வெள்ளி, அக்டோபர் 23, 2015

52 வது பசுமைநடை முத்துபட்டி-பெருமாள் மலை

      



        அதிகாலை 5 மணி, விருதுநகரில் இருந்து பைக்கில் பசுமைநடைக்கு புறப்பட்டேன் முதல்நாள் மழை காரணமாக குளிர் ஹெல்மேட் அணிந்ததால் சற்றே குளிரைதாங்கி கொள்ள முடிந்தது. மதுரையில் காளவாசல் பகுதியில் சந்தித்து அங்கிருந்து முத்துபட்டி புறப்படுவது என ஏற்பாடு நான் மதுரை சென்றால் தாமதமாகும் என்பதால் நான்குவழி சாலை வழியாக நாகமலைபுதுக்கோட்டை வந்துவிட்டேன். அங்கு முதல் முறையாக  பசுமைநடையில்கலந்து கொள்ளும் என்னுடன் பணி பார்க்கும் தம்பி சரவணகுமாரும் வந்துவிட சிறிது நேரம் பசுமைநடை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்.

    மதுரையில் காளவாசல் பகுதியில் பசுமைநடை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து காலை 6.40 மணிக்கு 52வது பசுமைநடை முத்துபட்டி நோக்கி பைக் மற்றும் காரில் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு விட்டதாக நண்பர் உதயகுமார் தகவல் கூறினார். பசுமைநடை ஆர்வலகளின் வாகனஅணிவகுப்பு நாகமலையை கடக்கும் போது நாங்களும் அவர்களுடன் இணைந்து கொண்டோம்,
 உசிலம்பட்டி ரோட்டில் தொடர்ந்து பயணம் செய்தோம், காமராசர் பல்கலைகழகத்திற்கு சற்று முன்பாகவே இடது பக்கம் திரும்பினோம் அந்த திருப்பத்தில் பசுமைநடை பேனர் கட்டியிருந்ததால் இடம் பற்றிய சந்தேகம் வராமல் சரியான பாதையில் செல்லவும் பேனர் வழிகாட்டியாக பயன்பட்டது. ஒருங்கினைப்பாளர்களில் சிலர் முன் தினம் இங்கு வந்து கார்பார்கிங் இடங்கள் தேர்வு செய்தும் மற்றும் சமணர் படுக்கைகளை சுத்தம் செய்து விட்டு சென்றனர்.



      கடந்த 27.11.2011பசுமைநடையில்  நானும் நண்பர் பாலசுப்பிரமணியும் மழையுடன் பசுமைநடையின் ஆர்வலர்களில் ஒருவனாக கலந்து கொண்டேன், இன்று அதே பெருமாள்மலைக்கு பசுமைநடையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவனாக கலந்து கொள்ளவது மனதுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் தான்.
   2011 ல் பெருமாள் மலைக்கு சென்றபோது பாதி மலையை காணவில்லை, உடைகல்லுக்கு பாறைகளை உடைத்து மலைகளின் பெரும்பகுதியை அழித்துவிட்டனர். 4 ஆண்டுகளுக்கு கழித்து அதே மலையை கண்டபோது அன்று அழிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது மனதுக்கு சற்றே ஆறுதல். ஆனால் மலையை ஒட்டிய வயல் பகுதி ப்ளாட்டாக மாறி பல வீடுகள் கட்டப்பட்டு இருப்பதை காணமுடிந்தது.

