புதன், டிசம்பர் 25, 2013

விருதுநகர் புரோட்டா         விருதுநகர் புரோட்டா

            இன்று புரோட்டா நடுத்தரமக்களின் முக்கிய உணவாக மாறிவிட்டது.
புரோட்டாவின் விலை குறைவு, ருசி, சிறிது சாப்பிட்டாலும் வெகு நேரம்  பசிக்காது இதன் காரணமாகவே உழைப்பாளர்களின் தினசரி சாப்பிடும் முக்கிய உணவாகை போனது.

           புரோடாவுடன் சால்னா, கோழி கறி, புறா கறி என சைடுடிஸ்ஸாக பயண்படுத்திவருகின்றனர்.
       
             ஊர் பேர் சொன்னால் அந்த ஊரின் சிறப்பு, அங்கு வாழ்ந்த தலைவர்கள் பெயர் தெரியுதோ இல்லையோ அந்த ஊரின் முக்கிய உணவு எஅது என்பது பலருக்கு தெரிந்து இருக்கிறது, அதுபோல்  விருதுநகர் என்றால் காமராசரை தெரியுதோ இல்லையோ புரோட்டா ஞாபகத்திற்கு வரும். விருதுநகர் புரோட்டா என தமிழகம் முழுவதும் ஹோட்டலில் சாப்பிட கிடைத்தாலும் விருதுநகரில் வந்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான்,

           இன்று விருதுநகரை காரில் கடந்து செல்பவர்கள் விருதுநகர் பர்மா கடையில் புரோட்டா சாப்பிடாமல் போகமாட்டார்கள், முழுவதும் ஏசி செய்யபட்ட அந்த ஹோட்டலில் ஞாயிற்றுகிழமையில் கூட்டம் மிக அதிகம் உள்ளூர் மக்கள், வெளியூர் மக்கள் என குவிகின்றனர்.

         மற்ற கடையில்  தோசை கல்லில் சப்பாத்தி சுடுவது போல் புரோட்டா சுடுவார்கள், ஆனால் விருதுநகர் புரோட்டா என்பது பூரி சுடுவது போல் எண்ணையில் பொறித்து எடுப்பது, ஆனால் இருப்புசட்டியில் போட்டு எடுக்காமல், இதற்கு என சிறிது குழிபோன்று அமைப்பு உள்ள தோசை கல் உள்ளது. அதில் நடுவில் நல்லெண்ணை விட்டு கொதித்தவுடன், புரோட்டாவை அதில் போடுவார்கள், புரோட்டா எண்ணையில் பாதி அளவு மூழ்கிய நிலையில் தோசைகல்லின் சூடும் புரோட்டாவில் படும்.
       கல்லின் சூடும், எண்ணையின் சூடும் ஒரு டூ-ன்-ஒன் போன்று சுடவைக்கப்படும்,
சுட்டு எடுத்த புரோட்டா மொறு மொறு என இருக்கும்,  அதில் சால்னவை ஊற்றி சாப்பிட்டால் சாப்பிடவர்கள் ருசியை மறக்கவே மாட்டார்கள். இத்துடன் புறா ரோஸ்ட், காடை வருவல் என சாப்பிடுவார்கள்.


   வெளியூர் மக்களுக்கு பெரிய கடைகள் மட்டுமே தெரியும், ஆனால் பெரிய கடைகளை விட விலை குறைவாக ருசி அதிகம் உள்ள சின்ன கடைகளும், பிளாட்பார கடைகளும் விருதுநகரில் உண்டு.


ஆனால், வெளியூர்காரர்களுக்கு விருதுநகர் புரோட்டா என அழைத்தாலும், விருதுநகரில் இந்த புரோட்டாவை எண்ணைபுரோட்டா என்றே சொல்லுவார்கள்.
     சைவ உணவு சாப்பிடுபவர்களும் இந்த எண்ணை புரோட்டாவில் சாம்பார் ஊற்றி ஊறவைத்து பின்னர் தேங்காய் சட்டினி, மல்லி சட்டினி என தொட்டு சாப்பிடுவார்கள், அசைவ உணவு சாப்பிடுபவர்களும் சாம்பார் ஊற்றி சைட்டிஸ்ஸாக மட்டன், சிக்கன், என வாங்கி சாப்பிடுகிறார்கள்.

