24.11.13 ஞாயிற்றுகிழமை
”திருவேடகம்” பசுமைநடை என்ற குருஞ்செய்தி 20 தினங்களுக்கு முன்பே வந்துவிட்டது, நண்பர்களிடம் தகவல் கூற ஏற்கனவே பசுமைநடை வந்து இருந்த நண்பர்களும் , புதிய நண்பர்களும் வருகிறோம் என்றனர், ஆனால் முதல் வாரம் எனக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது, டைபாயிடு காய்ச்சல் எனவே வேலைக்கும் போகமுடியாமல் மருத்துவவிடுப்பு போட பசுமைநடையில் கலந்துகொள்ள விரும்பிய நண்பர்களுக்கோ என்னாச்சு இப்ப எப்படியுள்ளீர்கள் 24ம் தேதி வந்துவிடுவீர்களா என்ற நலம்விசாரிப்பு, 6 தினங்களுக்கு பின் 23 ம் தேதி வேலைக்கு சென்றபோது என் உடல் நலம் எப்படியுள்ளது என்று விசாரிக்காமல் நாளை பசுமைநடை போகலாம் அல்லவா என்றுதான் கேட்டனர், நானும் சிரமம் நீங்கள் போய்வாருங்கள் என்றால் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்றனர்,
6 தினங்கள் வீட்டுக்குள் அடைந்துகிடந்தது மனதுக்கு புத்துயீர்ப்பு அளிப்பதுபோல் போகலாம் என முடிவு செய்து, 24ம் தேதி காலை 5 மணிக்கு விருதுநகரில் இருந்து புறப்பட்டோம், முன் தினம் வருவதாக கூறிய 3 பேர் வராததால் 4பேர் மட்டும் புறப்பட்டோம்,
முன் தினம் இரவு திருமங்லத்தில் இருந்து நண்பர் ரகுநாத் , காலை 6 மணிக்கு திருமங்கலம் ஆனந்தா தியேட்டர் வந்துவிடவும் என உத்திரவு போட்டதால் சரியாக 6 மணிக்கு திருமங்கலம் வந்தால் ரகுநாத்தை காணவில்லை, போனில் அழைத்தால் இதோ வந்துவிடுகிறேன் என கூற.
எங்களுக்கு முன் அங்கு வந்து இருந்த இளஞ்செழியன், வஹாப் ஷாஜ்ஹான், டீ குடித்துகொண்டு இருக்க நாங்களும் அவர்களுடன் இணைத்து கொண்டோம், அதன் பின் ரகுநாத், மற்றும் அவரது நண்பர் தன் இரு குழந்தையுடன் வர, நாங்கள் செக்காணூரணி வழியாக மேலக்கால் சென்றோம், தற்போது செக்காணூரணி பாதை அகலப்படுத்தியுள்ளனர், எனவே பைக் ஓட்ட சிரமம் இல்லை, முன் தினம் மழை காரணமாக அதிகாலை நேரம் என்பதால் குளிர்தான் அதிகம்,
மேலக்கால் தாண்டி சோழவந்தான் சாலையில் காத்து இருந்தோம், வடக்கில் வைகை ஆறு, தெற்கில் வாழைதோப்பு, கிழக்கில், மேற்கில் தென்னம்தோப்பு என அந்த இடம் ரம்மியமாக காணப்பட்டது, காலை 7. 30 மணி இருக்கும் மதுரையில் இருந்து அ.முத்துகிருஷ்ணன் தலைமையில் ஒரு பெரும் பட்டாளம் பைக், கார் என ஒரு ஊர்வலம் போல் அணிவகுத்து வந்தனர், அவர்களுடன் நாங்களும் இணைந்துகொண்டோம்,
வைகை ஆற்றை கடந்து திருவேடகம் வைகை ஆற்று படித்துறையை அடைந்தோம், அந்த நேரத்தில் ஆற்றங்கரையில் கூடியிருந்தோர் இவ்வளவு கூட்டமா என அதிசயமாக பார்த்தனர், பசுமை நடை ஆர்வலர்கள், பைக், கார்களை படித்துறை அருகில் நிறுத்திவிட்டு ஏடகநாதர் கோவில் நோக்கி சென்றோம், சாமி கும்மிட அல்ல கோவிலின் வரலாற்றை அறிந்துகொள்ள கோவிலின் முன் பாதியில் நிறுத்தியுள்ள கோபுரத்தை தாண்டி முதல் பிரகாரத்தில் போய் உட்கார்ந்தோம்,
