ஞாயிறு, ஜூன் 29, 2014

அப்பாவின் மரணம்

                                             அப்பாவின் மரணம்




       அன்று அலுவலகத்தில் கன்ரோல் பிரிவில் பணி செய்பவர் திடீர் என விடுப்பு போட்டதால் நான் பணிசெய்யவேண்டிய நிலை. விருதுநகர் அருகில் ஒரு விபத்து நாகர்கோவில் செல்லும் பேருந்து லாரியுடன் மோதி பெரும்விபத்து, 15 நபர்களுக்கு மேல் காயம் , எனவே விபத்து விபரம் காயப்பட்டவர் நிலை  பற்றி தகவல் கேட்டு கொண்டு இருக்கும் போது ,காலை மணி 10 இருக்கும் , திருமங்கலத்தில் இருந்து அம்மாவிடம் செல்பேசியில் அழைப்பு வந்தது, அவசரமாக என்ன என கேட்க அப்பாவுக்கு உடம்புக்கு முடியவில்லை  ஆஸ்பத்திரிக்கு கூட்டி செல்கிறேன், என அப்பாவுக்கு வீஷிங் இருப்பதால் அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு கூட்டி செல்வார்கள், அதுபோல் இருக்கும் என எண்ணி நீங்கள் கூட்டி செல்லுங்கள் நான் மாலைவந்து பார்க்கிறேன் என பேசி கொண்டு இருக்கும் போது மீண்டும் அலுவலக போன் வர அம்மாவிடம் நான் பிறகு பேசிக்கொள்கிறேன் என போனை கட் செய்து விட்டு அலுவலக வேலையில் மூழ்கினேன்.
  
   விபத்து விபரங்கள் சேகரிப்பதில் இருந்ததால் அப்பா எப்படியுள்ளார்கள் என்பதை கேட்க மறந்துபோனேன்,  மதியம் 2மணி இருக்கும் அம்மாவிடம் இருந்து மீண்டும் போன் பதட்டத்துடன் செல்லை எடுத்து பேசினேன் அப்பா எப்படியுள்ளார்கள் என கேட்டேன், அப்பாவுக்கு ரொம்ப முடியலைமூச்சு விட முடியவில்லை, எனவே மதுரைக்கு கூட்டி செல்கிறேன் உடன் வா, என. அம்மா அழுதுகொண்டே போனை கட்செய்தார்கள்.

  எனக்கு உடன் வியர்த்து விட்டது, எனக்கு கன்ரோல் பணி என்பதால் மாற்று நபர் வந்த பின்னரே என் பணியை முடிக்கமுடியும், அச்சமயம் பார்த்து டெக்னிக்கல் பிரிவில் பணிபுரியும் முருகன் என் நிலை அறிந்து நான்  பார்த்துகொள்கிறேன் என கூறிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டேன் என் மனைவியும் தயாராக இருக்க மதுரை புறப்புட்டேன்,
   பஸ்ஸில் செல்லும் போது அம்மாவுக்கு போன்போட்டேன், போனை எடுக்காததால் மேலும் பதட்டமானது, பதினைந்து நிமிடம் கழித்து அம்மாவிடம் இருந்து போன் எடுத்து என்ன என கேட்டபோது, அப்பாவை மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐ.சி.யூ வில் சேர்த்துள்ளோம் எனகூறி விட்டு போனை கட் செய்துவிட்டனர், மருத்துவமனையை அடைந்தபோது மாலை 6 மணி, தங்கை உமா, லதா அங்கு இருந்தனர், அம்மா என்னை பார்த்ததும் அழுதனர், எனக்கு உடம்புக்கு முடியவில்லை எனில் ஆஸ்பத்திரிக்கு குறிப்பா ஐசியூ வில் அனுமதிக்காதீர்கள் என சொல்லுவார்கள் இப்ப அப்பாவை ஐசியூ வில் சேர்க்கும் படி ஆனதே என அம்மா அழுதார்கள்,

