புதன், மார்ச் 12, 2014

மதுரை “ பேஷன் ஷோ” 2014



       மதுரையில் முதன் முறையாக ஒரு பிரமாண்டமான  ” பேஷன் ஷோ ” 9.3.2014 ஞாயிற்றுகிழமை மாலை ‘ சேம்பர் ஆப் காமர்ஸ்” அரங்கில் நடந்தது. மதுரை dream zone   இன்ஸ்டியூட் நடத்திய பேஷன் ஷோ பெங்களூர் மாடல்கள் கலந்து கொண்டனர். அதில் 15 மாணவர்கள் ஆடை வடிவமைப்பாளராக கலந்து கொண்டதில் எனது மகளும் ஒருவர். எனவே நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பார்வையாளராக கலந்துகொண்டேன்.

     பேஷன் ஷோ ஒரு கலாச்சார சீர்கேடு என மதவாதிகள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்வதை செய்திதாள்களில் செய்தியாக படித்துள்ளேன், எனவே சற்று தயக்கத்துடன் தான் கலந்து கொண்டேன், ஆனால் ஷோவை பார்த்த பின்னர் அது பொய் என்பதையும், இது ஆடைவடிவமைப்பாளர்களின் ஆடை வடிவத்திற்கு மாடல்கள் உயிர் கொடுக்கும் நிகழ்வாக பேஷன் ஷோ தெரிந்தது.

     ஷோ 5 மணிக்கு என்றதால் 5.30 க்கு அரங்கிற்கு சென்ற போது மிக குறைவாக பார்வையாளர்கள் வந்துயிருந்தனர். ஷோ 6.30 மணிக்கு ஆரம்பித்த போது அரங்கம் முழுவதும் பார்வையாளர்கள் நிரம்பி இருந்தனர்.
      மதுரையில் உள்ள பிரபலமானவர்களோ, அரசியல் தலைவர்களோ சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படாததால் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அரங்குநிறைந்த பார்வையாளர்கள் முன்னிலையில் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கியது.

     15 ஆடைவடிவமைப்பாளர்கள் [ வயது 20 க்குள் தான் இருக்கும்] ஒவ்வோருவரும் 5 உடைகள் டிசைன் என 75 ஆடைகள் தயாரித்து இருந்தனர்,
     ஒரு சுற்றுக்கு பதினைந்து மாடல்கள் என மொத்தம் ஐந்து சுற்று RAMP WALK நடந்தது, ஒவ்வொரு சுற்றுக்கும் இடையில் மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர்களின் கண்கவர் நடனம் நடைபெற்றது, சிறந்த நடனகுழுவுக்கு பரிசுகளும் வழங்கினர், மேலும் பார்வையாளர்களுக்கும் சிறுசிறு போட்டி வைத்து பரிசுகளும் உடனுக்கு உடன் வழங்கினர். நிகழ்ச்சி நடந்த மூன்று மணிநேரமும் விறு விறுப்பாக சென்றது.

      ஆடைவடிவமைப்பாளர்களின் முதல் கனவை உயிர் கொடுக்க மாடல்கள் ஒவ்வொருவராக மேடையில் நடந்து வந்தனர் , மயில் போல் நடந்து வந்து ஆடைகளின் நுணுக்கத்தை அழகாக வெளிப்படுத்தினர். அதற்கு ஏற்றார்போல் இசையும் , வண்ணவிளக்குகளும் பின்னனியில் சிறப்பு செய்தது.
        ஒருவர் ஒருவராக வந்து மேடையில் வலம் வந்தது அழகாக இருந்தது, அதன் பின் மொத்தமாக 15 மாடல்களும் மேடையில் அணிவகுத்து சுற்றி வந்து, வலம், இடம் என மாறிமாறி பிரிந்து நடந்து மேடையின் பின்புறம் சென்றதை பார்க்கும் போது ஒரு இராணுவ அணிவகுப்பை போல் கட்டுகோப்பாக இருந்தது. பார்க்கும் போது பிரமிப்பை தந்தது.

      மொத்தம் ஐந்து RAMP WALK நடந்தது, ஒவ்வொரு    WALK ம் வேறுவேறு  வித்தியாசமாக இருந்தது, முதல்   RAMP WALK    ல் மாடல்கள் தனி தனியாக வந்தனர், 2 வது  RAMP WALK  ல் இரண்டு பேர், அடுத்தது மூன்று பேர் என மாடல்கள்  மேடையில் தோன்றினர், ஒவ்வொரு முறையும் மேடையில் வளம் வந்து உடையின் அமைப்பையும் , நுனுக்கத்தை  பார்வையாளர்கள் அறிந்து கொள்ளும் விதமாக உடைக்கு ஏற்ப மாடல்கள்  RAMP WALK செய்தனர்.அதில் துளியும் ஆபாசம் ஏதுமில்லை என்பது மட்டும் உண்மை.
   மாடல்கள் முகத்தில் புன்னகையுடன் , ஒரு ராணுவ வீரர் போன்று மிடுக்குடன் மேடையில் RAMP WALK செய்தது பார்வையாளர்களை பிரமிக்கவைத்தது.  மொத்தத்தில் டிசைனர் செய்த ஆடைகளுக்கு மாடல்கள் உயிர் தந்தனர் என்றே சொல்லவேண்டும்.