மதுரையில் இருந்து சோழவந்தான் சாலையில் சோழவந்தான் ஊர் அருகில் உள்ளது, திருவேடகம் நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத இரண்டும் கலந்த ஊர்,
ஏடகநாதர் கோவில் பிரமன், திருமால், ஆதிசேஷன் , கருடன், வியாசர், பராசர், ஆகியோர் வழிபட்ட திருத்தலம் என தலபுராணம் கூறுகிறது, வேலைபாடுமிக்க கருவறை, பிராகாரத்தில் அறுபத்துமூவர் சிலைகள் அழகாக காட்சியளிக்கிறது, தேவாரத்தில் இத் திருதலம் இடம் பெற்றியிருப்பதால் இக்கோவில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஊகிக்கலாம், பின்னர் 13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் விரிவாக்கமும் புனரமைப்பும் செய்தார்கள், 16 ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் கோபுரம் கட்ட முயன்று நிறைவு பெறாமலேயே நின்றுவிட்டது, 1930 ல் நாட்டுகோட்டை செட்டியார்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் கோயிலை புனரமைத்து குடமுழுக்கு செய்துள்ளனர். இங்கு உள்ள கல்வெட்டில் திருஞானசம்மந்தர் மடம் பற்றியும் அதற்கு வழங்கப்பட்ட நிலக்கொடை பற்றியும் உள்ளது. கோவிலின் வரலாற்றை தெரிந்துகொண்டபின் அணைவரும் வைகை படித்துறை நோக்கி சென்றோம்.
இங்கு உள்ள படித்துறையில் உட்கார்ந்தால் மனம் அமைதிபெறும் அவ்வளவு அழகும், பசுமையும், அமைதியும் அங்கு காணப்பட்டது, சமணத்திற்கும், சைவத்திற்கும் எங்கள் மதமே உயர்ந்தது என போட்டி வந்து இரண்டு மதத்தை சேர்ந்தவர்களுக்கும் அனல்வாதம், புனல்வாதம், ஏற்பட்டது அப்போது இரு மதத்தை சேர்ந்தவரகள் தம்மதத்தின் பாடல்களை தனிதனியாக ஓலைசுவடியில் எழுதி வைகை ஆற்றில் ஓடும் நீரில் தூக்கி போட நீர் ஓட்டத்திற்கு எதிராக எந்த மதத்தின் ஓலைசுவடி வருகிறதோ அந்த மதமே உயர்ந்தது, என முடிவு செய்து அதன் படி தூக்கிபோட , ஞானசம்மந்தர் “வன்னியும்மத்தமும்” என்னும் திருப்பதிகம் பாட சைவமத ஓலைசுவடி இங்கு கரை ஒதுங்கியதாக வரலாறு, எனவே ஏடு+அகம் ஏடகம் என்று அழைக்கப்பட்டு பின் திவேடகமாகி போனது,[சமண மதத்தின் ஓலைசுவடிகள் இப்போது திருப்பாசேத்தி என அழைக்கப்படும் ஊரில் கரை ஒதுங்கியதாக கூறுகிறார்கள்]
ஏடு கரை ஒதுங்கிய இந்த வைகை ஆற்றின் கரையில் அழகான படித்துறை அமைத்துள்ளனர், ஒரு பக்கம் சப்தமாதாக்கலும், இன்னோறு பக்கம் ஏடு கரை ஒதுங்கிய காட்சி கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது.
படித்துறை மண்ணாகவும், தூசியாகவும் இருந்தது, பசுமை நடை ஆர்வலர்கள் அந்த படித்துறை முழுவதும் கூட்டி சுத்தம் செய்தனர், சுத்தம் செய்ததை அந்த ஊர் மக்கள் சிலர் ஆச்சரியமாக பார்த்தனர்.
சுத்தம் செய்த பின் கரைஓரம் ஓடிய நீரில் இறங்கி [முட்டிகால் வரை ] காலை நனைத்துகொண்டே கடந்து ஆற்றின் மையம் நோக்கி நடந்து சென்று உட்கார்ந்தோம் அ.முத்துகிருஷ்ணன் அணைவரையும் வரவேற்று பேச ஐயா திரு. சாந்தலிங்கம் அவர்கள் மேற்கண்ட வரலாற்று சிறப்பை எடுத்துரைத்தார்கள்.