  ஐ.சி.யூ கதவை திறந்து கொண்டு சென்று அப்பாவை பார்த்தபோது, அதிர்ந்து விட்டேன், மூக்கு வழியாக டியூப் சொருகி நெஞ்சு முழுவதும் வயர் சொருகி மானிடரில் செக்செய்து கொண்டு இருந்தார்கள், எனக்கு பேச்சே வரவில்லை கண்ணில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது, அப்பா, அப்பா என அழைத்தேன் அப்பா கண் முழித்து பார்த்தார்கள், ஆனால் ஒன்றும் பேசவில்லை என்னை பார்த்துகொண்டே இருந்தார்கள், என்னால் தாங்க முடியவில்லை, அங்கு நிற்க தைரியம்மில்லாமல் வெளியே வந்து விட்டேன்.
  ஐ.சி.யூ வின் வாசலில் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்துவிட்டேன், அப்பாவின் நினைவுகள் என் மனதுக்குள் அலைபாய்ந்து கொண்டு இருந்தது, அப்பாவும் அம்மாவும் என் மகள் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவம் படிப்பதால் அவளுக்கு துணையாக திருமங்கலத்தில் வீடு எடுத்து உடன் இருந்தனர், என் மகள் அப்பா, தாத்தாவுக்கு இப்ப அடிக்கடி மூச்சி இறைக்கிறது, எனவே பேசாமல் விருதுநகரில் நம் வீட்டில் வைத்து கொள்வோம், என்றால், அம்மா தான் படிப்பு முடியும் வரை இங்கே இருக்கிறோம், என தடுத்துவிட்டனர்.
    
      இரவு 8 மணி இருக்கும் மருத்துவர் வந்து பார்த்துவிட்டு வெளியே வந்தார்கள் , அப்பா எப்படியுள்ளார்கள் என கேட்ட போது இப்போது பரவாயில்லை பிரஷர் அதிகமாக உள்ளது, பார்ப்போம் என கூறிவிட்டு லிப்டில் ஏறி சென்று விட்டார், நர்சிடம் கேட்டால் மருந்து சீட்டை தந்து விட்டு உடன் மாத்திரை வாங்கிவாருங்கள், இனி நாளை தான் டாக்டர் வருவார்கள் என கூறி விட்டு சென்றுவிட்டனர்.

   நான் மட்டும் இரவு ஆஸ்பத்திரியில் தங்கினேன், அம்மாவும், மனைவியும் தங்கைவீடு சென்றுவிட்டனர், மறுநாள் காலை {7.5.14} 6 மணிகெல்லாம் மனைவி , அம்மா, தங்கை வந்துவிட்டனர், அப்பாவை சென்று பார்த்தபோது நன்றாக பேசினார்கள், ஆனால் மூச்சு விட சிரமப்பட்டனர், காலை 10 மணிக்கு   டாக்டர் வந்து பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, எப்படி சார் உள்ளார்கள், என்ற போது பிரஷர் குறையவில்லை , பிரஷர் குறைந்தால் தான் எதுவும் சொல்லமுடியும் என்றார்கள் யூரின் போனால்தான் பிரஷர் குறையும் பார்ப்போம் என  கூறிவிட்டு சென்றுவிட்டார்கள். மாத்திரை கேட்கும் போது மாத்திரை, மருந்து வாங்கிதந்தோம் ,
   மாலை நன்றாக இருப்பதால் நான் விருதுநகர் சென்றேன் அன்று இரவு  மூத்த மாப்பிள்ளை ஆஸ்பத்திரியில் தங்கினார்கள், நான் விருதுநகர் சென்றபின் மனைவி போன் செய்தால் மாமா உங்களையும் உங்கள் தம்பியையும் தேடினார்கள் என்றால் மாமா இன்று ஏதோ போல் உள்ளனர் என்றால் அப்ப நான் கிளம்பி வரவா என்றேன் இல்லை காலையில் வாங்கள் என்றால் அன்று சரியான துக்கம் வரவில்லை,