     இந்த புரோட்டா செய்முறை எப்படி வந்தது என வரலாறு தெரியவில்லை, ஆனால், நல்லெண்ணை கம்பெனி விருதுநகரில் அதிகம் இருப்பதால் இந்த முறையில் புரோட்டா செய்து பழகி பின் அதுவே பழக்கத்தில் வந்து இருக்கும்.

       குறிப்பு:
         புரோட்டா இன்று மக்கள் விரும்பி சாப்பிடாலும், இது சத்தான உணவு அல்ல, அது மட்டும்மல்லாது புரோட்டா சாப்பிடால் சக்கரை நோய் வரும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது, எனவே புரோட்டாவை தவிர்ப்போம்...... 


விருதுநகர் நடுவில் உள்ள தெப்பக்குளம் [கோடையிலும் வற்றாது தண்ணீர் இருக்கும்]
de2.gif

வியாழன், டிசம்பர் 12, 2013

பசுமைநடை 28 திருவேடகம்        24.11.13 ஞாயிற்றுகிழமை ”திருவேடகம்” பசுமைநடை என்ற குருஞ்செய்தி 20 தினங்களுக்கு முன்பே வந்துவிட்டது, நண்பர்களிடம் தகவல் கூற ஏற்கனவே பசுமைநடை வந்து இருந்த நண்பர்களும் , புதிய நண்பர்களும் வருகிறோம் என்றனர், ஆனால் முதல் வாரம் எனக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது, டைபாயிடு காய்ச்சல் எனவே வேலைக்கும் போகமுடியாமல் மருத்துவவிடுப்பு போட பசுமைநடையில் கலந்துகொள்ள விரும்பிய நண்பர்களுக்கோ  என்னாச்சு இப்ப எப்படியுள்ளீர்கள் 24ம் தேதி வந்துவிடுவீர்களா என்ற நலம்விசாரிப்பு, 6 தினங்களுக்கு பின் 23 ம் தேதி வேலைக்கு சென்றபோது என் உடல் நலம் எப்படியுள்ளது என்று விசாரிக்காமல் நாளை பசுமைநடை போகலாம் அல்லவா என்றுதான் கேட்டனர், நானும் சிரமம் நீங்கள் போய்வாருங்கள் என்றால் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்றனர்,
 
  6 தினங்கள் வீட்டுக்குள் அடைந்துகிடந்தது மனதுக்கு புத்துயீர்ப்பு அளிப்பதுபோல் போகலாம் என முடிவு செய்து, 24ம் தேதி காலை 5 மணிக்கு விருதுநகரில் இருந்து புறப்பட்டோம், முன் தினம் வருவதாக கூறிய 3 பேர் வராததால்  4பேர் மட்டும் புறப்பட்டோம்,
   
 முன் தினம் இரவு திருமங்லத்தில் இருந்து  நண்பர் ரகுநாத் , காலை 6 மணிக்கு திருமங்கலம்     ஆனந்தா தியேட்டர் வந்துவிடவும் என உத்திரவு போட்டதால்  சரியாக 6 மணிக்கு திருமங்கலம் வந்தால் ரகுநாத்தை காணவில்லை, போனில் அழைத்தால் இதோ வந்துவிடுகிறேன் என கூற.
      எங்களுக்கு முன் அங்கு வந்து இருந்த இளஞ்செழியன், வஹாப் ஷாஜ்ஹான், டீ குடித்துகொண்டு இருக்க நாங்களும் அவர்களுடன் இணைத்து கொண்டோம், அதன் பின் ரகுநாத், மற்றும் அவரது நண்பர் தன் இரு குழந்தையுடன் வர, நாங்கள் செக்காணூரணி வழியாக மேலக்கால் சென்றோம், தற்போது செக்காணூரணி பாதை அகலப்படுத்தியுள்ளனர், எனவே பைக் ஓட்ட சிரமம் இல்லை, முன் தினம் மழை காரணமாக அதிகாலை நேரம் என்பதால் குளிர்தான் அதிகம்,