   மலையை ஒட்டிய குடியிருப்பு காலனியில் உள்ளவர்கள் என்னடா இவ்வளவு கூட்டம் காலை 7 மணிக்கு என ஆச்சரியமாக பார்த்தனர். நாங்கள் மலையின் மேல் அமைந்துள்ள சமணர் குகையை காணவந்துள்ளோம் என்றதும்  மலையின் இடையில் காணப்பட்ட ஒத்தையடி பாதை வழியாக செல்லசொன்னார்கள். சின்னாபின்னமாக்கப்பட்ட மலையின் இடையே உடைக்கப்பட்ட மலையை கவலையோடு பார்த்தவாறு மலையின் தென்கிழக்கு பகுதியை வந்து அடைந்தோம், அந்த பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை போர்வையை விரித்தது போன்று வயலும், தென்னை தோப்பும் தான்.
    மலையின் தென்கிழக்கு மூலையில் சிறுகுன்று அதன் மேல் சமணர் குகையும் சமணர்படுக்கைகளும் உள்ளது. குன்று மீது சிரமம் இல்லாமல் ஏற முடிந்தது. குகையின் வெளிமேற்பகுதியில் தென்திசை பார்த்து இரண்டு தீர்த்தங்கர் சிலையும் அதன் கீழ் தமிழ் பிராமிய எழுத்துக்களும் செதுக்கப்பட்டு இருந்தது, சமணர் படுக்கைகள் வழுவழுப்பாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது.தற்போது சில சமூக துரோகிகள் சிலர் இங்கு காணப்படும் படுக்கைகள் மீது தங்களுடைய பெயர்களை செதுக்கி வரலாற்று சின்னங்களை பாழாக்கியுள்ளனர்.
அங்கு இருந்து மதுரையைின் அழகை ரசிக்க ஆயிரம் கண்போதாது தூரத்தில் திருப்பரங்குன்றம் மலை என உயரத்தில் இருந்து சமவெளியை பறவையை போல் பார்ப்பது ஆஹா என்ன ஓர் ஆனந்தம் 
     








     வந்திருந்த அனைவரும் குன்றின் நிழல் பகுதியில் அமர்ந்தோம். இந்த முறை பசுமைநடை அமைப்பாளர் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன்  ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால் ஒருங்கிணைப்பாளர்கள் கூடி ஏற்பாடு செய்த முதல் பசுமைநடை எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகம் புதியமுகங்கள் அதிகம் வந்து இருந்தனர் குறிப்பாக 5 வயது முதல் 75 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்டுள்ளதை காணமுடிந்தது,
  அந்த இடத்தின் சிறப்புகளை திரு.சாந்தலிங்கம் ஐயா உரைநிகழ்த்தினார்கள், முடிவில் ஆஸ்திரேலியாவில் இருந்து அ.முத்துகிருஷ்ணன் செல்பேசியில் பசுமைநடையை வாழ்த்திபேசியதை ஒலிபெருக்கி மூலம் அனைவரும் கேட்க ஆர்வலர்களின் உற்சாக கைதட்டல் ஆஸ்திரேலியாவில் எதிரொலித்தது.

   ஒருவர் பசுமைநடையின் நோக்கம் என்ன என சாந்தலிங்கம் ஐயாவிடம் கேட்க, அதற்கு அவர் மதுரையின் வரலாற்றை மதுரையில் உள்ளவர்கள் மற்றும் மதுரையை நேசிப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என்றார், அப்போது பார்வையாளர்களில் ஒருவர் நான் அரிட்டாபட்டி கிராமத்தை சேர்ந்தவன் பசுமைநடை குழு அரிட்டாபட்டிக்கு பசுமைநடை நடத்தியபின்னர் தான் மலையின் சிறப்பை முழுமையாக எங்கள் கிராம மக்கள் அறிந்துகொண்டனர்,அதன் பின் எங்கள் போராட்டம் தீவிரம் அடைந்து கிரானைட் கும்பலிடம் இருந்து அரிட்டாபட்டி மலையை காத்தோம் இன்றும் பல பேர் குழுவாக அடிக்கடி மலைக்கு  வந்துசெல்கின்றனர் என கூறிய போது ஆர்வலர்கள் அனைவரும் கைதட்டி மகிழ்வை தெரியப்படுத்தினோம்.
  
    அறியாத மதுரையை காண்பதும் அதை காப்பதும் தான் பசுமைநடையின் நோக்கம். மலைமீது அமர்ந்த இடத்திலேயே ஆர்வலர்களுக்கு காலைஉணவு வழங்கப்பட்டது. உணவு உண்ட பின் அந்த இடத்தில் 200 பேர் உண்ட சுவடு இல்லாத வகையில் சுத்தமான நிலைஏற்படுத்திய பின் மலையை விட்டு பிரியமனம் இல்லாமல் இறங்கினோம். ஒவ்வோரு பசுமைநடையும் பசுமையான நினைவுகளை ஆர்வலர்களின் மனங்களில் விதைத்து சென்றது.




























