     மறுநாள் [ 8.05.14] காலை நான் என் மகள்கள் பிரியா, பிரீத்தி இருவரையும் கூட்டி கொண்டு மதுரை ஆஸ்பத்திரிக்கு சென்றேன், நான் செல்லும் முன் சென்னையில் இரண்டாவது தங்கை உஷா, மகன் விக்கியுடன் வந்து இருந்தால் , அப்பா அவளிடம் நன்றாக பேசினார்கள், எனவே அவளும் அக்காவீட்டுக்கு போய்விட்டு வந்துவிடுகிறேன், என கூறி சென்றால், அப்பா தம்பி வந்துவிட்டானா, என கேட்டார்கள் அவன் இப்ப வந்துவிடுவான் என கூறிவிட்டு வெளியே உட்கார்ந்து இருந்தோம், நண்பர்கள் முத்துகிருஷ்ணன்,  கியூபட், மதுமலர் உடன் இருந்தனர் அவர்கள் இருந்தது மனதுக்கு ஆறுதலாக இருந்தது, காலை 10 மணி இருக்கும் ஐசியூ வில் இருந்து டாக்டர் அவசரமாக என்னை அழைத்தார்கள் பதட்டத்தோடு உள்சென்றேன், அப்பாவுக்கு திடீர் என பல்ஸ் ரொம்ப குறையுது, காப்பாத்த முடியாது, வென்டிலேட்டரில் வைக்கவா என்றார், இல்லை டாக்டர் நாங்கள் கூட்டி செல்கிறோம், என அழுதுகொண்டே கூறிவிட்டு வெளியே வந்து அம்மாவிடம் அப்பாவை காப்பாத்தமுடியாதாம் கூறியபோது அம்மா அப்படியே விக்கித்துபோய் விட்டனர், நான் தங்கைகளுக்கு போன் செய்து உடன் வாங்க அப்பாவை காப்பத்தமுடியாது என கைவிரித்துவிட்டனர்.
      அடுத்த பத்தாவது நிமிடத்தில் தங்கைகள் ஆஸ்பத்திரிக்கு அப்பா என கதறியபடி வந்திவிட்டனர், தங்கைகள் தடுப்பையும் மீறி ஐசியூ க்குள் சென்றனர், அங்கு டாக்டர் அவர்களிடம் வெண்டிலேட்டரில் வைத்து பார்க்கலாம் என்றார்கள் உடன் சரி வைக்க ஏற்பாடு செய்யுங்கள் என கூறிவிட்டார்கள்,
   வெளியே வந்து அம்மாவிடம் கூறினார்கள் , அம்மா அப்பா வை சிரப்படுத்தவேண்டாம் மிஷின் எல்லாம் வேண்டாம் , உயிர் இருக்கும் போதே அண்ணன் வீட்டிக்கு கூட்டி போய்விடுவோம், என்றார்கள், கடைசி முயற்சி செய்து பார்ப்போம் வெண்டிலேட்டரில் வயதானவர்களை வைத்தால் பிழைப்பது கடினம் தான் என்றாலும் 2 சதவீதம் பிழைக்க வாய்ப்பு உள்ளது, எங்கள் அத்தையை இப்படி வைத்து பிழைத்து ஆறு மாதம் உயிருடன் இருந்தார்கள் என் தங்கை உஷா கூறவும் , சரி என அம்மா ஒத்துகொண்டனர்.
    வெண்டிலேட்டரில் வைத்தபின்னரே தம்பி வந்தான் சென்று பார்த்து வந்து அழுதான், அப்பா எங்களை அனைவரையும் ஒன்னா பார்க்க ஆசைபட்டனர், இப்ப மகன், மகள் , மாப்பிள்ளைகள், பேரன், பேத்திகள் என வெளியே அனைவரும் இருக்க அப்பா ஐசியூ வின் உள்  நினைத்தபோது மனம் கனத்தது.
     ஒவ்வொருவராக உள் சென்று பார்த்தபோது அப்பா முழித்து இருந்தனர் அப்பா என அழைத்தால் திருப்பி பார்த்தனர், பிழைத்துவிடுவாரா, பிழைத்துவிடவேண்டும் என ஒவ்வொருவர் மனதிலும் வேண்டுதல். இரவு 8 மணிக்கு டாக்டர் வந்தார் பார்த்தார் வெளியே வந்து பார்ப்போம் என கூறிவிட்டு   சென்றார். அன்று இரவு நான் தங்கை மகன்கள் விக்கி, விஷால் மூவரும் ஆஸ்பத்தரியில் தங்கினோம்,
      9.5.14 காலை 2 மணி இருக்கும் அம்மா தங்கை வீட்டில் இருந்து வந்தார்கள் என்னம்மா என நான் கேட்டேன் அப்பா தண்ணி கேட்டார்கள் என கூறிய வாரு ஐசியூ க்குள் சென்றனர், அம்மா அழுகவும் நர்சு அனுமதித்தார்கள், அப்பா வை பார்க்க, பார்த்துவிட்டு வந்து அழுது கொண்டே இருந்தார்கள்,