     மேலக்கால் தாண்டி சோழவந்தான் சாலையில் காத்து இருந்தோம், வடக்கில் வைகை ஆறு, தெற்கில் வாழைதோப்பு, கிழக்கில், மேற்கில் தென்னம்தோப்பு என அந்த இடம் ரம்மியமாக காணப்பட்டது, காலை 7. 30 மணி இருக்கும் மதுரையில் இருந்து அ.முத்துகிருஷ்ணன் தலைமையில் ஒரு பெரும் பட்டாளம் பைக், கார் என ஒரு ஊர்வலம் போல் அணிவகுத்து வந்தனர், அவர்களுடன் நாங்களும் இணைந்துகொண்டோம்,

   வைகை ஆற்றை கடந்து திருவேடகம் வைகை ஆற்று படித்துறையை அடைந்தோம், அந்த நேரத்தில் ஆற்றங்கரையில் கூடியிருந்தோர் இவ்வளவு கூட்டமா என அதிசயமாக பார்த்தனர், பசுமை நடை ஆர்வலர்கள், பைக், கார்களை படித்துறை அருகில் நிறுத்திவிட்டு ஏடகநாதர் கோவில் நோக்கி சென்றோம், சாமி கும்மிட அல்ல கோவிலின் வரலாற்றை அறிந்துகொள்ள  கோவிலின் முன் பாதியில் நிறுத்தியுள்ள கோபுரத்தை தாண்டி முதல் பிரகாரத்தில் போய் உட்கார்ந்தோம்,

       மதுரையில் இருந்து சோழவந்தான் சாலையில் சோழவந்தான் ஊர் அருகில் உள்ளது, திருவேடகம் நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத இரண்டும் கலந்த ஊர்,
       ஏடகநாதர் கோவில் பிரமன், திருமால், ஆதிசேஷன் , கருடன், வியாசர், பராசர், ஆகியோர் வழிபட்ட திருத்தலம் என தலபுராணம் கூறுகிறது, வேலைபாடுமிக்க கருவறை, பிராகாரத்தில் அறுபத்துமூவர் சிலைகள் அழகாக காட்சியளிக்கிறது, தேவாரத்தில் இத் திருதலம் இடம் பெற்றியிருப்பதால் இக்கோவில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஊகிக்கலாம், பின்னர் 13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் விரிவாக்கமும் புனரமைப்பும் செய்தார்கள், 16 ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் கோபுரம் கட்ட முயன்று நிறைவு பெறாமலேயே நின்றுவிட்டது, 1930 ல் நாட்டுகோட்டை செட்டியார்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் கோயிலை புனரமைத்து குடமுழுக்கு செய்துள்ளனர். இங்கு உள்ள கல்வெட்டில் திருஞானசம்மந்தர் மடம் பற்றியும் அதற்கு வழங்கப்பட்ட நிலக்கொடை பற்றியும் உள்ளது. கோவிலின் வரலாற்றை தெரிந்துகொண்டபின் அணைவரும் வைகை படித்துறை நோக்கி சென்றோம்.  
       இங்கு உள்ள படித்துறையில் உட்கார்ந்தால் மனம் அமைதிபெறும் அவ்வளவு அழகும், பசுமையும், அமைதியும் அங்கு காணப்பட்டது, சமணத்திற்கும், சைவத்திற்கும் எங்கள் மதமே உயர்ந்தது என போட்டி வந்து  இரண்டு மதத்தை சேர்ந்தவர்களுக்கும் அனல்வாதம், புனல்வாதம், ஏற்பட்டது அப்போது இரு மதத்தை சேர்ந்தவரகள் தம்மதத்தின் பாடல்களை தனிதனியாக ஓலைசுவடியில் எழுதி வைகை ஆற்றில் ஓடும் நீரில் தூக்கி போட நீர் ஓட்டத்திற்கு எதிராக எந்த மதத்தின் ஓலைசுவடி வருகிறதோ அந்த மதமே உயர்ந்தது, என முடிவு செய்து அதன் படி தூக்கிபோட , ஞானசம்மந்தர் “வன்னியும்மத்தமும்” என்னும் திருப்பதிகம் பாட  சைவமத ஓலைசுவடி இங்கு கரை ஒதுங்கியதாக வரலாறு, எனவே ஏடு+அகம் ஏடகம் என்று அழைக்கப்பட்டு பின் திவேடகமாகி போனது,[சமண மதத்தின் ஓலைசுவடிகள் இப்போது திருப்பாசேத்தி என அழைக்கப்படும் ஊரில் கரை ஒதுங்கியதாக கூறுகிறார்கள்]