    மாடல்களை  வழிநடத்தும் நிர்வாகி  நிகழ்வின் முடிவில், நாங்கள் மும்பை, டில்லி, பெங்களூர், சென்னை என முக்கிய நகரங்களில் பிரபலமான  பேஷன் டிசைனர் செய்த உடைகளுக்கு ஷோ செய்துள்ளோம். முதல் முறையாக மதுரை வந்துள்ளோம்,   வரும் போது சந்தேகத்துடன் வந்தோம் ஆனால்   DREAM ZONE இன்ஸ்டியூட் டிசைனர் திறமையை நேரில் கண்ட போது ஆச்சரியம் அடைந்தோம், மிகமிக அழகாக ஆடைகளை டிசைன் செய்துள்ளனர், இதில் எங்கள் மாடல்கள் பங்கேற்றது பெருமையாக உள்ளது என்றார்.

     ஆம் அது முற்றிலும் உண்மை 15 டிசைனர் செய்த எழுபத்தைந்து ஆடைகளும் மிக மிக நேர்த்தியாக இருந்ததால்  முதல் பரிசு, இரண்டாம் பரிசு என பிரிக்காமல் 15 பேஷன் டிசைனருக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தது பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

   ஒவ்வொரு  RAMP WALK  க்கும் 15 நிமிடம் இடைவேளை அந்த 15 நிமிடத்தில் புதிய உடை உடுத்தி அதற்கு ஏற்றார்போல் அணிகலன் மற்றும் மேக்கப் செய்து மேடையில் தோன்றினர், பெண்கள் மேக்கப் செய்ய அதிக நேரம் எடுத்துகொள்ளவார்கள் என்பதை மாடலகள் பொய்யாக்கினர்.அவ்வளவு வேகம்....

     மாடல்களுக்கு உடை அணிந்து மாடல்கள் தங்கள் உடையை அணிந்து வளம் வருவதை,  டிசைனர் பார்க்க அவர்களுக்கு மேடையின் முன்புறம் சீட் ஒதுக்கவில்லை, அவர்கள் கதவு ஓரத்தில் ஒருவர் மீதி ஒருவர் இடித்த படி நிகழ்ச்சியை பார்த்தனர், வாலண்டியர்கள் அந்த இடத்தில் நின்றுகொண்டதால் டிசைனர் சிரமப்பட்டனர்.

   மேலும் டிசைனர் குடும்பத்தினர் டிக்கட் வாங்கி வரவேண்டும் என கூறிவிட்டனர், என் குடும்பத்தினருக்கு அரங்கின் கடைசியில் சீட் ஒதுக்கப்பட்டதால், நிகழ்ச்சியை அருகில் இருந்து பார்க்க முடியாமல் போனது, இரண்டாவது, மூன்றாவது வரிசையில் சீட் ஒதுக்கி இருந்தால் பெற்றோர்கள் மகிழ்ந்து இருப்பார்கள்.

        மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அருமையாக தம் பணியை செய்தார், ஒளி ஒலி சிறப்பாக இருந்தது,     RAMP WALK   ன் போது ஒலித்த இசை மிக அருமை.
      மொத்தத்தில் பார்வையாளர்களுக்கும், ஆடைவடிவமைப்பாளர்களுக்கும் மறக்கமுடியாத பேஷன் ஷோ .      

         













      

வெள்ளி, பிப்ரவரி 21, 2014

பசுமைநடை [31 வது நடை] திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள சிக்கந்தர் தர்ஹா பயணம்




         இந்த மாதம் 16 ம் தேதி பசுமைநடை திருப்பரங்குன்றம் மலை உச்சி  என்று முத்துகிருஷ்ணன் அவர்களிடம் இருந்து தகவல் வந்தவுடன் சந்தோசப்பட்டேன்.  மதுரையில் வசிக்கும் போதும், தற்போது பணியின் காரணமாக விருதுநகரில்   வசிக்கும் போதும் சரி திருப்பரங்குன்றத்தை கடக்கும்போது எல்லாம் மலை உச்சிக்கு செல்லவேண்டும் என எண்ணுவது உண்டு. அந்த கனவு பசுமைநடையின் மூலம் நனவாக போகின்றது.
   
    இந்தமுறை விருதுநகரில் இருந்து அதிகமான நண்பர்களை அழைத்து செல்லவேண்டும் என எண்ணினேன் கடந்தமுறை இதே பிப்ரவரி மாதம் தான் பசுமைநடை திருப்பரங்குன்றம் மலை யில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயம் சென்றோம். அது மலை உச்சில் இல்லை மலையின் பாதி உயரத்தில் மலையின் தென்பகுதியில் உள்ளது. அப்போது விருதுநகரில் இருந்து 14 பேர் கலந்துகொண்டோம், எனவே இந்தமுறையும் அதிகமான நண்பர்களை அழைத்து செல்லவேண்டும் என நண்பர்களுக்கு தகவல் கூறினேன், நண்பர்களும் கலந்துகொள்ளுவதாக கூறிய நண்பர்கள்,
        வழக்கம்போல் முன் தினங்களில் பார்ப்போம், வரவில்லை என கூறிவிட்டனர்,தொடர்ந்து கலந்து கொண்ட நண்பர்களும் முக்கிய நிகழ்வு காரணமாக கலந்து கொள்ளமுடியாமல் போனது, கடைசியில் 5 பேர் மட்டுமே செல்லுவது என உறுதியானது.