52 வதுபசுமைநடையின் நண்பரின் அற்புதமான பதிவை படித்து பாருங்கள்.
பெயர் மீது கிளிக் செய்யுங்கள்......
           சித்திரைவீதிக்காரன்


  

புதன், அக்டோபர் 14, 2015

குல்லூர்சந்தை அணை









விருதுநகர் அருகில் உள்ளது குல்லூர்சந்தை அணை என அழைக்கப்படும் இது பெரிய அணை கிடையாது தண்ணீரை தேக்கி வைத்து இருக்கும் ஓர் கண்மாய்  இங்கு வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன

சனி, அக்டோபர் 18, 2014

பாறைத்திருவிழா



                                              பாறைத்திருவிழா
        நாற்பதாவது பசுமைநடையை கொண்டாடும் விதமாக பாறைத்திருவிழா சமணர்மலை அடிவாரத்தில் 28.09.14 ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
     40 வது பசுமைநடையை சிறப்பாக கொண்டாடவேண்டும் என பசுமைநடை ஒருங்கினைப்பாளர்கள் முடிவு செய்து, விழாவிற்கான பெயர், மற்றும் இடம் தேர்ந்து எடுத்தனர். கடந்த ஆண்டை போலவே கீழ்க்குயில்குடி சமணர்மலை அடிவாரத்தில் உள்ள ஆழமரத்தின் கீழ் நடத்துவது என்றும், அதற்கு பாறைத்திருவிழா எனவும் பெயர் முடிவு செய்து இரண்டு மாதமாக அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன, மதுரை நண்பர்கள் பல வழிகளில், வேலைகளை பிரித்து பார்த்துகொண்டனர், பேனர் , அழைப்பிதழ், மதுரை வரலாறு ஆங்கில நூல் தயாரிப்பு பணி, பதாகைகள் தயார் செய்வது, டிசைன் வெட்டி ஒட்டுவது , பலசரக்கு, காய்கறி வாங்குவது என நண்பர்கள் தேனீக்களை போல் சுறுசுறுப்பாக பணியாற்றினர்.
     மதுரை புத்தகதிருவிழாவில் ஸ்டால் போடப்பட்டு நோட்டீஸ் வினியோகம் நடந்தது, ஆனால் எதிலும் நான் பொறுப்பாக இல்லாமல் போனதால் , விழா நடைபெறும் முன் தினம் முழுமையாக பணியாற்ற வேண்டும் எனவும், இரவில் அவ்விடம் தங்கி ஆழமரத்தின் கீழ் அல்லது மலை மீது பேச்சிபள்ளத்தில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிதிரிவது என முந்தினம் மதியம் 12 மணிக்கு சமணர் மலை அடிவாரத்திற்கு வந்தேன் ,   ஆனால் நான் செல்லும்முன்பே பலசரக்கு, காய்கறிகள் வந்து இறக்கி அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைத்து சென்றுயிருந்தனர்.
    நான் சென்ற சில நிமிட இடைவெளியில் மதுமலரன், சுந்தர் வந்தனர், அடுத்து அடுத்து நண்பர்கள் ஹ்யூபர்ட், ராஜண்ணா, கந்தவேல், சதீஷ் வந்துவிட்டனர், மூன்றுமணிக்கு அ.முத்துகிருஷ்ணன் தோழமையில் ஓவியர் ரவி, உதயகுமார், பிரகாஷ், ரகு, வஹாப் ஷாஜகான், மணிகண்டன், சதீஸ் தமிழன், சித்து, மற்றும் வக்கீல் ராபர்ட் தன் துணைவியாருடன் ஒரு பெரும் பட்டாளம் வந்து இறங்கியவுடன் அந்த இடமே களைகட்டியது,
    மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் கைது, பதவி பறிக்கப்பட்டது என்ற செய்தியும் அதை தொடர்ந்து தமிழகத்தில் பேருந்துகள் ஓடுவது நிறுத்தப்பட்டது, கட்சிகாரர்கள் கலவரத்தில் ஈடுபடுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. எனக்கோ நாளை பாறைத்திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகமாக இருந்தது, ஆனால் முத்துகிருஷ்ணனோ விழா கண்டிப்பாக நடக்கும் கவலைபடாதே சகோதரா என நம்பிக்கை இழக்காமல் நம்பிக்கை ஊட்டினார்...
  