    ஏடு கரை ஒதுங்கிய இந்த வைகை ஆற்றின் கரையில் அழகான படித்துறை அமைத்துள்ளனர், ஒரு பக்கம் சப்தமாதாக்கலும், இன்னோறு பக்கம் ஏடு கரை ஒதுங்கிய காட்சி கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது.

      படித்துறை மண்ணாகவும், தூசியாகவும் இருந்தது, பசுமை நடை ஆர்வலர்கள் அந்த படித்துறை முழுவதும் கூட்டி சுத்தம் செய்தனர், சுத்தம் செய்ததை அந்த ஊர் மக்கள் சிலர் ஆச்சரியமாக பார்த்தனர்.
       சுத்தம் செய்த பின் கரைஓரம் ஓடிய நீரில் இறங்கி [முட்டிகால் வரை ] காலை நனைத்துகொண்டே கடந்து ஆற்றின் மையம் நோக்கி நடந்து சென்று உட்கார்ந்தோம் அ.முத்துகிருஷ்ணன் அணைவரையும் வரவேற்று பேச ஐயா திரு. சாந்தலிங்கம் அவர்கள் மேற்கண்ட வரலாற்று சிறப்பை எடுத்துரைத்தார்கள்.
     மதுரை குரு தியேட்டரில் முதல் விரகனூர் அணை வரை மணலே இல்லாத வைகை ஆற்றையே மதுரை மக்கள் பார்த்து இருப்பார்கள், மதுரையின் கழிவு நீர் வாய்காலாகவும் குப்பை கொட்டும் இடமாகவும் பயன்படுத்துவது வேதனை யளிக்கிறது , ஆனால் இங்கு கண்ணுக்கு எட்டிய வரை மணல் தான் நீர் ஓடாவிட்டாலும் கரை ஓரம் தென்னம்தோப்புகள் பசுமையாக காட்சியளிக்கிறது.

      வைகை ஆறு கடலில் கலக்காத ஆறு என்பர், வைகை ஆற்றில் ஓடும் நீர் ஆர்.எஸ். மங்கலம்  கண்மாய், இராமநாதபுரம் பெரியகண்மாயில் சேர்கின்றது எனவே கடலில் சேர்வதில்லை, கண்மாய் நிறைந்து அதன் பின் உபரி நீர்தான் கடலில் கலக்கும்,  ஆனால் வைகை அணை கட்டிய பின் பெரியகண்மாய் நீர் வரத்தின்றி வற்றி போய்விட்டது.
 
  சாந்தலிங்கம் ஐயாபேசிய  பின்  ஆற்றுக்குள்ளேயே காலை உணவு வழங்கப்பட்டது, மணலில்   உட்கார்ந்து காலை உணவு சாப்பிட்டது ஆனந்த அனுபவம், உணவுக்கு பின் குவாலிட்டி நடண குழுவினர் ஆற்று மணலில் மீன்கள் போல் தாவி துள்ளி குதித்து சாகசம் காட்டினர், பசுமை நடை ஆர்வலர்கள் ஆச்சரியமாக பார்த்தனர், அவ்வளவு அழகாக இருந்தது,
     


புகைபடம் எடுத்தது இபி ஜெய்

     அதன் பின் அணைவரும் ஆற்று கரை வந்தோம், படித்துறையில் உட்கார்ந்து புகைபடம் எடுத்துகொண்டோம்,, ஒவ்வொரு பசுமைநடையிலும் ஸ்ரீராம், சுந்தரராசன், செல்வம்ராமசாமி, ராஜன்னா, ரகுநாத், குணா என புகைபட நிபுணர்கள் எடுக்கும் புகைபடங்கள் அழகாக பேஸ்புக்கில் பதிவு செய்து வருகின்றனர், இப்போது புதிதாக பசுமைநடையில் வந்து கலந்துகொண்டு புகைபடங்கள் எடுத்து மனதை கொள்ளை அடித்து வரும் அருண்பாஸ், இபி ராஜ் ஏகே 47 துப்பாக்கி போல் கேமிராவை கொண்டு வந்து மிரட்டும் அன்பு உள்ளங்களை சந்தித்து பேசினேன்,

