவரும் பகுதி.
இந்த பகுதியில் நிலங்கள் விலை குறைவாக தான் இருந்தது,அதனால் பலர் வீட்டுமனைகள் வாங்கினர் இதனால் புரோக்கர்களுக்கு கமிஷன் தொகை கிடைப்பதை பார்த்து தள்ளுவண்டியில் அயர்ன் செய்பவரும், அரிசி கடை வைத்தவர்கள் என பலர் புரோக்கர்களாக மாறினர் மாறியவர்கள் கமிஷனுக்கு ஆசைபட்டு இடத்தின் விலையை உயர்த்தினர். அதன்பின்னர் புரோக்கர்கள் சிலர் பிளாட்டுகளை தங்கள் பெயரில் பவராக பதிவு செய்து மேலும் மேலும் இடத்தின் விலையை உயர்த்தி மிக குறைந்த காலத்தில் நாலுமடங்கு உயர்த்திவிட்டனர், பாதைகள் என்பது நேராக இல்லாமல் கோனல்மானலாகவும் ஒரு இடத்தில் பதினைந்து அடியாகவும், சில இடங்களில் இருபதுஅடியாகவும் இருக்கிறது இருபது அடி ரோடு என மணல் லாரிகள் நுழைந்து தடுமாறி போனதும் உண்டு.
வீடுகட்டுபவர்களும் ரோடு நமக்கானது என எண்ணி அங்கேயே மணல்,ஜெல்லி கொட்டி மேலும் பாதையில் தடை ஏற்படுத்தி பாதையில் செல்பவர்கள் சிரமத்தை ஏற்படுத்தியும் வருகின்றனர் பாதையில் செல்பவர்கள் கேள்வி கேட்டால் எதுக்கு இந்த பாதையில் வர என எதிர் கேள்வி கேட்டு பலமுறை சண்டை சச்சரவுகளாகவும் இருக்கும்.
அப்படிபட்ட பாதையில் தான் தினம் அலுவலகமோ அல்லது டவுனுக்கு சென்றாலும் செல்லவேண்டும். அன்றும் என் மகளுடன் பைக்கில் டவுனுக்கு சென்றபோது, அப்பா இந்த பாதையில் வேண்டாம் சுற்றி போகலாப்பா இந்தபக்கம் நாய் விரட்டும்பா என்றால்.
அந்த பாதை முடிந்தவுடன் மெயின் ரோடு வந்து விடும் மேலும் வரிசையாக வீடு இருப்பதால் அந்த இடத்தில் மட்டும் தார்ரோடு போட்டு இருக்கும் அதனால் பலரும் அந்த பாதை வழியாக செல்வார்கள், ஆனால் அந்த பகுதியில் ஒரு நாய் உள்ளது யார் வீட்டு நாய் என்றும் தெரிவதில்லை தெருவில் தான் இருக்கும், பைக் மற்றும் சைக்கிளில் செல்பவர்களை குலைத்து கொண்டு விரட்டி கடிக்க வரும் பல நேரங்களில் பைக்கில் சென்றவர்கள் கீழேவிழுந்துள்ளனர். அன்றும் அப்பா வரேன்லப்பா பயப்படாதே என அந்தபாதை வழியாகவே சென்றேன், நாயை காணவில்லை தொடர்ந்து போகும்போது ஒரு சந்துக்குள் இருந்து குலைத்து கொண்டு நாய் எங்களை துரத்த மகள் பயத்தில் 'ஆ' எனகத்தி விட்டாள், நான் நாய் கடித்துவிட்டதோ என வண்டியை நிறுத்தி பார்த்தபோது ஒன்றுமாகவில்லை, உடன் கீழே கிடந்த கல்லை எடுத்து நாயின் மீது எறிந்தேன் கல் நாயின் மீது படவில்லே என்றாலும் நாய் ஓடிவிட்டது.
நான் கல்லை எறிந்ததை பார்த்தவுடன் அருகில் இருந்த வீட்டுகாரர், ஏன்சார் நாய் மீது கல்லை எறிகிறீர்கள் என்றார்.
நாய் உங்களதா சார்? என்றேன், இல்லை ஆனா எங்க தெரு நாய், கல்லை கொண்டு எறியகூடாது என கோபமாக சொன்னார், சார் நாய் என் மகளை கடிக்க வந்துச்சு பார்த்தீங்கள்ள, அதற்கு அவர் அதெல்லாம் தெரியாது இந்த நாய் இங்கு இருப்பதால் எங்கபகுதியில் திருடுபயமே இல்லை எனவே நாயை அடித்தால் நாங்க சும்மா இருக்கமாட்டோம் நீங்க வேண்னா வேறு பாதையில் போங்க என கூறிவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டார். மனிதனை நாய் கடித்தாலும் பரவாயில்லை என நினைக்கும் இவர்கள் எல்லாம் என்ன ஜென்மமோ, என மனதில் நினைத்துக்கொண்டு பயந்துபோய் நின்ற மகளுடன் புறப்பட்டேன், அதன் பின் மணைவியுடனோ, மகளுடனோ டவுனுக்கு போகவேண்டுமெனில் பக்கத்து தெரு வழியாக போகாமல்,வேறு பாதையில் சுற்றிபோவேன். ஆனால் நான் அந்த பாதையில் போகும் போது நாய் கடிக்க வந்தால் அதன் மேல் எறிய கல்லை பைக்கில் எடுத்துபோவேன். பலமுறை சென்றபோதும் நாய் தட்டுப்படவில்லை.
அன்று மாலை அலுவலகம் முடிந்து வீடு வரும் போது பக்கத்து தெரு நாய் தெருவில் , (நாய் தெரு என என் மகள்தான் பெயர் வைத்தாள்) என்னை நாய் மீது கல்லை எறிந்தால் என திட்டியவரின் வீடு முன் கூட்டமாக இருந்தது, கூட்டத்தில் நின்ற நண்பரிடம் என்ன சார் என கேட்டேன் அதற்கு நண்பர் பைக்கில் ஒருத்தர் போனார் அவரை நாய் விரட்டியது அவர் மிரண்டு போய், வீட்டு வாசலில் நின்றகொண்டு இருந்த இந்த வீட்டுகாரர் பையன் மீது மோதி விட்டதால் கால் எலும்பு உடைந்து விட்டது என்றார், வீட்டுகாரர் என்னைபார்த்தவுடன் தலையை குனிந்து கொண்டார்.,
நான் சிரித்துக்கொண்டேன்.