          பசுமைநடைக்கு முன்தினம் சென்னையி உள்ள அக்கா மகள் துர்காவிடம் இருந்து போன் மாமா பசுமைநடையில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து, மதுரை  வந்துள்ளேன், நாளை எங்கு வர வேண்டும் என. மதுரையில் உள்ள உறவினர்கள் பலரிடம் கூறியபோதும் கலந்துகொள்ள நேரம் கிடைக்க வில்லை, சென்னையில் இருந்து பேஸ்புக் மூலம் தகவல் தெரிந்து கலந்துகொள்ள வந்திருப்பது மகிழ்ச்சி அளித்தது, காலை 6.30 மணிக்கு திருப்பரங்குன்றம் பஸ்நிலையம் முன் வந்து விடவும் என தகவல் கூறினேன்.

         காலை 5 மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்டு நண்பர்களுடன் பஸ் ஏறி திருமங்கலத்தை 6 மணிக்கு நெருங்கும் போது, துர்காவிடம் இருந்து போன் மாமா நான் திருப்பரங்குன்றம் வந்து விட்டேன் என  அப்போது வானம் கூட விடியவில்லை, தனியாக வந்துவிட்டால், அங்கேயே  இருக்கவும் நண்பரகள் வந்து விடுவாரகள் என பதில் கூறிவிட்டு பஸ்மாறி திருப்பரங்குன்றத்தை அடைந்த போது மணி 6.35 ஆகி விட்டது, நான் வரும் முன்பே துர்கா பசுமைநடை நண்பர்களுடன் நட்பாகி பேசிக்கொண்டு இருந்தால்,   பசுமைநடையின் சிறப்பே இதுதான் புதியவர்களையும் நெடு நாள் நண்பர்களாகவே பார்ப்பதால் முதல் முறை கலந்துகொள்பவர்களும் இது நம் குடும்பம் என்ற உணர்வை ஏற்படுத்திவிடும்.

         நண்பர் எஸ்.அர்ஷியா எனக்கு முன்பாகவே வந்து இருந்தார், வெகு நாள் கழித்து அவரை அங்கு சந்தித்தது, மகிச்சியை ஏற்படுத்தியது.
 
        7 மணிக்குள்ளாக சுமார் 150 பேர் கூடி விட்டனர், இன்னும் வந்து கொண்டு இருப்பதாக போன் வந்து கொண்டு இருந்தாலும் பசுமைநடை மலை நோக்கி புற்ப்பட்டு விட்டது, கேமிரா வைத்து இருப்பவர்கள், போட்டே சுட ஆரம்பித்துவிடார்கள்.
        இந்த முறை குளிர் இல்லை, அந்த நேரத்தில் சூரியன் வந்து இருந்தாலும் மேகம் என்னும் போர்வைக்குள் ஒளிந்து கொண்டதால் இதமான வெளிச்சம் மட்டுமே மலை ஏறும் போது உற்சாக படுத்தியது. மலை ஏறும் போது ஒன்றாக இருப்பவர்கள், கூட்டம் நடக்கும் இலக்கை அடையும் போது தனி தனி குழுவாக வந்து சேர்வார்கள், ஆனால் இந்த முறை மலை ஏறுபவர்கள் பிரிந்து போகாமல் மொத்தமாக மலை ஏறவும், ஒரே இடத்தில் ஓய்வு எடுக்கவும் முத்துகிருஷ்ணன் ஏற்பாடு செய்து இருந்ததால் ஒருவருக்கொருவர் நட்புடனும், புரிதலுடனும் மலை ஏறினோம்.
   
         மலைமீது பாதி தூரத்தை ஏறியவுடன் ஒரு பெரிய பாறை திட்டு வருகிறது அங்கிருந்து பார்த்தால் மதுரையின் மொத்த அழகும் பறவை கோணதில் பார்க்கும் போது ஆகா ஆகா என என்னதோன்றும். ரசித்துகொண்டே இருக்க புகை படம் எடுப்பவர்கள் குழுவாக உட்கார்ந்து இருக்கும்  ஆர்வலர்கலையும், சுற்றியுள்ள அழகையும் புகைபட கருவிக்குள் சிறைபடுத்திகொண்டு இருந்தனர், குறிப்பாக  குன்று இருக்கும் இடம்மெல்லாம் கந்தன் இருப்பான் என பக்தர்கள் சொல்லுவதை போல் கந்தன் என்பவர் சின்ன சின்ன குன்று மீது எல்லாம் ஏறி புகைபடம் எடுத்துக்கொண்டும் , கூட்டத்தை வழிநடத்திக்கொண்டும் சென்றார்,







     பாறை திட்டு உள்ள இடம் சற்று பெரிய இடமாக உள்ளது, அங்கு இருந்து தென்பகுதி பாதையில் காசிவிஸ்வநாதர் ஆலயம் செல்லும் பாதை பிரிகிறது. மேற்கே மலை உச்சி க்கு தர்ஹாவுக்கு தனிபாதை செல்கிறது, அங்கு ஓர் சிறிய தண்ணீர் குட்டையும், மூன்று பேர் சமாதியும் உள்ளது,
        அங்கு இருந்து திருப்பரங்குன்றத்தில் உள்ள வீடுகளையும் , கண்மாயையின் அழகையும் ரசித்தோம், ஆஹா என்ன அழகு திருப்பரங்குன்றம் கண்மாய்தான் எவ்வளவு பெரிது ஆனால் தண்ணீர் தான் இல்லை,  விளையாட்டு மைதானம் போல் உள்ளது ஒரு பகுதியில் இளைஞர்கள் கூட்டம் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்ததையும், இன்னோரு பக்கம் வெள்ளரிதோட்டத்தையும் பார்க்கமுடிந்தது,
      கண்மாயின் தெற்கு பகுதிதான் தண்ணீர் வரும் பகுதி அங்கு தற்போது வீடுகள் அதிகமாகி தண்ணீர் வரும் பாதை அடைபட்டு போனதால் கண்மாய் வறண்டு காணப்படிகிறது, இன்னும் கொஞ்ச காலத்தில் அந்த கண்மாய் வீடுகளாய் மாறி விடுமோ எனற அச்சமும் தோன்றியது ,
       
