அதிகாலை 5 மணி, விருதுநகரில் இருந்து பைக்கில் பசுமைநடைக்கு புறப்பட்டேன் முதல்நாள் மழை காரணமாக குளிர் ஹெல்மேட் அணிந்ததால் சற்றே குளிரைதாங்கி கொள்ள முடிந்தது. மதுரையில் காளவாசல் பகுதியில் சந்தித்து அங்கிருந்து முத்துபட்டி புறப்படுவது என ஏற்பாடு நான் மதுரை சென்றால் தாமதமாகும் என்பதால் நான்குவழி சாலை வழியாக நாகமலைபுதுக்கோட்டை வந்துவிட்டேன். அங்கு முதல் முறையாக பசுமைநடையில்கலந்து கொள்ளும் என்னுடன் பணி பார்க்கும் தம்பி சரவணகுமாரும் வந்துவிட சிறிது நேரம் பசுமைநடை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்.
மதுரையில்
காளவாசல் பகுதியில் பசுமைநடை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து காலை 6.40 மணிக்கு 52வது பசுமைநடை
முத்துபட்டி நோக்கி பைக் மற்றும் காரில் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு விட்டதாக நண்பர்
உதயகுமார் தகவல் கூறினார். பசுமைநடை ஆர்வலகளின் வாகனஅணிவகுப்பு நாகமலையை கடக்கும் போது
நாங்களும் அவர்களுடன் இணைந்து கொண்டோம்,
உசிலம்பட்டி ரோட்டில் தொடர்ந்து பயணம் செய்தோம்,
காமராசர் பல்கலைகழகத்திற்கு சற்று முன்பாகவே இடது பக்கம் திரும்பினோம் அந்த திருப்பத்தில்
பசுமைநடை பேனர் கட்டியிருந்ததால் இடம் பற்றிய சந்தேகம் வராமல் சரியான பாதையில் செல்லவும்
பேனர் வழிகாட்டியாக பயன்பட்டது. ஒருங்கினைப்பாளர்களில் சிலர் முன் தினம் இங்கு வந்து
கார்பார்கிங் இடங்கள் தேர்வு செய்தும் மற்றும் சமணர் படுக்கைகளை சுத்தம் செய்து விட்டு
சென்றனர்.
கடந்த 27.11.2011பசுமைநடையில் நானும் நண்பர் பாலசுப்பிரமணியும் மழையுடன் பசுமைநடையின் ஆர்வலர்களில் ஒருவனாக கலந்து கொண்டேன், இன்று அதே பெருமாள்மலைக்கு பசுமைநடையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவனாக கலந்து கொள்ளவது மனதுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் தான்.
2011 ல் பெருமாள் மலைக்கு சென்றபோது பாதி மலையை
காணவில்லை, உடைகல்லுக்கு பாறைகளை உடைத்து மலைகளின் பெரும்பகுதியை அழித்துவிட்டனர்.
4 ஆண்டுகளுக்கு கழித்து அதே மலையை கண்டபோது அன்று அழிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது
மனதுக்கு சற்றே ஆறுதல். ஆனால் மலையை ஒட்டிய வயல் பகுதி ப்ளாட்டாக மாறி பல வீடுகள் கட்டப்பட்டு
இருப்பதை காணமுடிந்தது.
மலையை ஒட்டிய குடியிருப்பு காலனியில் உள்ளவர்கள்
என்னடா இவ்வளவு கூட்டம் காலை 7 மணிக்கு என ஆச்சரியமாக பார்த்தனர். நாங்கள் மலையின்
மேல் அமைந்துள்ள சமணர் குகையை காணவந்துள்ளோம் என்றதும் மலையின் இடையில் காணப்பட்ட ஒத்தையடி பாதை வழியாக
செல்லசொன்னார்கள். சின்னாபின்னமாக்கப்பட்ட மலையின் இடையே உடைக்கப்பட்ட மலையை கவலையோடு
பார்த்தவாறு மலையின் தென்கிழக்கு பகுதியை வந்து அடைந்தோம், அந்த பகுதியில் கண்ணுக்கு
எட்டிய தூரம் வரை பச்சை போர்வையை விரித்தது போன்று வயலும், தென்னை தோப்பும் தான்.
மலையின் தென்கிழக்கு மூலையில் சிறுகுன்று அதன் மேல்
சமணர் குகையும் சமணர்படுக்கைகளும் உள்ளது. குன்று மீது சிரமம் இல்லாமல் ஏற முடிந்தது.