    பைக்கை எடுக்கும் போது அங்கு ஒரு இளவட்டக்கல் இருந்தது , உடன் தூக்கிபார்க்க ஆசை, உடன் வந்த நண்பர் முருகன் ஒரே மூச்சில் தூக்கி முதுகின்பக்கம் போட்டார், கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர், சப்தம் கேட்டு குவாலிட்டி நடனகுழுவினர் அங்கு வர அவர்களும் இளவட்டக்கல்லை தூக்கினர், இளம் இரத்தம் என்பதை நிரூபித்தனர், மேலும் சிலர் முயற்சி செய்தனர், தூக்கமுடியவில்லை  திருமங்கலம் ரகுராம் தூக்கினார் , உடனே நானும் முயற்சிசெய்ய  இளவட்டக்கலை தூக்கினேன் நெஞ்சுவரை தூக்கினேன் இளம் பசுமைநடை ஆர்வலர்கள் தூக்குங்கள் என ஆரவாரம் செய்ய , விருதுநகர் நண்பர்களோ உடல்நலம் சரியில்லை வேண்டாம்  என எச்சரித்தனர், என்னாலும் நெஞ்சுக்கு மேல் தூக்க முடியவில்லை,  இந்த விளையாட்டை ஊர்மக்களும் ரசித்தனர்

      அதன்பின் நண்பர்கள் சிலர் நாகர் தீர்த்தம் பார்க்க சென்றனர், நான் வழக்கம் போல் பசுமை நடையின் பசுமையான நினைவுகளுடன் வீடு திரும்பினேன்,
 


செவ்வாய், நவம்பர் 12, 2013

சதுரகிரி மலை பயணம் பாகம் 2

சுந்தரமகாலிங்கம் [சுயம்பு லிங்கம்]


    மீண்டும் சதுரகிரி மலை பயணம்......        எப்போதும் இரவில் மலைஏறி  அங்கு தங்கி காலையில் மலை இறங்குவது வழக்கம் இந்த முறை மதுரை பசுமைநடை” நண்பர்கள் வருவதாக கூற பகலில் மலை ஏறி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்று வருவோம். மழை பெய்து மலை குளிர்ந்துபோய் இருக்கும், நம் மனமும் அங்குள்ள பசுமையை பார்க்கும் போது குளிர்ந்து போய்விடும்...என ...எண்ணிய படி 

          தீபாவளிக்கு மறுநாள் [3.11.2013] விருதுநகரில் இருந்து நான்கு பேரும், மதுரையில் இருந்து இரண்டு பேரும் என ஆறுபேர் அழகாபுரியில் சந்தித்து தம்பிபட்டி வழியாக தாணிப்பாறை புறப்பட்டோம், வத்றாப் விலக்கில் இருந்து தாணிப்பாறை ஏழு கி.மீ, அந்த பாதையில் முன் தினம் மழை பெய்து மண்வாசனை எங்கும் பரவி இருக்க மண்வாசனையை நுகர்ந்தபடி பைக்கில் பயணம் செய்வது எவ்வளவு ஆனந்தம், வார்த்தையால் வர்ணிக்கமுடியாது, பசுமையின் குளிர்ச்சியை ஆஹா என  கண்களாலும், புகைபட கருவியிலும், அழகை திருடிக்கொண்டு இருந்தனர் மதுரை நண்பர்கள்.

        தாணிப்பாறைதான் சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலை அடிவாரம்,அங்கு வந்து சேர்ந்தபோது மணி காலை 8மணி , கார், பைக் நிறுத்த ஸ்டாண்டு ஏற்பாடு செய்துள்ளனர், ஆனால் வண்டி நிறுத்த இடம் இல்லாத அளவிற்க்கு அதிகமான வண்டிகள், நெளியூரில் இருந்து வருபவர்கள் காரில் வந்து விடுகின்றனர், பஸ் வசதி இருக்காது என என்னி ஆனால் அரசு பேருந்து அதிக அளவில் வத்றாப்பில் இருந்து இயக்கப்படுகிறது.