மதுரை குரு தியேட்டரில் முதல் விரகனூர் அணை வரை மணலே இல்லாத வைகை ஆற்றையே மதுரை மக்கள் பார்த்து இருப்பார்கள், மதுரையின் கழிவு நீர் வாய்காலாகவும் குப்பை கொட்டும் இடமாகவும் பயன்படுத்துவது வேதனை யளிக்கிறது , ஆனால் இங்கு கண்ணுக்கு எட்டிய வரை மணல் தான் நீர் ஓடாவிட்டாலும் கரை ஓரம் தென்னம்தோப்புகள் பசுமையாக காட்சியளிக்கிறது.
வைகை ஆறு கடலில் கலக்காத ஆறு என்பர், வைகை ஆற்றில் ஓடும் நீர் ஆர்.எஸ். மங்கலம் கண்மாய், இராமநாதபுரம் பெரியகண்மாயில் சேர்கின்றது எனவே கடலில் சேர்வதில்லை, கண்மாய் நிறைந்து அதன் பின் உபரி நீர்தான் கடலில் கலக்கும், ஆனால் வைகை அணை கட்டிய பின் பெரியகண்மாய் நீர் வரத்தின்றி வற்றி போய்விட்டது.
சாந்தலிங்கம் ஐயாபேசிய பின் ஆற்றுக்குள்ளேயே காலை உணவு வழங்கப்பட்டது, மணலில் உட்கார்ந்து காலை உணவு சாப்பிட்டது ஆனந்த அனுபவம், உணவுக்கு பின் குவாலிட்டி நடண குழுவினர் ஆற்று மணலில் மீன்கள் போல் தாவி துள்ளி குதித்து சாகசம் காட்டினர், பசுமை நடை ஆர்வலர்கள் ஆச்சரியமாக பார்த்தனர், அவ்வளவு அழகாக இருந்தது,
|
புகைபடம் எடுத்தது இபி ஜெய் |
அதன் பின் அணைவரும் ஆற்று கரை வந்தோம், படித்துறையில் உட்கார்ந்து புகைபடம் எடுத்துகொண்டோம்,, ஒவ்வொரு பசுமைநடையிலும் ஸ்ரீராம், சுந்தரராசன், செல்வம்ராமசாமி, ராஜன்னா, ரகுநாத், குணா என புகைபட நிபுணர்கள் எடுக்கும் புகைபடங்கள் அழகாக பேஸ்புக்கில் பதிவு செய்து வருகின்றனர், இப்போது புதிதாக பசுமைநடையில் வந்து கலந்துகொண்டு புகைபடங்கள் எடுத்து மனதை கொள்ளை அடித்து வரும் அருண்பாஸ், இபி ராஜ் ஏகே 47 துப்பாக்கி போல் கேமிராவை கொண்டு வந்து மிரட்டும் அன்பு உள்ளங்களை சந்தித்து பேசினேன்,
பைக்கை எடுக்கும் போது அங்கு ஒரு இளவட்டக்கல் இருந்தது , உடன் தூக்கிபார்க்க ஆசை, உடன் வந்த நண்பர் முருகன் ஒரே மூச்சில் தூக்கி முதுகின்பக்கம் போட்டார், கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர், சப்தம் கேட்டு குவாலிட்டி நடனகுழுவினர் அங்கு வர அவர்களும் இளவட்டக்கல்லை தூக்கினர், இளம் இரத்தம் என்பதை நிரூபித்தனர், மேலும் சிலர் முயற்சி செய்தனர், தூக்கமுடியவில்லை திருமங்கலம் ரகுராம் தூக்கினார் , உடனே நானும் முயற்சிசெய்ய இளவட்டக்கலை தூக்கினேன் நெஞ்சுவரை தூக்கினேன் இளம் பசுமைநடை ஆர்வலர்கள் தூக்குங்கள் என ஆரவாரம் செய்ய , விருதுநகர் நண்பர்களோ உடல்நலம் சரியில்லை வேண்டாம் என எச்சரித்தனர், என்னாலும் நெஞ்சுக்கு மேல் தூக்க முடியவில்லை, இந்த விளையாட்டை ஊர்மக்களும் ரசித்தனர்
அதன்பின் நண்பர்கள் சிலர் நாகர் தீர்த்தம் பார்க்க சென்றனர், நான் வழக்கம் போல் பசுமை நடையின் பசுமையான நினைவுகளுடன் வீடு திரும்பினேன்,