        அந்த இடத்தில் 10 நிமிடம் ஓய்வுக்கு பின் தர்ஹா நோக்கி மலை ஏறினோம் , அந்த இடத்தில் இருந்து சற்றே கடினமான ஏற்றம்தான், பசுமைநடை ஒருங்கினைப்பாளர்கள் சுந்தர், இளஞ்செழியன்,உதயகுமார், சதீஸ், மதுமலரன்னும் ஏறுவதற்கும் பாதுகாப்புக்கும் அரணாக நின்று உதவினர்.
   
      காலை 8.30 மணிக்கு சிக்கந்தர் தர்ஹா வை அடைந்தோம், செல்லும் பாதையில் குரங்குகள் கூட்டம் ஆனால் செல்லுபவர்களை ஒன்றும் செய்யவில்லை ,கடந்த முறை காசிவிஸ்வநாதர் செல்லும் வழியில் குரங்கு தொல்லை அதிகம் குழந்தைகளிடம் இருந்து பைகளை பறித்து சென்றது,  இங்கு அந்த பயம் ஏற்படவில்லை ஆச்சரியம் தான்.

        தர்ஹாவின் வாசல் முஸ்லீம் பள்ளி வாசலை போல் இருந்தாலும் உள்பக்கம் முற்றிலும் ஓர் இந்து கோவில் போன்றே உள்ளது. மண்டபம், கொடிமர மண்டபம், கர்ப்பகிரகம் என இருப்பதை காணமுடிந்தது.1180 ம் ஆண்டுகளில் இங்கு இருந்த கோவிலில் சிக்கந்தர் என்னும் முஸ்லீம் மன்னர் தலைமறைவாக இருந்தபோது, இந்து மன்னர்களால் விட்டி கொல்லபட்டார், அன்று முதல் இது தர்ஹாவாக மாறினாலும் உள் கட்டமைப்பு மாறாமல் இருந்து வருகிறது.

         தர்ஹாவை விட்டு வெளிவரும் போது  சர்க்கரையும், விபூதியும் பிரசாதமாக தரப்படுகிறது, முஸ்லீம்கள் வியாழக்கிழமை மாலை இங்கு வந்து  இரவு தங்கி வெள்ளிகிழமை சாமி கும்பிட்டு திரும்புகின்றனர்,

           தர்ஹாவின் வெளியே பசுமைநடை ஆர்வலர்கள் அமர அந்த இடத்தின் சிறப்பையும், புதிதாக வந்தவர்களை வரவேற்றும் அ.முத்திகிருஷ்ணன் பேசிய பின்  .  எழுத்தாளர். திரு. எஸ்.அர்ஷியா அவர்கள் அந்த இடத்தின் வரலாற்றை ஆர்வலர்கள் முன் எடுத்துரைத்தார், விரிவான அதே சமயம் எளிமையாக விளக்கினாரகள்.
       முஸ்லீம் மதத்தை மக்களிடம் பரப்பவந்தவர்கள், பின்னாளில் மதம் மாறிய மக்களை படை திரட்டி மதுரையை கைபற்றி சிக்கந்தர் மன்னரான வரலாற்றையும், 20 ஆண்டுகளுக்கு பின் வடக்கில் இருந்து வந்த இந்து மன்னர்களால் விரட்டப்பட்டு இந்த மலை மீது உள்ள கோவிலில் மறைந்து வாழ்ந்த வந்த சிக்கந்தர் மன்னரையும், படைதளபதிகளையும் கொன்றனர்,
    கொல்லப்பட்ட மன்னர் சிக்கந்தர் பாதுஷா புதைக்கப்பட்ட இடமே இன்று வணங்கும் இடமாகவும், வாழ்ந்த கோவில் தர்ஹாவாகவும் மாறி இன்று மதம் கடந்து இந்து , முஸ்லீம், கிருஸ்தவர்கள்  என வந்து வணங்கி செல்லும் இடமாக திகழ்கிறது என்றார் கேட்க கேட்க மலைப்பாக இருந்தது.

     அர்ஷியாவுக்கு பின் திருமங்கலம் கவிஞர். திரு.ஷாஜஹான் அவர்கள் பேசினாரகள். தர்ஹா இன்று மதம் கடந்து மக்கள் வணங்கும் இடமாக மாறிவருவதை முஸ்லீம் தீவிர வாதிகள் விரும்பவில்லை அல்லாவை தவிர யாரும் வணங்குவதற்குரியவர் அல்ல எனவே இது போன்ற தர்ஹாவை அழிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தை மதம் கடந்து வணங்கும் மக்கள் ஒன்று கூடி காக்க வேண்டும், என்றார்.  தர்ஹாவுக்கு முன் இப்படியொரு ஆபத்து உள்ளதை அறிந்துகொள்ளமுடிந்தது.
     