     7 மணிக்கெல்லாம் தங்கை, தம்பி, என அனைவரும் வந்து விட்டனர், 9மணிக்கு ஒருவர் பின் ஒருவர் சென்று பார்த்தோம் அப்பா, கண் முழித்து காணப்பட்டாலும், பிழைக்கமாட்டார் என தோன்றியது, 10 மணிக்கு டாக்டர் வந்து பார்த்தார்கள், 11 மணிக்கு வெண்டிலேட்டரில் இருந்து யூனிட் குறைத்து பார்ப்போம் அவர்களாக மூச்சு விட்டார்கள் எனில் பிழைத்து விடுவார்கள் என கூறிவிட்டு வழக்கம்போல் லிப்ட் ஏறி சென்றுவிட்டார்.
      மதியம் தங்கை உஷாவும், தங்கை மகள் வித்தியாவும்[ பல் டாக்டர்] ஐசியூ விற்குள் சென்று பார்த்து விட்டு வந்தார்கள், அப்பா பிழைப்பது கஷ்டம் ரிப்போர்டில் நாட் இம்ரூவ்மெண்ட் என ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை எழுதியுள்ளது என்றால், நான் சென்று உள்ளே பார்க்க முயன்றபோது நர்ஸ் அனுமதிக்கவில்லை, எனவே சப்தம் போட்டேன் ஐசியூன்னு சொல்லுறீங்க டாக்டரே இல்லை நாங்க அப்பா பிழைத்தி விடுவார் என நம்பி இருந்தால் ஒன்னுமே சொல்லமாட்டிறீங்க டாக்டரை கூப்பிடு என சப்தம்போட , நர்ஸ் உடன் டாக்டருக்கு போன்போட்டு சொல்ல ஆபரேஷன் தியேட்டரில் இருந்ததால் 9 மணிக்கே வந்தார்கள் ,

   டாக்டரை சென்று தங்கை பார்த்த போது கண்ணாடி போட்டவரை வரசொல்லுங்க என கோபமா கூறவும்,நான் உள் சென்றேன். என்னை பார்த்தவுடன் ஐசியூ விற்குள் இப்படி கோபமாக பேசகூடாது என கோபமாக பேசினார், நானும் அப்புறம் என்ன சார் காலை 11 மணிக்கு அப்பா நிலை பற்றி சொல்றீங்கன்னு சொன்னீங்க ஆனால் இன்றும் வெண்டிலேட்டருக்கு பணம் கட்ட  சொல்லுறீங்க இவ்வளவு நேரமா ஐசியூ வில் டாக்டரே இல்லை அப்பா நிலை என்ன என கேட்டா டாக்டர் வருவார் என மட்டும் சொல்றாங்க என கோபமா நானும் கேட்க டாக்டர் கோபத்தை குறைத்து கொண்டு, சரி உங்க நிலை புரிகிறது, என கூறி விட்டு அப்பாவுக்கு நுரையிரல் பாதிப்பு அதிகம் உள்ளதால் காப்பாற்ற இயலாது, எனவே வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என்றார், அதற்கு தங்கைகள் அப்பா உயிர் அண்ணன் வீட்டில் தான் போகவேண்டும் எனவே அதற்கு உதவுங்கள் என்றவுடன்.
    வெர்ண்டிலேட்டரில் இருந்து எடுத்தவுடன் இறந்து விடுவார்கள் எனவே வெண்டிலேட்டர் உள்ள ஆம்புலன்ஸ்ஸில் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன் , அங்கு அப்பாவை வீட்டுக்குள் கொண்டு வந்த பின் வெண்டிலேட்டரை ரிமூவ் செய்கிறோம் என டாக்டர் கூறினார்கள். வெண்டிலேட்டரில் இருந்து எடுத்தவுடன் ஒரு சில நிமிடத்தில் இறந்து விடலாம், உங்கள் கண்முன் அப்பாவின் உயிர் பிரியும் அச்சமயத்தில் நீங்கள் அனைவரும் தைரியமாக இருக்கவேண்டும், என்றார். சரி என ஒத்துகொண்டோம்.

   அன்று இரவு என் மனைவி, அம்மா, என் பிள்ளைகள் தம்பி மனைவியை விருதுநகர் அனுப்பிவிட்டு, நான் தம்பி, தங்கைகள், என ஐந்து பேர் மட்டும் அங்கு நின்றோம், மறுநாள் காலை 6 மணிக்கு டிஸ்சார்ஜ் என்பதால் தம்பி, தங்கைகள் வீட்டுக்கு செல்ல நான், தங்கை பிள்ளைகள் விக்கி,விஷால்,ஆஸ்பத்திரியில் தங்கினோம். தூக்கம் வரவில்லை, அப்பாவின் நினைவுகளுடன் நேரம் கடந்து சென்றது,