      அடிவாரத்தில் இரண்டு இடங்களில் அன்னதானம் வழங்கிகொண்டு இருந்தனர், நாங்கள் ஒரு இடத்தில் சாப்பிட்டு விட்டு மலை ஏறும் போது மணி 8.30 நுழைவாயிலில் வனத்துறையினர் போதைவஸ்துக்கள், மற்றும் பிளாஸ்டிக் பை வைத்து இருந்தால் உள்ளே அனுபதிப்பதில்லை , அகற்றி விட்டு அனுமதிக்கின்றனர்.
       இந்தமுறை இளைஞர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. நுழைவாயில் இருந்து 20 நிமிட நடைக்கு பின் வன காளியம்மன் கோவில் வருகிறது, அங்கு அன்னதானம் வழங்கிகொண்டு இருந்தனர், அங்கு பெரிய பாறை திட்டு உள்ளது, அதில் பலர் உட்காரமுடியும், அங்கிருந்து பார்த்தால் சுற்றிலும் மலை தான் அழகான பகுதி அதன் அருகில் மலை ஆறு ஓடிகிறது ஒரு பெரிய பாறை வழியாக விழுந்து ஓடுகிறது அந்தபாறையில் 12 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் விழுவது அருவிபோல் உள்ளது பலர் அதில் குளித்துகொண்டு இருந்தனர்,
     மீண்டும் புறப்பட்டோம் அடுத்த முப்பது நிமிடத்தில் வழுக்குபாறை வந்தது, சற்றே பெரிய பாறை ஏறும்போது கவனத்துடன் ஏறவேண்டும்,கடந்தமுறை இந்தபாறையில் ஏறும்போது ஒரு பெண் வழுக்கி கீழே விழுந்து பாறைகளில் அடிப்பட்டு  இறந்ததாக கூறினார்கள், இந்தபாறையில் ஏறும் போது சுற்றிலும் அழகான இயற்கை காட்சியை காண முடியும் எனவே கவணம் அதில் போகும் போது வழுக்கிவிட காரணமாகிவிடுகிறது.
    நாங்கள் சென்ற சமயம் முந்தினம் மழை பெய்து தண்ணீர் அந்த பாறை வழியாக கசிந்து செல்வதால் சற்றே வழுக்கியது, பாறையில் படி போல் செதுக்கியுள்ளனர், கவணமாக ஏறினோம். பாறையின் கீழ் மை தண்ணீர் குளம் போல் தேங்கி இருந்தது அதில் பக்தர்கள் உற்சாகமாக கத்திய படி குளித்துகொண்டு இருந்தனர், பார்பவர்களுக்கும் உற்சாகம் தொற்றிகொள்ள வேகமாக மலையில் ஏறினோம், என்றாலும் எனக்கு மூச்சு இறைத்தது, எனக்காக நண்பர்களும் நின்று ஏறினார்கள், போட்டோ எடுக்கும் ஆர்வத்தில் நண்பர் கந்தவேல் முன்னே ஏறிவிட்டார்,

     முன்பெல்லாம் 2 அடி, 3அடி உயரம் உள்ள  பாறைகள் பாதையில் இருக்கும் அதில் ஏறிதான் செல்லவேண்டும், சிரமாக இருக்கும், தற்போது அந்த பாறைகளை உடைக்கப்பட்டும், உடைக்கப்பட்ட பாறைகள் பாதையில் சீராக
 அடுக்கப்பட்டுள்ளதால் மலை ஏற எளிதாக இருந்தது.
   
வழுக்குபாறைசங்கிலி பாறை மலை ஆறு

சங்கிலிபாறை அருகில் மலை ஏற்றம்       வழுக்கு பாறையில் இருந்து 30 நிமிடம் நடந்தபின் சங்கிலிபாறை வந்தது, அந்த இடம் குறுகிய மலை ஆறு உள்ள இடம் மழை பெய்து தண்ணீர் அதிகம் வரும்போது ஆபத்து இல்லாமல் கடந்து செல்ல ஒரு பாறையில் இரும்பு சங்கிலி இணைத்துள்ளனர், அதை பிடித்துகொண்டு ஆற்றை கடந்துசெல்லலாம்,  நாங்கள் சென்ற சமயம் முழங்கால் அளவு தண்ணீர் சென்றதால் காலை நனைத்துக்கொண்டே கடந்துசென்றோம், ஆறை கடந்தவுடன் ஒரு பெரிய ஏற்றம்  கண்டிப்பாக அதில் ஏறும் போது மூச்சு வாங்கும், ஏறுவதை விட இறங்கும்போது தான் கவணமாக இறங்க வேண்டும்.