            கீழ் இருந்து மலையை பார்க்கும் போது மரங்கள் அற்ற மலையாக தெரிந்தாலும் அங்கு மரங்கள் அதிகம் காணப்பட்டது,
      மலையின் உச்சியில் இருந்து நான்கு திசையிலும் காணமுடிந்தது, அழகை வார்த்தையால் வர்ணிக்கமுடியாத ரசிக்கமட்டுமே முடிந்த கவிஞன் ஆனேன், ரயில் பூச்சியாக சென்ற ரயிலின் அழகை சொல்லுவதா ,பஸ்களும், கார்களும் ரோட்டில் சென்றது மொம்மையாக தெரிந்த அழகை சொல்லுவதா, சுற்றிலும் பார்த்து ரசிக்கும் பசுமைநடை ஆர்வலர்களின் முகத்தில் தெரிந்த ஆனந்தத்தை சொல்லுவதா ..முடியாது யாராலும் வர்ணிக்க முடியாது என தோன்றியது...

    மலையை விட்டு இறங்க ஆரம்பித்தோம், சூரியன் மேகத்தை விட்டு அவ்வம்போது வெளிவந்து எட்டிபார்த்து சென்றான், ஏறிய போது இருந்த சிரமம் இறங்கும்போது தெரிய வில்லை, அடிவாரத்தில் உள்ள கோவிலில் காலை உணவு வழங்கப்பட்டது, அன்பால் வழங்கப்பட்ட உணவு சிறிதானாலும், மனநிறைவாக இருந்தது.
 
  கவிஞர். திருமதி. தீபாநாகராணி மலை இறங்கும் போது சொன்ன வார்த்தை. மலையின் கீழ் கந்தர், மலையின் மேல் சிக்கந்தர். என்றார், ஆம் உண்மை தான் திருப்பரங்குன்றம் மத ஒற்றுமையின் சின்னமாக திகழ்கிறது

        மலை உச்சியில் நின்ற போது மதுரையில் எத்தனையோ பேர் உள்ளனர் ஆனால் அவர்களில் பலருக்கு கிட்டதா அனுபவம் பசுமைநடை ஆர்வலர்களுக்கு கிட்டியுள்ளது..என மனதிற்குள் நினைத்துகொண்டேன்.

   மாலை மலை ஏறி இரவு ஒளிவெள்ளத்தில் மதுரையின் அழகை ரசித்திவிட்டி வரவேண்டும் என ஆசை மனதில் தோன்றியது.  ஆசையை முத்துகிருஷ்ணனிடம் கூறிவிட்டு ,  பசுமை நினைவுகளுடன் வீடு திரும்பினேன்.....

தர்ஹாவின் முன் வாசல்




எழுத்தாளர். அ.முத்திகிருஷ்ணன் உரை

எழுத்தாளர். எஸ்.அர்ஷியா 

கவிஞர் ஷாஜஹான் 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் 


கவிஞர் .பேனா மனோகரன் அவர்களுடன் விருதுநகர் நண்பர்கள்



இனிய நண்பர் எஸ்.அர்ஷியாவுடன்

புதன், டிசம்பர் 25, 2013

விருதுநகர் புரோட்டா



         விருதுநகர் புரோட்டா

            இன்று புரோட்டா நடுத்தரமக்களின் முக்கிய உணவாக மாறிவிட்டது.
புரோட்டாவின் விலை குறைவு, ருசி, சிறிது சாப்பிட்டாலும் வெகு நேரம்  பசிக்காது இதன் காரணமாகவே உழைப்பாளர்களின் தினசரி சாப்பிடும் முக்கிய உணவாகை போனது.

           புரோடாவுடன் சால்னா, கோழி கறி, புறா கறி என சைடுடிஸ்ஸாக பயண்படுத்திவருகின்றனர்.
       
             ஊர் பேர் சொன்னால் அந்த ஊரின் சிறப்பு, அங்கு வாழ்ந்த தலைவர்கள் பெயர் தெரியுதோ இல்லையோ அந்த ஊரின் முக்கிய உணவு எஅது என்பது பலருக்கு தெரிந்து இருக்கிறது, அதுபோல்  விருதுநகர் என்றால் காமராசரை தெரியுதோ இல்லையோ புரோட்டா ஞாபகத்திற்கு வரும். விருதுநகர் புரோட்டா என தமிழகம் முழுவதும் ஹோட்டலில் சாப்பிட கிடைத்தாலும் விருதுநகரில் வந்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான்,

           இன்று விருதுநகரை காரில் கடந்து செல்பவர்கள் விருதுநகர் பர்மா கடையில் புரோட்டா சாப்பிடாமல் போகமாட்டார்கள், முழுவதும் ஏசி செய்யபட்ட அந்த ஹோட்டலில் ஞாயிற்றுகிழமையில் கூட்டம் மிக அதிகம் உள்ளூர் மக்கள், வெளியூர் மக்கள் என குவிகின்றனர்.