    

     விழா நடைபெறும் இடத்தை துப்புறவு தொழிலாளர்கள் சுத்தும் செய்து கொண்டிருந்தனர், சிறிது நேரத்தில் சமையல்காரகள், அதைதொடர்ந்து அரங்க அமைப்பாளர்கள் வந்து இறங்கி பணியை பார்க்க தொடங்கி விட்டனர்.
   நண்பர்கள் பதவி, வசதிகளை மறந்து களபணியாற்றினார்கள் ஒருவர் மினிலாரியில் விறகு வாங்கி வண்டி ஓட்டி வருகிறார், சிலர் தாமரை தடாகத்தில் இறங்கி மக்களால் வீசி எறியப்பட்ட பிளாஷ்டிக் பாட்டில் பேப்பர், என கழிவுகளை சேகரித்து இடத்தை சுத்தம் செய்கின்றனர். அங்கு நடைபெற்ற அசாதரணமான நிகழ்வுகளை பார்த்து கீழக்குயில் மக்கள் சிலர் கூடிவிட்டனர் என்ன ஏதேனும் சினிமா சூட்டிங்கா என் வினைவினார்கள் அவர்களுக்கு பாறைத்திருவிழா என்றதும் அப்படியா என்றனர்,
  சிறிது நேரத்தில் புத்தக பண்டல்கள் வந்து இறங்கின, விழாவில் புகைபட கண்காட்ச்சியை வைக்க ஓவியர் ரவி, ரகு படங்களை ஒட்டும் பணிகளை தொடர்ந்தனர். இப்படி இரவு 10 மணி ஓயாத பணி நண்பர்களுக்கு, அங்கேயே இரவு உணவு தயாரிக்கப்பட்டன.
    பாறைத்திருவிழாவில் கலந்து கொள்வதற்காகவே அலகாபாத்தில் இருந்து சுந்தரராசன் சார், சென்னையில் இருந்து முத்துகுமரன் அந்த இரவிலும் அங்கு வந்ததனர், கடந்த விருட்சத்திருவிழாவில் சுந்தரராசன் சார் தான் ஒருங்கினைப்பாளர்களுக்கு  வழிகாட்டியாக இருந்தார், இந்த முறை ஹ்யூபர்ட் சார் அந்த பொறுப்பை ஏற்றுகொண்டு களத்தில் இறங்கினார்.
    இரவு 11 மணிக்கு சில நண்பர்கள் காலை வருவதாக விடை பெற்று சென்றனர், நான் , ஹ்யூபர்ட்,  மதுமலரன், கந்தவேல், சதீஸ் மற்றும் சென்னை நண்பர்கள் மட்டும் அங்கு தங்கினோம்.  கடந்த ஆண்டை போல் நாகமலை விலக்கில் இருந்து சமணர்மலை வரை பாறைத்திருவிழாஅரங்கம்வரை  பதாகைகளை மின்கம்பங்களில் கட்ட சென்றோம், நாகமலையில் பதாகைகளை கட்டும் போது ஒரு போலீஸ்காரர் வந்து நீங்கள் யார் என்ன செய்றீங்க என சப்தம் போட்டார். அவருக்கு,  பாறைதிருவிழா பற்றி கூறி விழாவிற்கு காவல்துறை ஆணையரிடம் அனுமதி பெற்ற கடிதத்தை காட்ட சரிசரி நிலமை சரியில்லை எனவே விரைவாக அமைதியாய் கட்டி விட்டு செல்லுங்க என்றார், அங்கிருந்து சமணர்மலை அடிவாரம் வரை கட்டி வந்தபோது மணி 12.30 ஒரே அசதி ஆழமரத்தடியில் இருந்த சிமிண்ட் மேடையில் படுத்தோம் அசதியில் நான் படுத்தவுடன் தூங்கிவிட்டேன்.
