21ம் தேதி கிரீன்வாக் அரிட்டாபட்டி மலை பயணம் என நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டேன்.
ஞாயிற்றுகிழமை காலை 4.30 மணி வீட்டில் இருந்து புறப்பட்டு விருதுநகர் பஸ்நிலையத்தில் பைக்கை நிறுத்திவிட்டு மதுரை பஸ் நிற்கும் இடத்திற்கு வந்தபோது ஏற்கனவே அங்கு நண்பர் முருகன் வந்து காத்திருந்தார், காலை 6.15 மணிக்கு மாட்டுதாவணி பஸ்நிலையம் வந்துவிடவேண்டும் என அ.முத்துகிஷ்ணன் கூறியதால் விருதுநகரில் 5 மணிக்கு பஸ் ஏறவேண்டும்.
முன்தினம் வருவதாக கூறிய நண்பர்கள் வராததால் அவர்களுக்கு போன் போட்டேன் எதிர்முனையில் ரிங் அடித்துகொண்டே இருக்க வருகிறேன், வரவில்லை என்றாவது பதில் கூறியிருக்கலாம், நண்பர் முருகேசன் மட்டும் இதோ வந்துகொண்டுயிருக்கிறேன் என்றார், முருகேசன் வந்து பஸ் ஏறிபுறப்பட்டபோது மணி 5.20.
அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் கூட்டம் அதிகம் இல்லை, மொத்தமே 7 பேர்தான் வண்டியில் இருந்தோம், வேகமாக சென்றால் டீசல் செலவு அதிகம்மாகும் என்பதால் பேருந்து மெதுவாகவே மதுரை நோக்கிசென்றது.
ஒரு வழியாக மதுரை மாட்டுதாவணியை அடைந்த போது காலை 6.30 மணி ,சிட்டி ஹோட்டல் முன் ஏற்கனவே பசுமைநடை ஆர்வலர்கள் கூடியிருந்தனர்,
அ.முத்துகிருஷ்ணன் வாங்க வாங்க விருதை ஆர்வலர்களே என வரவேற்றார். கவிஞர்.P.G.சரவணன், புகைபடநிபுணர் ஸ்ரீராம்ஜெனக், ஸ்ரீதேவி, இளஞ்செழியன், சுந்தர்,மதுமலரன்,டாக்டர்.ராஜ்ன்னா ஏற்கனவே அங்கு இருக்க வணக்கத்தை மகிழ்வோடு பகிர்ந்துகொண்டோம்.
”பயணம்” சிற்றிதழ் ஆசிரியர் மூலம் அறிமுகமாகி போன்மூலம், வலைபதிவு மூலம் உரையாடி வந்த நண்பர்,தேவராஜ் விட்டலன் அவர்களை அன்று முதன்முறையாக நேரில் சந்தித்தேன், இராணுவத்தில் பணியாற்றும் அவர் காஷ்மீரில் இருந்து விடுப்பில் திருமங்கலம் வந்தநிலையில் சித்திரவீதிக்காரன் மூலம் முதன்முறையாக பசுமைநடையில் கலந்துகொண்டது சந்தோஷத்தை தந்தது.
இன்னும் பெயர்தெரியாத ஆனால் முகம் அறிந்த நண்பர்களை சிரிப்புடன் தலைமட்டும் ஆட்டி வணக்கத்தை பரிமாரிக்கொண்டோம்.
எங்களை அழைத்துசெல்லும் குகன் பள்ளிபேருந்து 7.00 மணிக்கே வந்தது, மதுரை திருச்சி சாலையில் ஒத்தகடை, சிட்டம்பட்டி தாண்டி இடது பக்க சாலையில் திரும்பி 4 கி.மீ சென்றபின் அரிட்டாபட்டி வந்தது,
மதுரையை சுற்றியுள்ள கீழவளவு, யானைமலை பின்புறம் , வரிச்சூர் என மலைகளை கிரானைட் கற்களாக கரைத்து விளைநிலங்களை தரிசாக்கிய மாபியா கும்பல் அரிட்டாபட்டியையும்,கிரானைட் குவியலாக மாற்ற திட்டம் போட்டு மலையில் இயற்கையாக அமைந்த நீர் நிலையை சிறு அணையாக கட்டி நீரை பாசனத்துக்கு பயன்படுத்திவந்துள்ளனர் அந்த பகுதி முன்னோர்கள் அந்த நீர்பாசன அணையிருந்தால் அரசு அனுமதி கிடைக்காது என்பதால் அந்த அணையை சின்னபின்னமாக்கியுள்ளனர், ஒரு நாள் இரவிலேயே பெரியபெரிய பாறை துண்டுகளாக இயந்திரங்கல் கொண்டு அறுக்கப்பட்டுள்ளது,
பொங்கியெழுந்தனர் அரிட்டாபட்டி கிராம மக்கள் ,குறிப்பாக இளையர்கூட்டம் வழிகாட்டிய முதியோர்களுக்கு உறுதுணையாக இருந்ததால் நீதிமன்றம் சென்று மலையை உடைக்க தடைஉத்தரவு வாங்கி ம்லையை காப்பாற்றினர், அவர்கள் அரிட்டாபட்டிமலையை மட்டும் காப்பாற்றவில்லை மதுரையை சுற்றியுள்ள மலைகளையும் காப்பாற்றியுள்ளனர்.