         மற்ற கடையில்  தோசை கல்லில் சப்பாத்தி சுடுவது போல் புரோட்டா சுடுவார்கள், ஆனால் விருதுநகர் புரோட்டா என்பது பூரி சுடுவது போல் எண்ணையில் பொறித்து எடுப்பது, ஆனால் இருப்புசட்டியில் போட்டு எடுக்காமல், இதற்கு என சிறிது குழிபோன்று அமைப்பு உள்ள தோசை கல் உள்ளது. அதில் நடுவில் நல்லெண்ணை விட்டு கொதித்தவுடன், புரோட்டாவை அதில் போடுவார்கள், புரோட்டா எண்ணையில் பாதி அளவு மூழ்கிய நிலையில் தோசைகல்லின் சூடும் புரோட்டாவில் படும்.
       கல்லின் சூடும், எண்ணையின் சூடும் ஒரு டூ-ன்-ஒன் போன்று சுடவைக்கப்படும்,
சுட்டு எடுத்த புரோட்டா மொறு மொறு என இருக்கும்,  அதில் சால்னவை ஊற்றி சாப்பிட்டால் சாப்பிடவர்கள் ருசியை மறக்கவே மாட்டார்கள். இத்துடன் புறா ரோஸ்ட், காடை வருவல் என சாப்பிடுவார்கள்.


   வெளியூர் மக்களுக்கு பெரிய கடைகள் மட்டுமே தெரியும், ஆனால் பெரிய கடைகளை விட விலை குறைவாக ருசி அதிகம் உள்ள சின்ன கடைகளும், பிளாட்பார கடைகளும் விருதுநகரில் உண்டு.


ஆனால், வெளியூர்காரர்களுக்கு விருதுநகர் புரோட்டா என அழைத்தாலும், விருதுநகரில் இந்த புரோட்டாவை எண்ணைபுரோட்டா என்றே சொல்லுவார்கள்.
     சைவ உணவு சாப்பிடுபவர்களும் இந்த எண்ணை புரோட்டாவில் சாம்பார் ஊற்றி ஊறவைத்து பின்னர் தேங்காய் சட்டினி, மல்லி சட்டினி என தொட்டு சாப்பிடுவார்கள், அசைவ உணவு சாப்பிடுபவர்களும் சாம்பார் ஊற்றி சைட்டிஸ்ஸாக மட்டன், சிக்கன், என வாங்கி சாப்பிடுகிறார்கள்.

     இந்த புரோட்டா செய்முறை எப்படி வந்தது என வரலாறு தெரியவில்லை, ஆனால், நல்லெண்ணை கம்பெனி விருதுநகரில் அதிகம் இருப்பதால் இந்த முறையில் புரோட்டா செய்து பழகி பின் அதுவே பழக்கத்தில் வந்து இருக்கும்.

       குறிப்பு:
         புரோட்டா இன்று மக்கள் விரும்பி சாப்பிடாலும், இது சத்தான உணவு அல்ல, அது மட்டும்மல்லாது புரோட்டா சாப்பிடால் சக்கரை நோய் வரும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது, எனவே புரோட்டாவை தவிர்ப்போம்...... 


விருதுநகர் நடுவில் உள்ள தெப்பக்குளம் [கோடையிலும் வற்றாது தண்ணீர் இருக்கும்]
de2.gif

வியாழன், டிசம்பர் 12, 2013

பசுமைநடை 28 திருவேடகம்



        24.11.13 ஞாயிற்றுகிழமை ”திருவேடகம்” பசுமைநடை என்ற குருஞ்செய்தி 20 தினங்களுக்கு முன்பே வந்துவிட்டது, நண்பர்களிடம் தகவல் கூற ஏற்கனவே பசுமைநடை வந்து இருந்த நண்பர்களும் , புதிய நண்பர்களும் வருகிறோம் என்றனர், ஆனால் முதல் வாரம் எனக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது, டைபாயிடு காய்ச்சல் எனவே வேலைக்கும் போகமுடியாமல் மருத்துவவிடுப்பு போட பசுமைநடையில் கலந்துகொள்ள விரும்பிய நண்பர்களுக்கோ  என்னாச்சு இப்ப எப்படியுள்ளீர்கள் 24ம் தேதி வந்துவிடுவீர்களா என்ற நலம்விசாரிப்பு, 6 தினங்களுக்கு பின் 23 ம் தேதி வேலைக்கு சென்றபோது என் உடல் நலம் எப்படியுள்ளது என்று விசாரிக்காமல் நாளை பசுமைநடை போகலாம் அல்லவா என்றுதான் கேட்டனர், நானும் சிரமம் நீங்கள் போய்வாருங்கள் என்றால் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்றனர்,
 
  6 தினங்கள் வீட்டுக்குள் அடைந்துகிடந்தது மனதுக்கு புத்துயீர்ப்பு அளிப்பதுபோல் போகலாம் என முடிவு செய்து, 24ம் தேதி காலை 5 மணிக்கு விருதுநகரில் இருந்து புறப்பட்டோம், முன் தினம் வருவதாக கூறிய 3 பேர் வராததால்  4பேர் மட்டும் புறப்பட்டோம்,
   
 முன் தினம் இரவு திருமங்லத்தில் இருந்து  நண்பர் ரகுநாத் , காலை 6 மணிக்கு திருமங்கலம்     ஆனந்தா தியேட்டர் வந்துவிடவும் என உத்திரவு போட்டதால்  சரியாக 6 மணிக்கு திருமங்கலம் வந்தால் ரகுநாத்தை காணவில்லை, போனில் அழைத்தால் இதோ வந்துவிடுகிறேன் என கூற.
      எங்களுக்கு முன் அங்கு வந்து இருந்த இளஞ்செழியன், வஹாப் ஷாஜ்ஹான், டீ குடித்துகொண்டு இருக்க நாங்களும் அவர்களுடன் இணைத்து கொண்டோம், அதன் பின் ரகுநாத், மற்றும் அவரது நண்பர் தன் இரு குழந்தையுடன் வர, நாங்கள் செக்காணூரணி வழியாக மேலக்கால் சென்றோம், தற்போது செக்காணூரணி பாதை அகலப்படுத்தியுள்ளனர், எனவே பைக் ஓட்ட சிரமம் இல்லை, முன் தினம் மழை காரணமாக அதிகாலை நேரம் என்பதால் குளிர்தான் அதிகம்,