   ஆனால் அதிகாலை 3.30 மணிக்கு மழை வந்து எழுப்பிவிட்டது. வேறு இடம் தேடி சென்றால் அங்கு ஏற்கனவே வேறு நபர்கள் இருந்தனர். அப்படியே தூக்க கலக்கத்துடன் மரத்தின் அடியில் ஒதுங்கினேன்.இரவில் மலையை பார்த்தால் மலை இருளில் ஒளிந்து கொண்டது, அடிவாரத்தில் உள்ள கருப்பனசாமி கோவிலில் மட்டும் விளக்கு ஒளியை சிந்த எங்கும் இருள் இருள் அமைதி ஆஹா அந்த பொழுது எவ்வளவு ஆனந்தமான தருணம்.
   காலை ஐந்து மணிக்கு [28.9.14] நான், மதுமலரன், தமிழினி வசந்தகுமார் மூவரும் கீழக்குயில்குடி ஊரின் எல்லையில் உள்ள  குளியல் தொட்டியில் குளித்திவிட்டு விழா இடம் வரும் போது விடிய ஆரம்பித்துவிட்டது. இரவு இருளில் மறைந்த மலை கண்ணுக்கு புலப்பட ஆரம்பித்தது. அதே நேரம் மழை வானில் இருந்து கொட்ட அடை மழையாக மாறியது வான் எங்கும் கருமேகங்கள் தான்
    அந்த மழையிலும்  சமையல் காரர்கள் சமையல் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர், காலை 6.30 மணி சிறு துளிகளாய் மழை பெய்துகொண்டே இருக்க விழாவிற்கு முதல் நபராக மழையில் நனைந்தவாரே தீபாநாகராணி அவர்கள் தன் கணவர், மகனுடன் வந்து இறங்கினார்கள், அடுத்து அடுத்து அருண், மற்றும் எபி தன் துணைவியாருடன் பைக்கில் வந்து இறங்க எங்களை போல் மழைக்கும் உற்சாகம் அடைந்து மழைபெய்ய ஆரம்பித்தது, என் தங்கை லதா தன் மகள் வித்தியாவுடன், உறவினர் துர்கா தன் மகள்,மற்றும் பெற்றோர்களுடன் வந்து இறங்கினார்கள், மழை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வண்னம் பசுமைநடை ஆர்வலர்கள் பேருந்து ஓடாதநிலையிலும் கார், பைக், ஆட்டோ என குடும்பம் சகிதமாக, நண்பர்கள் படை சூல மழையில் நனைந்துகொண்டே வந்தனர், எங்களுக்கு உற்சாகம் அளித்தது. ஹலோ வேல்ஸ் என அழைக்கும் சப்தம் கேட்டு திரும்பிபார்த்தால் நண்பர் எஸ்.அர்ஷியா வந்து இறங்கினார் ஆச்சரியமாகவும் மகிழ்வாகவும் இருந்தது.
       வாகனம் ஓடவில்லை, கலவரம் என ஒதுங்கிகொள்ள காரணம் தேடும் நண்பர்கள் மத்தியில் பாறைத்திருவிழாவில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என காலை 5 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு வந்த நண்பர்  முத்துகுமார் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்வு, இவரை பார்த்தாலே நமக்கு உற்சாகம் வந்துவிடும்.
      இப்படி முகம் அறிந்த ,அறியாத நண்பர்கள் வர வர பசுமைநடை நண்பர்களுக்கு ஆனந்தம், 9 மணிக்கு எல்லாம் மழையில் நனைந்த படி சிறப்பு அழைப்பாளர் தியோடர். பாஸ்கரன் தன் சகோதருடன் வந்து சேர்ந்தார்கள்.