     மீண்டும் 30 நிமிடமலை ஏற்றத்திற்கு பின் கோரக்கர் சித்தர் குகை வந்தது, மலை ஏறுபவர்கள் பலர் இந்த குகையை கண்டு இருக்க மாட்டார்கள், இது மலை பாதையில்  ஏறும் போது இடது பக்கம் ஓடும் ஓர் மலைஆற்று க்குள் உள்ளது,  பாதயில் இருந்து சற்றே விலகி செல்ல வேண்டும் பாதையில் பக்தர்கள் அசிங்கப்படுத்தியுள்ளனர், மலையில் எவ்வளவோ இடம் இருந்தாலும் பாதையின் ஓரத்தில் தான் காலைகடனை முடிக்கின்றனர். ஆற்றில் தண்ணீர் குறைந்தளவு சென்றதால் பக்தர்கள் சிலர் குளித்தனர், நண்பர்கள் சிலரும் குளிக்க ஆரம்பித்துவிட்டனர்.


    மீண்டும் மலை ஏற்றம் இப்போது சற்றே கடினமான ஏற்றம் தான் இளைப்பு அதிகமானதால் உட்கார்ந்தே ஏறவேண்டி இருந்தது.சின்னபசுகிடை இடம் வந்தது கடந்த முறை இந்தபகுதியில் அதிகமான குரங்குகள் காணப்பட்டது இந்த முறை காணவில்லை,
   அடித்த 30 நிமிடத்தில் பெரிய பசுகிடை திட்டு வந்தது அங்கு நாவல் ஊற்று உள்ளது ஊற்றில் நீர் குறைவாகவே இருந்தது, மலை ஏறிக்கொண்டு இருக்கும் போது பாதையில் இரட்டை லிங்க கோவில், வன துர்க்கை அம்மன் கோவில் உள்ளது பக்தர்கள் சாமிகும்பிடு ஏறுகின்றனர்.

 அதில் இருந்து மலை பாதை மணல் பாதையாக இருபக்கமும், புல் விளைந்துள்ளதால் சுற்றியுள்ள மலைகளை ரசித்துகொண்டே ஏறினோம் , பிலாடி அய்யனார் கோவில் வந்தது அங்கு மூழிகை டீ விற்கினறனர் ரூபாய் 10 தான், மிகுந்த ருசி மலைஏறிய களைப்பு காணாமல் போய் விடுகிறது.
     அங்கிருந்து 10 நிமிடத்தில் சுந்தரமகாலிங்க கோவில் வளாகம்  வந்துவிடுகிறது. கோவில் நுழையும் இடத்தில் கடைகள் அதிகம், சுக்குமல்லி காபி கடை, சாம்பிரானி வகைவகையாக விற்கினறனர். ஒவ்வொன்றும் ஒரு மனம் பலர் வாங்கிசெல்கினறனர். வளாகத்தின் உள்ளே இருந்த கடைகள் அகற்றப்பட்டு கோவில் வரை கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு செய்துள்ளனர்.
      கூட்டம் அதிகம் இருந்தாலும் கோவில் உள் குறைவான கூட்டம் தான் கோவிலை அடைந்தபோது மதியம் மணி 11.30 , மூன்று மணிநேரமாகியுள்ளது, மெதுவாகவே ஏறியதால் இவ்வளவு நேரம்,   வரிசையில் செல்வதால் சாமி கும்பிட தள்ளுமுள்ளு இல்லாமல் எவ்வளவு நேரமானலும் நின்றுசாமி கும்மிட முடிகிறது, கஷ்டப்பட்டு மலை ஏறிவருவதால் பக்தர்களை சாமி கும்பிட அனுமதிக்கினறனர். கோவில் பின் புறம் பக்தர்கள் தியானத்தில் உர்கார்ந்ர்துவிடுகினறனர். அந்த இடத்தை கடப்பது தான் சிரமமாக உள்ளது.

