இந்த முறை பசுமைநடை பேரையூர் என செய்திவந்தவுடன்
வழக்கபோல் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பசுமைநடையில் கலந்து கொள்ள கேட்டு கொண்ட
போது தங்கையின் மகள் வித்யா கலந்துகொள்வதாக கூறி முன் தினம் மாலையே விருதுநகர் உள்ள
என் வீட்டுக்கு வந்துவிட்டாள், நண்பர்கள் ஐந்து பேர் வருவதாக உறுதிதந்தனர்.
.45. 29.6.2014 ஞாயிற்றுகிழமை காலை 5.30 மணிக்கு எழுந்து நான், எனது மகள், மருமகள் வித்யா பேருந்து நிலையம் வரும் முன்பே நண்பர்கள் முருகன், கணேசன், அன்பழகன், ரவிச்சந்திரன் காத்து இருந்தனர், நாங்கள் இந்தமுறை மதுரை வராமல் டி.கல்லுபட்டி வந்துவிடுகிறோம் என முத்துகிருஷ்ணனுக்கு தகவல் தந்ததால் விருதுநகரில் இருந்து டி.கல்லுபட்டியை அடைந்தபோது காலை மணி 6.45
மதுரையில் பசுமைநடை டீம் கிளம்பி விட்டதா என போன்
போட்டு கேட்டபோது அபோதுதான் கிளம்பி வந்துகொண்டு இருக்கிறோம் என்றனர். இவ்வளவு தாமதமாகும்
என தெரிந்து இருந்தால் நாங்களும் சற்றே தாமதமாக கிளம்பி இருக்கலாம்,
டி.கல்லுபட்டி பேருந்து நிலையம் ஓரளவு சுத்தமாகவே
காணப்பட்டது, பேருந்து நிலையம் உள் பக்கம் கடைகள் அதிகமாக கட்டி விடப்பட்டுள்ளதால்
கண்ட இடத்தில் அசுத்தம் செய்யாமல் இருப்பதாக எனக்கு பட்டது. அம்மா மருந்தகம் என்ற கடையும்
பச்சைகலர் பெயிண்ட் அடித்து காணப்பட்டது, பேருந்து நிலையத்தின் இரு வழியிலும் பஸ் உள்ளே,
வெளியே வந்து சென்றது இது விபத்து ஏற்பட வழிவகுக்கும் என எண்ணியபடி நேரத்தை கடத்தினோம்.
காலை 7.45 மணிக்கு ”பசுமைநடை” பேனருடன் குகன் பள்ளி
பேருந்து வர அதில் 7 பேரும் ஏறிக்கொண்டோம், பேருந்தில் நண்பர் எஸ்.அர்ஷியா வாங்க சார்
என அன்பாக வரவேற்றார், நண்பரும் கலந்து கொண்டது மகிழ்வாக இருந்தது. புதிய முகங்கள்
அதிகமாக இருந்தனர், 8 மணிக்கு பேரையூர் “மொட்டை மலை” அடிவாரத்தை அடைந்தோம். கீழே முருகன்
கோவில் அதை ஒட்டியே மலை ஏறும் பாதை, செங்குத்தான மலை பாறையில் சிரமம்மில்லாமல் ஏற சிறு
சிறு படிக்களாக செதுக்கி கைபிடித்து ஏற கம்பியும் அமைத்து இருந்தனர், படிகட்டுகள் சமீபத்தில்
தான் அமைத்துள்ளனராம். படிகட்டு அமைத்து ஒவ்வொரு படிக்கட்டிலும் படிஅமைக்க உதவியவர்
பெயர், ஊர் என்ற விபரம் செதுக்கியுள்ளனர். செக்குத்தான மலை என்பதால் சற்றே ஏற சிரமமாகத்தான்
இருந்தது, இந்தமுறை அரசு தேர்வு, முகூர்த்த நாள் என்பதால் பசுமைநடை ஆர்வலர்கள் குறைவாக
இருந்தனர். மலை ஏற ஆரம்பித்த அந்த நேரத்திலேயே வெயில் சுள் என அடிக்க ஆரம்பித்தாலும்
எங்கள் பசுமைநடை ஆர்வலர்களின் ஆர்வத்தின் முன் வெயில் தாக்கம் எடுபடவில்லை, உற்சாகமாகவே
ஏறினோம் கந்தவேலும், மதுமலரனும் ஆர்வலர்களை
உற்சாக படுத்தி ஏற்றிகொண்டே இருந்தனர்.