3 கருத்துகள்:

 1. விளைநிலங்களெல்லாம் விலைநிலங்களாகி வருவது கொடுமை. எனக்கு நாய் என்றால் பயம். அதுவும் இதுபோல் துரத்தி வரும் என்று தெரிந்தால் அந்தப் பக்கம் செல்லவே மாட்டேன்.

  பதிலளிநீக்கு
 2. சித்திர காரர் அவர்களுக்கு வணக்கம், ஆம் நாய் வளர்ப்பவர்கள் எதை பற்றியும் கவலைபடாத சுயநலவாதிகள். கருத்துக்கள் வழங்கியதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 3. கடிக்க வருகிற நாய்க்கும்,துரத்துகிற நாய்க்கும் இருக்கிற வித்தியாசமே சிறுவனின் கால் ஒடிவு என நினைக்கிறேன்.நல்ல பதிவு.விளை நிலங்களை இப்படி விலை ஏற்றி விற்கலாம் என தைரியம் தறுகிற அமைப்பாய் நமது அமைப்பு இருக்கிற வரை இப்படி நடக்கதான்செய்யும்.
  மற்றபடி கொய்யாப்பழ வியாபாரிகளும்,தள்ளு வண்டி வைத்து தேய்ப்பரும் புரோக்கர்கள் ஆவதில் ஆச்சரியமில்லை.அவர்கள் பார்க்கிற தொழிலை விட இதில் வருமானம் கூடக்கிடைக்கிறது.ஆகிறார்கள்.குறுகிய வழியில் சென்று சொத்து சேர்க்கிறார்கள்.நன்றாகக்கூட இருக்கிறார்கள்,ஆனால் வேல் முருகன் சார் இவர்களும்,இவரைப்போன்ற மற்றவர்களையும் ஊக்குவிப்பதும்,இடம் கொடுப்பதும் எது?என்பது இந்த நேரத்து கேள்வியாக உள்ளது. அமிப்பு முறையாகாத வரை நாய்துரத்துவம்,வீட்டுக்காரர் கல்லெறிவதற்கு திட்டுவதும்,சிறுவன் மீது பைக் ஏறி கால் ஒடிவதும் நடக்கத்தான் செய்யும்/

  பதிலளிநீக்கு