  
  9 மணிக்குள் 300 பேர் சேர்ந்துவிட்டனர். அந்த மழையில் மலை நோக்கி, சமணர்மலை செட்டிபுடவு குகை நோக்கி, 40 வது பசுமைநடை புறப்பட்டது,செட்டிப்புடவில் மழையில் நனைந்து கொண்டே மலையின் வரலாற்றை அய்யா.சாந்தலிங்கம் கூறினார்கள்.
   மலையில் இருந்து கீழே இறங்கி வந்தவுடன் காலை உணவு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் வழங்கப்பட்டது. மழையில் நனைந்தபடி மலை அடிவாரத்தில் உள்ள தெப்பகுளத்தின் தாமரை மலர்களை ரசித்துகொண்டு சாப்பிட்டது பசுமைநடை ஆர்வலர்களுக்கு மட்டும் கிடைத்த பாக்கியம்.
    சரியாக 10.30 க்கு பாறைத்திருவிழா ஆரம்பம்மானது ஒரு பக்கம் வரலாற்று நிகழ்வும் மறுபக்கம் குழந்தைகளுக்கான விழா ஆரம்பித்தது, குழந்தைகள் விழா எனில் அது வெறும் விளையாட்டு அல்ல பன்முக தன்மை கொண்ட விளையாட்டு குழந்தைகளின் முகங்களில் தான் எவ்வளவு மகிழ்வு, 
     பாறைத்திருவிழாவை அ,முத்துகிருஷ்ணன் தொடங்கிவைத்தார், பசுமைநடையின் முதல் நடையில் இருந்து பாறைத்திருவிழா வரை கடந்துவந்த வரலாற்றை எளிமையாக எடுத்து கூறினார். நான் 2 வது பசுமைநடையில் இருந்து தொடர்ந்து சுமார் 34 நடைகளில் பங்கேற்றுள்ளேன். என எண்ணும்போது மகிழ்வாகதான் இருந்தது. மதுரை வரலாற்றின் ஆங்கில நூல் அறிஞர்.கிறிஸ்டோபர் ஜெயகரன் வெளியிட்டார்கள், தியோடர்.பாஸ்கரன் தொல்லியல் சார்ந்த உரைவீச்சு பார்வையாளர்களை மயக்கியது என்றால் சாந்தலிங்கம் அய்யா பசுமைநடை குடும்பத்தை பற்றியும் அதனால் அவர் அடைந்த மகிழ்வை கேட்கும் போது எங்கள் அகம் மகிழ்ந்தது.
   மதியம் 1 மணிக்கு பாறைத்திருவிழா முடிந்தது, மதிய உணவு வழங்கப்பட்டது பாறைதிருவிழாவில் கலந்து கொண்டவர்களே மற்றவர்களுக்கு உணவு பறிமாற உணவு மேலும் சுவையானது.
   மதிய உணவுக்கு பின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சுமார் மாலை 3 மணிவரை விழாவில் கலந்துகொண்டவர்கள் கிளம்ப மனம் இல்லாமல் அங்கேயே இருந்தனர். விழாமுடிவில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கையை பார்த்தபோது சுமார் 500 பேர். தமிழகத்தின் அசாதாரண சூழ்நிலையில் இந்த மக்கள் கூட்டம் பசுமைநடையை அடுத்த நகர்வை நோக்கி உற்சாகமாக நகர்த்தி செல்லும்.
   விருதுநகர் போக்குவரத்து நண்பர்கள் திரு,பாலசுப்பிரமணியம், ஜான்கென்னடி மகள், மகனுடன், மாரிக்கண்னு மகனுடன், அன்பழகன், கண்ணன் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
   விழாவை பற்றி அடுத்தநாளே பத்திரிக்கை முழுவதும் படங்களுடன் செய்தி வந்தது, கலந்து கொள்ளாதவர்கள் வருந்தினர், கலந்துகொண்டவர்களுக்கோ அவர்கள் நினைவில் செதுக்கிய சிற்பங்களாக அழியாத நினைவுகளாக பதிந்துபோனது.
   சொன்ன நிகழ்வுகள் குறைவு
   சொல்லாத நிகழ்வுகள் அதிகம்
     