அரைமணி நேர மலை ஏற்றத்திற்கு பின் காலை 8.30 க்கு
மலை உச்சியை அடைந்தோம். மலை உச்சியில் இருந்து சுற்றிலும் கீழே பார்த்தால் பசுமை, பசுமை
தான் ஆக உலகம் எவ்வளவு அழகானது, அடிவாரத்தில் நாங்கள் வந்த பேருந்து பொம்மைபோல் காணப்பட்டது,
ரோட்டில் செல்லும் வாகனத்தைபார்த்தபோது பொம்மைகார்கள் ஊர்ந்து செல்லுவதைபோல் காண்பதற்கே
மகிழ்வாக இருந்தது. மலை உச்சியில் ஒரு பக்கம் சிவன் கோவில், அதற்கு சற்றே தள்ளி முஸ்லீக்
சமாதி கட்டி இருப்பதை பார்க்கும் போது மத ஒற்றுமைக்கு உதாரணமாக இருந்தது, மலையின் உச்சி
ஒரு சிறு மைதானம் போல் பரந்து காணப்பட்டது, அதில் இயற்கையாகவே மூன்று தடாகம் அமைந்து
தண்ணீர் இருந்தது. அல்லி மலர் மலர்ந்து பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது.
அதில் ஒரு தடாகம் சற்றே பெரிதாக இருந்ததில் படிகள்
அமைத்து, மழைகாலங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படும்போது குளிக்க வசதி ஏற்படுத்தி இருந்தனர்,
மலையில் தான் முருகன் கோவில் காணப்படும், ஆனால் மதுரை திருப்பரங்குன்றம் கோவிலை போலவே
இங்கும் மலை அடிவாரத்தில் முருகன் கோவிலும், ,மலை உச்சியில் சிவன் கோவில், முஸ்லீம்
தர்ஹா வைபோல் சமாதியும் காணப்படுகிறது, இது அதிசயமாக இருந்தது, மதுரை திருப்பரங்குன்றம்
கோவில் செல்லமுடியாதவர்கள் அடிவாரத்தில் உள்ள கோவில்லில் காணிக்கை ,நேர்த்திகடன்
செலுத்திகொள்வார்களாம்.
மலைமீது உள்ள சிவன் கோவில் பின்னால் சிறிது நிழல்
காணப்பட ஆரவலர்கள் அங்கு உட்கார மலையின் சிறப்பை முத்துகிருஷ்ணன் விளக்கி கூறினார்,
சதுரகரிமலையும் அங்கு இருந்து பார்க்கமுடிந்தது. வெயில் தாக்கம் அதிகம் இருந்ததால்
மலையில் இருந்து கீழே இறங்கினோம். அடிவாரத்தில் வெயிலே தெரியாத அளவுக்கு மரங்கள் நிறைந்த
சோலைபோல் கோவில் முன்புறம் அமைந்து இருந்தது, அணைவரும் அங்கு அமர்ந்தஉடன் காலை உணவு
பசுமைநடை சார்பாக வழங்கப்பட்டது. பசுமைநடை அமைப்பாளர்களில் ஒருவர் ரகுநாத் அவரது கையால்
எலும்பிச்சை பழம் பிழிந்து அன்பை ஊட்டி சர்பத் தயாரித்து தந்ததால் சர்பத் மிக ருசியாக
இருந்தது.
அதன் பின் வீடு திரும்பினோம். வழக்கம்போல் மறக்கமுடியாத
அனுபவத்தை இந்த பசுமைநடையும் தந்தது.
[ பேரையூர்
மதுரை மாவட்டத்தில் ஒரு வட்டத்தின் தலைநகரமாக பேரையூர்
உள்ளது.
இது நாயக்கர்
, மற்றும் ஜமீன்தாரகளால் ஆளப்பட்ட ஊர். இவ்வூரைச் சுற்றிலும் பெருங்காலத்து தாழிகள்
கிடைப்பது இவ்வூரின் தொன்மையை உறுதிபடுத்தும், இவ்வூரின் அருகில் தான் மொட்டைமலை காணப்படுகிறது.
இதன் உச்சியில்
சிவன் கோவில் உள்ளது, அதன் அருகில் திரந்த வெளிபாறையில் ஒரு பெரிய கல்வெட்டும் உள்ளது,
சிவன் கோவில் மல்லிகார்ச்சுனர் கோயில் என அழைக்கப்படுகிறது. இந்த ஊர் பாண்டியர் ஆட்சி
காலத்தில் கடுங்கோ மங்கலம் என அழைக்கப்பட்டதாக வரலாறு உண்டு.
மலையடிவாரத்தில்
மேல்ப்பரங்கிரி சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது, ஆலம்பட்டி நீர்நிலையை கடந்து திருப்பரங்குன்றம்
செல்ல முடியாத நிலை ஏற்பட்ட போது முருகன் வேல் வடிவில் காட்சியளித்த இடம் என ஐதீகம்
உண்டு. ]