ஏற்கனவே 3வது பசுமைநடையாக இக்கு வந்துயிருந்தாலும், மீண்டும் 24. வது பசுமைநடையாக வந்தோம், முதல் தடவைவந்தபோது பாறைகளை உடைக்கும் இயந்திரங்களும் ஆட்களும் அங்கு இருந்தனர், இந்தமுறை இயந்திரங்களும், ஆட்களும் இல்லை உடைக்கப்பட்ட பாறைகள் எச்சங்களாக அங்கு அடுக்கிவைக்கப்பட்டுயிருந்தது.
பேருந்து அரிட்டாபட்டி கிராமத்தில் நுழைந்து இடதுபக்கம் திரும்பி சிறிது தூரம் சென்றபின் கண்மாய்முன் உள்ள பெரிய ஆழமரத்தின் நிழலில் நிறுத்தி இறங்கினோம். கண்மாயில் தண்ணீர் சுத்தமாக இல்லை, ஆனால் தண்ணீர் இருந்த அடையாளம் பாறைகளில் கரை படிந்து இருந்ததை பார்த்தபோது எவ்வளவு நீளம் அகலத்தில் தண்ணீர் தேங்கி இருந்து இருக்கும் என கற்பனை செய்து பார்க்க முடிந்தது...
கண்மாயில் இறங்கிதான் எதிர்புறம் தெரியும் மலையை அடையமுடியும், மலை இரண்டு பகுதியாக உள்ளது ஒரு மலையில் சமணச்சிற்பங்களும், இன்னோறு மலையில் எட்டு நீர் சுனைகளும் சிறுஅணையும் உண்டு,
இரண்டு மலைகளுக்குமிடையில் நடந்துசென்றோம். மலைக்கு இடைப்பட்ட இடத்தில் தென்னம்தோப்பும், வயல்களும் காணப்பட்டது, வலது பக்கமலையில் ஒரு குன்று காணப்படுகிறது அதன் மேல் ஏற படிகள் கட்டப்பட்டுள்ளது, அங்கு ஓர் குடைவரைக் குகை காணப்படுகிறது. அந்த குடைவரைக்கோயில் தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ளது.
முற்காலப் பாண்டியர்களின் குடைவரைக் கோயில் பணிக்கு இச்சிவன் கோவில் சிறந்த சான்றாக விளங்குகிறது. சிறு கருவறையும், முன் மண்டபத்தையும் கொண்ட அழகான் இக் குடைவரைக் கோயில் கி.பி.7-8 ம் நூற்றாண்டை சேர்ந்தவை. தற்காலத்தில் இப்பகுடி மக்களால் இந்த மண்டபம் இடைச்சி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
இக்குடைவரை கோயில் சிறப்பு கருவறையில் உள்ள சிவலிங்கம் அந்த பாறையிலேயே நடுவில் செதுக்கி அமைக்கப்பட்டுள்ளது, முன் மண்டப வெளிசுவரின் இரண்டு தேவகோட்டங்களில் வலது பக்கம் விநாயகர் உருவமும், இடது பக்கம் இலகுசீலர் என்னும் சிவபெருமானின் உருவமும் புடைச்சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது. இதன் விபரம் பொதுமக்கள் அறிந்துகொள்ள கல்வெட்டுகளில் எழுதப்பட்டு தொல்லியல் துறையினரரால் நிறுவப்பட்டுள்ளது.
திரு. சித்திரவீதிகாரன்.சுந்தர், திரு.அ,முத்துகிருஷ்ணன் |
அந்த இடத்தில் இருந்து எதிர்மலையையும் ,சுற்றுபுறத்தையும் பார்த்தால் கண்ணை மயக்கும் அழகை காணலாம், அந்த மண்டபம் முன் 50 பேர் அமரும் படியான அமைப்பு பசுமை நடை ஆர்வலர்கள் அமர்ந்தோம், அரிட்டாப்பட்டியின் அழகியலையும், சிறப்பையும் அ.முத்துகிருஷ்ணனும், சித்திரவீதிகாரன் சுந்தரும் விளக்கினர்.