   10.6.2014 காலை 5.30 மணி இருக்கும் ஐசியூ வார்டுபாய் வந்து அப்பாவுக்கு கட்டி விட வேஷ்டி வேண்டும் என்றார், தங்கைகளுக்கு போன் செய்ய எண்ணிய போது தங்கைகள் உமா,உஷா, லதா, தம்பி சுரேஷ் வந்துவிட்டார்கள், வெளியே ஆம்புலன்ஸ் ரெடியாக நின்றது, தாய்மாமா  ஜெகதீஷன், பாலுமாமா வந்து இருந்தார்கள், நண்பர்கள் கியூபட், மதுமலரன் வந்து விட்டனர், 6 மணிக்கு ஐசியூ வில் இருந்து அப்பா வை ஸ்டிச்சரில் கீழே கொண்டு வந்து ஆம்புலன்ஸ்ஸில் ஏற்றினார்கள்.
     அப்பாவை வண்டியில் ஏற்றும் போது உடம்பு அசையவே இல்லை அப்பா இறந்துவிட்டார்களோ என அய்யமாக இருந்தது, ஆம்புலன்ஸ்சில் நான், பாலு மாமா, ஜெகதீசன் மாமா, விக்கி ஏறிகொண்டோம். காரில் தங்கைகளும், இன்னொருகாரில் கியூபட், மது, தங்கை குழந்தைகளும் ஏறிகொண்டனர். ஆம்புலன்ஸ் விருதுநகரை நோக்கி சென்றது.
     7 மணி என் வீட்டு முன் வண்டி நிற்க நண்பர்கள் உதவியுடன் வீட்டுக்குள் அப்பாவை கொண்டு சென்று கட்டிலில் படுக்க வைத்து வாயில் இருந்து வெண்டிலேட்டர் டியூப்பை கழட்டும் போது அப்பா பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தனர், அப்பா இறந்துவிட்டார்களோ என எல்லோரும் எண்ணிய போது அப்பா கண்ணைன் திறந்து பார்த்தார்கள், நன்றாக மூச்சை இழுத்துவிட்டனர், அப்பா, அப்பா, தாத்தா என்ற குரலே என் வீடு முழுவதும் அலைபாய்ந்தது.
 அம்மா அப்பாவை பார்த்து என்னங்க முருகானந்தம் வீட்டுக்கு விருதுநகர் வீட்டுக்கு வந்து விட்டோம் என அழுதுகொண்டே சொல்ல அப்பா வீட்டை சுற்றிலும் பார்த்தார்கள் அவர்கள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் தெரிந்தது உடனே கையை வைத்து வேஷ்டியை கட்டினார்கள், எங்களுக்கும், உறவினர்கள், நண்பர்கள் என கூடியிருந்தவர்களுக்கு ஆச்சரியம், இடுப்பை தூக்கி வேஷ்டியை சரிசெய்து கொண்டே வலதுகாலை தூக்கி இடது கால் மீது போட்டுகொண்டணர்.எப்போதும் படுக்கும் போது இடது கால்மீது வலதுகாலை போட்டு தான் தூங்குவார்கள்.  எங்களை பார்த்து ஏதோ பேசினார்கள், என்ன சொல்லுகிறார்கள் என எங்களுக்கு புரியவில்லை, எனக்கு ஒரு நம்பிக்கை அப்பா பிழைத்துவிடுவார்கள் என , அதற்குள் அம்மாவும் உறவினர்களும் அப்பாவுக்கு பால் தந்தனர், நான் வேண்டாம் என்றபோதும் அவர்கள் கேட்கவில்லை.
   பால் குடித்த அரை மணிநேரம் நன்றாக இருந்தார்கள், அதன் பின் பல்ஸ் வீக்கானது கால் அசைவு நின்றது, அடுத்து கை அசைவு நின்றது கண்ணை மூடிக்கொண்டனர், தொண்டை அருகில் மட்டும் துடிப்பு இருந்தது, பத்துநிமிடம் இருக்கும் கண்ணை திறந்து பார்த்தனர், உதட்டில் புன்னகை தோன்றியது, அடுத்த நிமிடம் துடிப்பு நின்றது.

  இறந்த அந்த நிமிடம் அப்பா என கத்தி அழுத தங்கைகளை தேற்ற இயலாத நிலையில் மொளனமாக நின்று கொண்டிருந்தேன். என் மகளுக்கு திருமணம் முடியும் வரை கண்டிப்பாக இருப்பார்கள் என எண்ணினேன், அப்பா இறந்த முதல் நாள்தான் என் மகள் ஹோமியோபதி மருத்துவராக சென்னையில் பதிவு செய்துவிட்டு வந்தால் ஆனால்  என் மகள் வரும் முன்னே  அப்பா இறந்துவிட்டார்கள். 

    அப்பாவின் கடைசி ஆசை கண் தானம் , உடல் தானம் செய்ய வேண்டும் என விரும்பினர், ஆனால் கண் தானம் மட்டுமே செய்தோம்.

     அப்பா இறந்துவிட்டார்கள் என்பதை இன்னும் என்னால் நம்பமுடியாதநிலையில்….