     மேலக்கால் தாண்டி சோழவந்தான் சாலையில் காத்து இருந்தோம், வடக்கில் வைகை ஆறு, தெற்கில் வாழைதோப்பு, கிழக்கில், மேற்கில் தென்னம்தோப்பு என அந்த இடம் ரம்மியமாக காணப்பட்டது, காலை 7. 30 மணி இருக்கும் மதுரையில் இருந்து அ.முத்துகிருஷ்ணன் தலைமையில் ஒரு பெரும் பட்டாளம் பைக், கார் என ஒரு ஊர்வலம் போல் அணிவகுத்து வந்தனர், அவர்களுடன் நாங்களும் இணைந்துகொண்டோம்,





   வைகை ஆற்றை கடந்து திருவேடகம் வைகை ஆற்று படித்துறையை அடைந்தோம், அந்த நேரத்தில் ஆற்றங்கரையில் கூடியிருந்தோர் இவ்வளவு கூட்டமா என அதிசயமாக பார்த்தனர், பசுமை நடை ஆர்வலர்கள், பைக், கார்களை படித்துறை அருகில் நிறுத்திவிட்டு ஏடகநாதர் கோவில் நோக்கி சென்றோம், சாமி கும்மிட அல்ல கோவிலின் வரலாற்றை அறிந்துகொள்ள  கோவிலின் முன் பாதியில் நிறுத்தியுள்ள கோபுரத்தை தாண்டி முதல் பிரகாரத்தில் போய் உட்கார்ந்தோம்,

       மதுரையில் இருந்து சோழவந்தான் சாலையில் சோழவந்தான் ஊர் அருகில் உள்ளது, திருவேடகம் நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத இரண்டும் கலந்த ஊர்,
       ஏடகநாதர் கோவில் பிரமன், திருமால், ஆதிசேஷன் , கருடன், வியாசர், பராசர், ஆகியோர் வழிபட்ட திருத்தலம் என தலபுராணம் கூறுகிறது, வேலைபாடுமிக்க கருவறை, பிராகாரத்தில் அறுபத்துமூவர் சிலைகள் அழகாக காட்சியளிக்கிறது, தேவாரத்தில் இத் திருதலம் இடம் பெற்றியிருப்பதால் இக்கோவில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஊகிக்கலாம், பின்னர் 13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் விரிவாக்கமும் புனரமைப்பும் செய்தார்கள், 16 ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் கோபுரம் கட்ட முயன்று நிறைவு பெறாமலேயே நின்றுவிட்டது, 1930 ல் நாட்டுகோட்டை செட்டியார்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் கோயிலை புனரமைத்து குடமுழுக்கு செய்துள்ளனர். இங்கு உள்ள கல்வெட்டில் திருஞானசம்மந்தர் மடம் பற்றியும் அதற்கு வழங்கப்பட்ட நிலக்கொடை பற்றியும் உள்ளது. கோவிலின் வரலாற்றை தெரிந்துகொண்டபின் அணைவரும் வைகை படித்துறை நோக்கி சென்றோம்.  




       இங்கு உள்ள படித்துறையில் உட்கார்ந்தால் மனம் அமைதிபெறும் அவ்வளவு அழகும், பசுமையும், அமைதியும் அங்கு காணப்பட்டது, சமணத்திற்கும், சைவத்திற்கும் எங்கள் மதமே உயர்ந்தது என போட்டி வந்து  இரண்டு மதத்தை சேர்ந்தவர்களுக்கும் அனல்வாதம், புனல்வாதம், ஏற்பட்டது அப்போது இரு மதத்தை சேர்ந்தவரகள் தம்மதத்தின் பாடல்களை தனிதனியாக ஓலைசுவடியில் எழுதி வைகை ஆற்றில் ஓடும் நீரில் தூக்கி போட நீர் ஓட்டத்திற்கு எதிராக எந்த மதத்தின் ஓலைசுவடி வருகிறதோ அந்த மதமே உயர்ந்தது, என முடிவு செய்து அதன் படி தூக்கிபோட , ஞானசம்மந்தர் “வன்னியும்மத்தமும்” என்னும் திருப்பதிகம் பாட  சைவமத ஓலைசுவடி இங்கு கரை ஒதுங்கியதாக வரலாறு, எனவே ஏடு+அகம் ஏடகம் என்று அழைக்கப்பட்டு பின் திவேடகமாகி போனது,[சமண மதத்தின் ஓலைசுவடிகள் இப்போது திருப்பாசேத்தி என அழைக்கப்படும் ஊரில் கரை ஒதுங்கியதாக கூறுகிறார்கள்]

    ஏடு கரை ஒதுங்கிய இந்த வைகை ஆற்றின் கரையில் அழகான படித்துறை அமைத்துள்ளனர், ஒரு பக்கம் சப்தமாதாக்கலும், இன்னோறு பக்கம் ஏடு கரை ஒதுங்கிய காட்சி கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது.