அந்த மலையின் வடக்கு பக்கம் சமணர் படுக்கை உள்ளது, அங்கு சென்றோம், அந்த பகுதிக்கு செல்லும் பாதையின் இரு பக்கமும் மலையில் பாறைகள் குன்றுகள் என ஒவ்வொன்றும் தனிதனி அழகுடன் காணப்பட்டது.சில இடங்களில் பாறைகள் இன்னோரு பாறையை எடுத்துவைத்தது போல் காணப்பட்டது, என்னேறமும் விழுந்துவிடுமோ என்ற பயம் காட்டும் அழகை கண்களால் திருடிக்கொண்டே மலையின் வடக்கு பக்கம் சென்றோம். மிகபெரிய ஆழமரம் அதன் அருகில் சமணகுகை உள்ளது அருகிலேயே வீடுகள் இருப்பதால் அந்த குகையில் ஆடு, மாடுகள் கட்டும்மிடமாக பயன்ப்டுத்தியுள்ளனர், தற்போதுதான் தொல்லியல் துறையினர் அந்த இடத்தை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
சமணபடுக்கை |
தடுப்பு சுவர்கள் கற்களால் ஏற்படுத்தியுள்ளனர், எனவே சிரமப்பட்டே அங்கு செல்லவேண்டியுள்ளது. அதன் அருகில் ஓர் வீடு உள்ளது, போனதடவை வந்தபோது அது குடிசைவீடாக இருந்தது தற்போது ஓட்டுவீடாக மாறியுள்ளது, அந்தவீட்டுக்கு மின் இணைப்பு தரப்பட்டுள்ளது,
ஒரு முறை ராகுல்காந்தி கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு காரில் வந்தபோது ஒரு வயக்காட்டில் மிக தள்ளி ஒரு வீடு காணப்பட்டது அந்த வீட்டில் மின்விளக்கு எரிந்துகொண்டுயிருந்ததை பார்த்து ஆச்சரியம் அடைந்தாராம் ஒரு தனி வீட்டுக்கு கூட மின்வசதி செய்யபட்டுள்ளதா என ஆச்சரியம்மடைந்தாராம். அதுபோல் அந்த வீட்டுக்கு மின் இணைப்பு தந்துள்ளதற்கு பாராட்டப்படவேண்டும்,
அதன் பின் இடது பக்க மலையில் ஏறினோம், சற்றே சிரமமான ஏற்றம் தான் சிறுவர்கள் ஓடிய படி ஏறிவிட்டனர். என்னை போன்றவர்கள் கையை காலாக பயன் படுத்தி ஏறினோம்.மலையின் மீது நின்று பார்த்தபோது இயற்கை எவ்வளவு பெரியது, அழகானது என்பதை உணர்ந்து கொள்ளமுடிந்தது, மலையிலேயே ஒரு கி.மீ நடந்தோம் மணி 9.30 என்றாலும் வெயில் இல்லாததால் சிரமம் தெரியவில்லை.
அந்த மலையின் மைய பகுதி சற்றே சரிவாக உள்ளது அங்குதான் சிதைக்கப்பட்ட நீர்பாசன சிறுஅணை கண்டோம், அந்த பகுதியில் கிரானைட் பாறைகளின் துண்டுகள் அடுக்கிவைக்கப்பட்டிள்ளது.
அங்கு இருந்து பார்த்தபோது நாங்கள் வந்த பேருந்து மொம்மையாக தெரிந்தது, இவ்வளவு தூரமா நடந்து வந்துள்ளோம், என ஆச்சரியமாக இருந்தது . அதன் பின் மலையில் இருந்து இறங்கி ஆழமரநிழலில் வழங்கபட்ட காலை உணவை சாப்பிட்டுவிட்டு பேருந்தில் ஏறி மாட்டுதாவணிபேருந்து நிலையம் வந்தோம்.
முதன்முறையாக கலந்துகொண்டவர்கள் அவசியம் அடுத்த பசுமைநடைக்கு அழைக்கவேண்டும் என ரகுநாத்திடம் பெயரையும், செல் பேசிஎண்னையும் கொடுத்தனர். ஒரு பயண அனுபவமே அவர்களுக்கு இவ்வளவு ஆனந்தத்தை தந்துள்ளது. எனில் 18 பசுமைநடையில் கலந்து கொண்ட என் ஆனந்தம் என்றுமே மறவாத பசுமைநினைவுகளாக அடுத்து இன்னும் பல நண்பர்களை அழைத்து வரவேண்டும்,
என எண்ணியவாறு வீடு திரும்பினேன்.
வலைப்பதிவாளர்கள் |
முருகேசன், வேல்முருகன், சுந்தர், தேவராஜ் விட்டலன் |
இடைச்சி மண்டபம் முன் சுந்தர் |
மேலும் அரிட்டாபட்டி பயணத்தை பற்றி அறிந்துகொள்ள நண்பரின் பதிவு ராஜன்னா