புதன், ஏப்ரல் 18, 2018

எஸ்.அர்ஷியா நினைவேந்தல்


அர்ஷியாவின் மரணம்,
8.4.2018 இரவு 12 மணிக்கு உறவினர் துர்க்காவிடம் இருந்து போன் மாமா அர்ஷியா இறந்துவிட்டாராம் உண்மையா என்று, தூக்கிபோட்டது...
உடன் பேஸ்புக்கில் பதிவுகளை பார்த்தால் உண்மை என்றது.
அந்த இரவிலும் அடுத்துஅடுத்து நண்பர்கள் இறந்தசெய்தியை அதிர்ச்சியுடன் பதிவுசெய்தவாறு இருந்தனர்...
நானும் சில நண்பர்களுக்கு  போனில் தகவல் கூற அந்த இரவிலும் சிலர் எனக்கு போன் செய்து உண்மையா என கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
அன்று இரவு முழுவதும் துக்கத்தில் அவரது நட்பை அசை போட்டபடி இருந்தேன்..
அன்று காலைதான் 11மணிக்கு மதுரையில் இருந்து போன் செய்தேன் சார் நான் மதுரை வந்துள்ளேன் எங்கே இருக்கிறீர்கள் என்றேன். அவர் நான் சென்னையில் உள்ளேன், புத்தகம் சம்மந்தமான வேலை என்றார், நான் நாளை விருதுநகர் முடிந்தால் வருகிறேன், என்றார்.
ஆனால் இரவு அவரது மரணசெய்திதான் வந்தது...
 காலை மதுரையில் அவரது வீடு சென்றபோது எனக்கு முன்பாக பல இலக்கிய நண்பர்கள் அங்கு இருந்தனர்.
 வீட்டின் உள் இறுக்கமான மனதுடன் சென்றேன், குளிர் பெட்டியில் அவரது உடல் தூங்குவது போல் இருந்தது.
கடைசியாக அவரது முகத்தை பார்த்து விட்டு வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து இருந்தேன்.
எப்போது வீட்டுக்கு வந்தாலும் வாங்க சார் என சாப்பிட வைத்து வெகுநேரம் பேசிய படி இருப்பார் வீடு புறப்படும் போது ஏதேனும் புத்தகம் கொடுத்து அனுப்புவார், இன்று வெளியே நான் அமர்ந்து இருக்க அவர் உள்ளே
மீளாதூக்கத்தில் இருந்தார்.
மதுரையை நேசித்தவர் மரணம் வெளியூரில் நடந்தது நண்பர்களுடன் இரவு எட்டு மணிக்கு பேசிக் கொண்டு இருக்கும் போது அப்படியே சரிந்து இறந்துள்ளார்.
9.4.18 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு அவரது உடல் முனிச்சாலையில் உள்ள கபர்ஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டது...

14.4.18 அன்று காலை மதுரையில் அவருக்கு நினைவேந்தல் இலக்கிய நண்பர்கள் சார்பாக நடத்தப்பட்டது. ஏராளமான நண்பர்கள் மதுரை, நெல்லை, திருப்பூர், சென்னை, கடலூர்,கோவை, திண்டுக்கல் என பல்வேறு ஊர்களில் இருந்து கலந்து கொண்டனர்.
பலர் அவரை பற்றி சிறப்பாக பேசினார்கள்  சிலரின் பேச்சு மனம் கனக்க செய்தது. சிலரின் பேச்சு கண்ணீர் வரவழைத்து. என்னையும் பேச சொன்னார்கள் ஆனால் பேசும் நிலையில் நான் இல்லை...
முதலில் பேச சொல்லி இருந்தால் பேசியிருக்கலாம்.


அர்ஷியா அவர்களுடன் எனது முதல் சந்திப்பு இன்றும்  நினைவில் உள்ளது, உங்கள் நூலகம் புத்தகத்தில் அவர் "நீலகண்டபறவையை தேடி" என்ற கட்டுரை எழுதியுள்ளார் அதை படித்தபின் அவர் எழுதிய ஏழரைப்பங்காளி நாவல் பற்றி அறிந்து அந்த புத்தகத்தை வாங்கி படித்தேன், படித்து நாவலைப் பற்றி விமர்சனம் எழுதி அனுப்பினேன்.
கடிதம் கிடைத்த உடன் எனக்கு போன் செய்தார்.மதுரைக்கு வரும்படி உடன் விடுப்பு போட்டு மதுரையில் நியூ செஞ்சுரி புத்தக கடையில் சந்தித்தேன்.
முதல் சந்திப்பே இருவரையும் நட்பாக்கியது.
இருவரும் அங்கிருந்து மீனாட்சியம்மன் கோவில் சித்திரை வீதியில் நடந்தவாறு நாவலை பற்றி பேசியபடி மஹால் சென்று பின் மீண்டும் புத்தக கடைக்கு திரும்பினோம்.
என் மீதுள்ள பாசத்தில் அகஸ்டஸ் என்ற புத்தகம் வாங்கி அதில் அன்புடன் நண்பர் வேல்முருகன் என (14.10.2011)
தேதியுடன் கையெழுத்து போட்டு தந்த புத்தகம் பொக்கிஷம்மாக உள்ளது.
அவரின்
முதல் சந்திப்பே வரலாறாக எனக்கு பதிவானது.
அப்போது அவர் பேஸ்புக்கில் இல்லாமல் இருந்தார், அதன் பின்னர் இணைந்தார்.
அதன் பின்னர் மதுரை வரும் போது எல்லாம் சந்திப்பு நடந்தது...
அவரது பைக்கில் மதுரை மற்றும் சுற்றுப்புறங்களில் சுற்றாத இடம் இல்லை...
இஸ்மாயில் புரம் எல்லா தெருவும் சுற்றி முடிவில் தாசில்தார் இஸ்மாயில் கல்லறைக்கு வந்து அதன் வரலாற்றை எனக்கு விளக்கினார்...
அடுத்த ஒன்பது மாதத்தில் அதே கல்லறையில் வந்து துயில் கொள்வார் என கனவிலும் நினைத்துப் பார்க்கவே இல்லை...
இன்னும் மதுரையை பற்றி அதிகம் எழுதுவார் என்ற எண்ணம் கனவாகிபோனது.
தினமும் அவர் நினைவு வந்து செல்கிறது...





கடைசியாக அவருடன் 17.12.17 அன்று நாகதீர்த்தம், மற்றும் திருவேங்கடம் சென்றோம்.  வைகை ஆற்றில் புகைப்படம்  எடுத்தேன்...
அந்த புகைப்படங்கள் சில இணைத்துள்ளேன்...