 பாறைத்திருவிழாவின் நண்பர்கள் பதிவு பெயர் மீது கிளிக் செய்யவும்
  சித்திரைவீதிக்காரன்
   ராஜண்ணா
    ஷாஜஹான்
    பாடுவாசி

புதன், ஜூலை 02, 2014

பசுமைநடை பேரையூர்

   
மொட்டைமலை

    இந்த முறை பசுமைநடை பேரையூர் என செய்திவந்தவுடன் வழக்கபோல் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பசுமைநடையில் கலந்து கொள்ள கேட்டு கொண்ட போது தங்கையின் மகள் வித்யா கலந்துகொள்வதாக கூறி முன் தினம் மாலையே விருதுநகர் உள்ள என் வீட்டுக்கு வந்துவிட்டாள், நண்பர்கள் ஐந்து பேர் வருவதாக உறுதிதந்தனர்.
  .45. 29.6.2014 ஞாயிற்றுகிழமை காலை 5.30 மணிக்கு எழுந்து நான், எனது மகள், மருமகள் வித்யா பேருந்து நிலையம் வரும் முன்பே நண்பர்கள் முருகன், கணேசன், அன்பழகன், ரவிச்சந்திரன் காத்து இருந்தனர், நாங்கள் இந்தமுறை மதுரை வராமல் டி.கல்லுபட்டி வந்துவிடுகிறோம் என முத்துகிருஷ்ணனுக்கு தகவல் தந்ததால் விருதுநகரில் இருந்து டி.கல்லுபட்டியை அடைந்தபோது காலை மணி 6.45
    மதுரையில் பசுமைநடை டீம் கிளம்பி விட்டதா என போன் போட்டு கேட்டபோது அபோதுதான் கிளம்பி வந்துகொண்டு இருக்கிறோம் என்றனர். இவ்வளவு தாமதமாகும் என தெரிந்து இருந்தால் நாங்களும் சற்றே தாமதமாக கிளம்பி இருக்கலாம்,
    டி.கல்லுபட்டி பேருந்து நிலையம் ஓரளவு சுத்தமாகவே காணப்பட்டது, பேருந்து நிலையம் உள் பக்கம் கடைகள் அதிகமாக கட்டி விடப்பட்டுள்ளதால் கண்ட இடத்தில் அசுத்தம் செய்யாமல் இருப்பதாக எனக்கு பட்டது. அம்மா மருந்தகம் என்ற கடையும் பச்சைகலர் பெயிண்ட் அடித்து காணப்பட்டது, பேருந்து நிலையத்தின் இரு வழியிலும் பஸ் உள்ளே, வெளியே வந்து சென்றது இது விபத்து ஏற்பட வழிவகுக்கும் என எண்ணியபடி நேரத்தை கடத்தினோம்.
   காலை 7.45 மணிக்கு ”பசுமைநடை” பேனருடன் குகன் பள்ளி பேருந்து வர அதில் 7 பேரும் ஏறிக்கொண்டோம், பேருந்தில் நண்பர் எஸ்.அர்ஷியா வாங்க சார் என அன்பாக வரவேற்றார், நண்பரும் கலந்து கொண்டது மகிழ்வாக இருந்தது. புதிய முகங்கள் அதிகமாக இருந்தனர், 8 மணிக்கு பேரையூர் “மொட்டை மலை” அடிவாரத்தை அடைந்தோம். கீழே முருகன் கோவில் அதை ஒட்டியே மலை ஏறும் பாதை, செங்குத்தான மலை பாறையில் சிரமம்மில்லாமல் ஏற சிறு சிறு படிக்களாக செதுக்கி கைபிடித்து ஏற கம்பியும் அமைத்து இருந்தனர், படிகட்டுகள் சமீபத்தில் தான் அமைத்துள்ளனராம். படிகட்டு அமைத்து ஒவ்வொரு படிக்கட்டிலும் படிஅமைக்க உதவியவர் பெயர், ஊர் என்ற விபரம் செதுக்கியுள்ளனர். செக்குத்தான மலை என்பதால் சற்றே ஏற சிரமமாகத்தான் இருந்தது, இந்தமுறை அரசு தேர்வு, முகூர்த்த நாள் என்பதால் பசுமைநடை ஆர்வலர்கள் குறைவாக இருந்தனர். மலை ஏற ஆரம்பித்த அந்த நேரத்திலேயே வெயில் சுள் என அடிக்க ஆரம்பித்தாலும் எங்கள் பசுமைநடை ஆர்வலர்களின் ஆர்வத்தின் முன் வெயில் தாக்கம் எடுபடவில்லை, உற்சாகமாகவே ஏறினோம்  கந்தவேலும், மதுமலரனும் ஆர்வலர்களை உற்சாக படுத்தி ஏற்றிகொண்டே இருந்தனர்.
   
       அரைமணி நேர மலை ஏற்றத்திற்கு பின் காலை 8.30 க்கு மலை உச்சியை அடைந்தோம். மலை உச்சியில் இருந்து சுற்றிலும் கீழே பார்த்தால் பசுமை, பசுமை தான் ஆக உலகம் எவ்வளவு அழகானது, அடிவாரத்தில் நாங்கள் வந்த பேருந்து பொம்மைபோல் காணப்பட்டது, ரோட்டில் செல்லும் வாகனத்தைபார்த்தபோது பொம்மைகார்கள் ஊர்ந்து செல்லுவதைபோல் காண்பதற்கே மகிழ்வாக இருந்தது. மலை உச்சியில் ஒரு பக்கம் சிவன் கோவில், அதற்கு சற்றே தள்ளி முஸ்லீக் சமாதி கட்டி இருப்பதை பார்க்கும் போது மத ஒற்றுமைக்கு உதாரணமாக இருந்தது, மலையின் உச்சி ஒரு சிறு மைதானம் போல் பரந்து காணப்பட்டது, அதில் இயற்கையாகவே மூன்று தடாகம் அமைந்து தண்ணீர் இருந்தது. அல்லி மலர் மலர்ந்து பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது.