        அம்மாவாசை அன்று உச்சிகால பூசை 12 மணிக்கு ஆரம்பிக்கினறனர். பக்தர்கள் பலர் காத்துள்ளனர், விருதுநகர் நண்பர்கள் அங்கு இருக்க , மதுரை நண்பர்களுடன் மலை இறங்கினேன், கந்தவேல் விரைவாக ஏறி அங்கு இருந்தார், கோவில் அருகில் மதியம் அன்னதானம் வழங்கினர், வயிறுநிறைவாக சாப்பிட்டு விட்டு கீழே புறப்பட்டோம், மதுரை நண்பர்கள் மறக்கமுடியாத அனுபவம் என்றனர்.

    மலையில் இருந்து இறங்கும்போது மணி 12, இரண்டு மணி மலை இறக்கத்திற்கு பின் சங்கிலிபாறை வந்தோம், ஏறும் போது மூச்சு வாங்கியது எனில் இறக்கும்போது கால் வலி அதிகமானது, உடம்பின் மொத்த எடையும் காலில் தாங்கி இறக்குவதால் வலி தலைக்கு வருகிறது இதனால் தலைவலி வந்துவிடுகிறது.
    சங்கிலிபாறை அருகில் உட்கார்ந்து ஓய்வு எடுத்தபோது, ஒரு பெண்னை கம்பில் போர்வைகொண்டு தொட்டில் போல் கட்டி மலையில் இருந்து இறக்கிவந்தனர் கம்பின் ஒருமுனையில் ஒருவரும், மறுமுனையில் ஒருவரும் தாங்கியவாரு எங்களை கடந்து சென்றனர், நாங்களும் அவர்கள் பின் சென்று விசாரித்தோம், மலை ஏறமுடியாதவர்களை இப்படி தொட்டில்போல்  கட்டி மலை ஏற்றி சாமிகும்பிடவைத்து கீழே கொண்டு வந்து விடுவோம், அதற்கு கட்டணம் ரூபாய் 4000 ஆகும், அதிக எடை உள்ளவர்கள் எனில் 5000 ஆகும், என்றனர், சில சமயம் மலை ஏறியவர்கள் உடல்நலம் சரியில்லை எனில் மலையில் இருந்து இறக்கி வருவோம்,
       மலையில் நெஞ்சு வலி வந்த பலரை தூக்கி வந்து காப்பாற்றியுள்ளோம், ஏறுவதற்கு 2 மணி நேரம், இறங்க 1.30 நிமிடம் ஆகும் என்றனர், வத்றாப்பில் உள்ளனர்,

    மலை இறங்கி தாணிப்பாறை வந்தபோது மணி 3 ஆனது, பைக் எடுத்து கிளம்பிய 10 நிமிடத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது, பாதையில் உள்ள ஒரு வீட்டில் ஒதுங்கி நின்றோம், அங்கிருந்து பார்த்தால் எதிரில் மலை ,மழையால் நனைந்துகொண்டிருக்கும் காட்சியை ரசித்துகொண்டிருந்த போதுதான் மலை உச்சியில் மழைகாரணமாக வெள்ளி உருகி வடிவதைபோல் தண்ணீர் அருவி கீழே இறங்குவதை பார்த்தபோது பக்கத்தில் நின்றவர்கள்  ஆனந்தத்தில் கத்தினர், அந்தகாட்சியை காணும் போது  ஆச்சரியமாகவே இருந்தது, 15 நிமிடத்தில் மழை விட , அப்போது காணப்பட்ட அழகை படம் பிடித்தவாரு அழகாபுரி ஊர் வர நண்பர்கள் மதுரை நோக்கி செல்ல நான் விருதுநகர் திரும்பினேன்.  


 என்னுடன் வந்த நண்பர்கள் பெயர்;

 எஸ். முருகன்,  பா. முருகன்,  கணேசன்,[விருதுநகர்]
 மதுமலரன், கந்தவேல் [ மதுரை]