      படித்துறை மண்ணாகவும், தூசியாகவும் இருந்தது, பசுமை நடை ஆர்வலர்கள் அந்த படித்துறை முழுவதும் கூட்டி சுத்தம் செய்தனர், சுத்தம் செய்ததை அந்த ஊர் மக்கள் சிலர் ஆச்சரியமாக பார்த்தனர்.
       சுத்தம் செய்த பின் கரைஓரம் ஓடிய நீரில் இறங்கி [முட்டிகால் வரை ] காலை நனைத்துகொண்டே கடந்து ஆற்றின் மையம் நோக்கி நடந்து சென்று உட்கார்ந்தோம் அ.முத்துகிருஷ்ணன் அணைவரையும் வரவேற்று பேச ஐயா திரு. சாந்தலிங்கம் அவர்கள் மேற்கண்ட வரலாற்று சிறப்பை எடுத்துரைத்தார்கள்.
     மதுரை குரு தியேட்டரில் முதல் விரகனூர் அணை வரை மணலே இல்லாத வைகை ஆற்றையே மதுரை மக்கள் பார்த்து இருப்பார்கள், மதுரையின் கழிவு நீர் வாய்காலாகவும் குப்பை கொட்டும் இடமாகவும் பயன்படுத்துவது வேதனை யளிக்கிறது , ஆனால் இங்கு கண்ணுக்கு எட்டிய வரை மணல் தான் நீர் ஓடாவிட்டாலும் கரை ஓரம் தென்னம்தோப்புகள் பசுமையாக காட்சியளிக்கிறது.

      வைகை ஆறு கடலில் கலக்காத ஆறு என்பர், வைகை ஆற்றில் ஓடும் நீர் ஆர்.எஸ். மங்கலம்  கண்மாய், இராமநாதபுரம் பெரியகண்மாயில் சேர்கின்றது எனவே கடலில் சேர்வதில்லை, கண்மாய் நிறைந்து அதன் பின் உபரி நீர்தான் கடலில் கலக்கும்,  ஆனால் வைகை அணை கட்டிய பின் பெரியகண்மாய் நீர் வரத்தின்றி வற்றி போய்விட்டது.
 
  சாந்தலிங்கம் ஐயாபேசிய  பின்  ஆற்றுக்குள்ளேயே காலை உணவு வழங்கப்பட்டது, மணலில்   உட்கார்ந்து காலை உணவு சாப்பிட்டது ஆனந்த அனுபவம், உணவுக்கு பின் குவாலிட்டி நடண குழுவினர் ஆற்று மணலில் மீன்கள் போல் தாவி துள்ளி குதித்து சாகசம் காட்டினர், பசுமை நடை ஆர்வலர்கள் ஆச்சரியமாக பார்த்தனர், அவ்வளவு அழகாக இருந்தது,
     


புகைபடம் எடுத்தது இபி ஜெய்

     அதன் பின் அணைவரும் ஆற்று கரை வந்தோம், படித்துறையில் உட்கார்ந்து புகைபடம் எடுத்துகொண்டோம்,, ஒவ்வொரு பசுமைநடையிலும் ஸ்ரீராம், சுந்தரராசன், செல்வம்ராமசாமி, ராஜன்னா, ரகுநாத், குணா என புகைபட நிபுணர்கள் எடுக்கும் புகைபடங்கள் அழகாக பேஸ்புக்கில் பதிவு செய்து வருகின்றனர், இப்போது புதிதாக பசுமைநடையில் வந்து கலந்துகொண்டு புகைபடங்கள் எடுத்து மனதை கொள்ளை அடித்து வரும் அருண்பாஸ், இபி ராஜ் ஏகே 47 துப்பாக்கி போல் கேமிராவை கொண்டு வந்து மிரட்டும் அன்பு உள்ளங்களை சந்தித்து பேசினேன்,

    பைக்கை எடுக்கும் போது அங்கு ஒரு இளவட்டக்கல் இருந்தது , உடன் தூக்கிபார்க்க ஆசை, உடன் வந்த நண்பர் முருகன் ஒரே மூச்சில் தூக்கி முதுகின்பக்கம் போட்டார், கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர், சப்தம் கேட்டு குவாலிட்டி நடனகுழுவினர் அங்கு வர அவர்களும் இளவட்டக்கல்லை தூக்கினர், இளம் இரத்தம் என்பதை நிரூபித்தனர், மேலும் சிலர் முயற்சி செய்தனர், தூக்கமுடியவில்லை  திருமங்கலம் ரகுராம் தூக்கினார் , உடனே நானும் முயற்சிசெய்ய  இளவட்டக்கலை தூக்கினேன் நெஞ்சுவரை தூக்கினேன் இளம் பசுமைநடை ஆர்வலர்கள் தூக்குங்கள் என ஆரவாரம் செய்ய , விருதுநகர் நண்பர்களோ உடல்நலம் சரியில்லை வேண்டாம்  என எச்சரித்தனர், என்னாலும் நெஞ்சுக்கு மேல் தூக்க முடியவில்லை,  இந்த விளையாட்டை ஊர்மக்களும் ரசித்தனர்

      அதன்பின் நண்பர்கள் சிலர் நாகர் தீர்த்தம் பார்க்க சென்றனர், நான் வழக்கம் போல் பசுமை நடையின் பசுமையான நினைவுகளுடன் வீடு திரும்பினேன்,