    அதில் ஒரு தடாகம் சற்றே பெரிதாக இருந்ததில் படிகள் அமைத்து, மழைகாலங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படும்போது குளிக்க வசதி ஏற்படுத்தி இருந்தனர், மலையில் தான் முருகன் கோவில் காணப்படும், ஆனால் மதுரை திருப்பரங்குன்றம் கோவிலை போலவே இங்கும் மலை அடிவாரத்தில் முருகன் கோவிலும், ,மலை உச்சியில் சிவன் கோவில், முஸ்லீம் தர்ஹா வைபோல் சமாதியும் காணப்படுகிறது, இது அதிசயமாக இருந்தது, மதுரை திருப்பரங்குன்றம் கோவில் செல்லமுடியாதவர்கள் அடிவாரத்தில் உள்ள கோவில்லில் காணிக்கை ,நேர்த்திகடன் செலுத்திகொள்வார்களாம்.

     மலைமீது உள்ள சிவன் கோவில் பின்னால் சிறிது நிழல் காணப்பட ஆரவலர்கள் அங்கு உட்கார மலையின் சிறப்பை முத்துகிருஷ்ணன் விளக்கி கூறினார், சதுரகரிமலையும் அங்கு இருந்து பார்க்கமுடிந்தது. வெயில் தாக்கம் அதிகம் இருந்ததால் மலையில் இருந்து கீழே இறங்கினோம். அடிவாரத்தில் வெயிலே தெரியாத அளவுக்கு மரங்கள் நிறைந்த சோலைபோல் கோவில் முன்புறம் அமைந்து இருந்தது, அணைவரும் அங்கு அமர்ந்தஉடன் காலை உணவு பசுமைநடை சார்பாக வழங்கப்பட்டது. பசுமைநடை அமைப்பாளர்களில் ஒருவர் ரகுநாத் அவரது கையால் எலும்பிச்சை பழம் பிழிந்து அன்பை ஊட்டி சர்பத் தயாரித்து தந்ததால் சர்பத் மிக ருசியாக இருந்தது. 

   அதன் பின் வீடு திரும்பினோம். வழக்கம்போல் மறக்கமுடியாத அனுபவத்தை இந்த பசுமைநடையும் தந்தது.
 [  பேரையூர்
 மதுரை மாவட்டத்தில் ஒரு வட்டத்தின் தலைநகரமாக பேரையூர் உள்ளது.
இது நாயக்கர் , மற்றும் ஜமீன்தாரகளால் ஆளப்பட்ட ஊர். இவ்வூரைச் சுற்றிலும் பெருங்காலத்து தாழிகள் கிடைப்பது இவ்வூரின் தொன்மையை உறுதிபடுத்தும், இவ்வூரின் அருகில் தான் மொட்டைமலை காணப்படுகிறது.
இதன் உச்சியில் சிவன் கோவில் உள்ளது, அதன் அருகில் திரந்த வெளிபாறையில் ஒரு பெரிய கல்வெட்டும் உள்ளது, சிவன் கோவில் மல்லிகார்ச்சுனர் கோயில் என அழைக்கப்படுகிறது. இந்த ஊர் பாண்டியர் ஆட்சி காலத்தில் கடுங்கோ மங்கலம் என அழைக்கப்பட்டதாக வரலாறு உண்டு.
மலையடிவாரத்தில் மேல்ப்பரங்கிரி சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது, ஆலம்பட்டி நீர்நிலையை கடந்து திருப்பரங்குன்றம் செல்ல முடியாத நிலை ஏற்பட்ட போது முருகன் வேல் வடிவில் காட்சியளித்த இடம் என ஐதீகம் உண்டு. ]