குகையின் வெளிமேற்பகுதியில் தென்திசை பார்த்து இரண்டு தீர்த்தங்கர் சிலையும் அதன் கீழ்
தமிழ் பிராமிய எழுத்துக்களும் செதுக்கப்பட்டு இருந்தது, சமணர் படுக்கைகள் வழுவழுப்பாகவும்
குளிர்ச்சியாகவும் இருந்தது.தற்போது சில சமூக துரோகிகள் சிலர் இங்கு காணப்படும் படுக்கைகள்
மீது தங்களுடைய பெயர்களை செதுக்கி வரலாற்று சின்னங்களை பாழாக்கியுள்ளனர்.
அங்கு இருந்து மதுரையைின் அழகை ரசிக்க ஆயிரம் கண்போதாது தூரத்தில் திருப்பரங்குன்றம் மலை என உயரத்தில் இருந்து சமவெளியை பறவையை போல் பார்ப்பது ஆஹா என்ன ஓர் ஆனந்தம்
வந்திருந்த
அனைவரும் குன்றின் நிழல் பகுதியில் அமர்ந்தோம். இந்த முறை பசுமைநடை அமைப்பாளர் எழுத்தாளர்
அ.முத்துகிருஷ்ணன் ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால்
ஒருங்கிணைப்பாளர்கள் கூடி ஏற்பாடு செய்த முதல் பசுமைநடை எதிர்பார்த்ததை விட கூட்டம்
அதிகம் புதியமுகங்கள் அதிகம் வந்து இருந்தனர் குறிப்பாக 5 வயது முதல் 75 வயது வரை உள்ளவர்கள்
கலந்து கொண்டுள்ளதை காணமுடிந்தது,
அந்த இடத்தின் சிறப்புகளை திரு.சாந்தலிங்கம் ஐயா
உரைநிகழ்த்தினார்கள், முடிவில் ஆஸ்திரேலியாவில் இருந்து அ.முத்துகிருஷ்ணன் செல்பேசியில்
பசுமைநடையை வாழ்த்திபேசியதை ஒலிபெருக்கி மூலம் அனைவரும் கேட்க ஆர்வலர்களின் உற்சாக
கைதட்டல் ஆஸ்திரேலியாவில் எதிரொலித்தது.
ஒருவர் பசுமைநடையின் நோக்கம் என்ன என சாந்தலிங்கம்
ஐயாவிடம் கேட்க, அதற்கு அவர் மதுரையின் வரலாற்றை மதுரையில் உள்ளவர்கள் மற்றும் மதுரையை
நேசிப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என்றார், அப்போது பார்வையாளர்களில் ஒருவர்
நான் அரிட்டாபட்டி கிராமத்தை சேர்ந்தவன் பசுமைநடை குழு அரிட்டாபட்டிக்கு பசுமைநடை நடத்தியபின்னர்
தான் மலையின் சிறப்பை முழுமையாக எங்கள் கிராம மக்கள் அறிந்துகொண்டனர்,அதன் பின் எங்கள்
போராட்டம் தீவிரம் அடைந்து கிரானைட் கும்பலிடம் இருந்து அரிட்டாபட்டி மலையை காத்தோம்
இன்றும் பல பேர் குழுவாக அடிக்கடி மலைக்கு வந்துசெல்கின்றனர் என கூறிய போது ஆர்வலர்கள் அனைவரும்
கைதட்டி மகிழ்வை தெரியப்படுத்தினோம்.
அறியாத மதுரையை காண்பதும் அதை காப்பதும் தான் பசுமைநடையின்
நோக்கம். மலைமீது அமர்ந்த இடத்திலேயே ஆர்வலர்களுக்கு காலைஉணவு வழங்கப்பட்டது. உணவு
உண்ட பின் அந்த இடத்தில் 200 பேர் உண்ட சுவடு இல்லாத வகையில் சுத்தமான நிலைஏற்படுத்திய
பின் மலையை விட்டு பிரியமனம் இல்லாமல் இறங்கினோம். ஒவ்வோரு பசுமைநடையும் பசுமையான நினைவுகளை
ஆர்வலர்களின் மனங்களில் விதைத்து சென்றது.
பெயர் மீது கிளிக் செய்யுங்கள்......
சித்திரைவீதிக்காரன்