ஞாயிறு, நவம்பர் 10, 2013

மஞ்சள் காமாலைநோய்க்கு மருந்து





மஞ்சள்காமாலை நோய்க்கு எந்த மருந்துவம் சிறந்தது 
நாட்டு மருத்துவம் என சொல்லப்படும் பரம்பரை வைத்தியமே சிறந்தது

         என் மகளுக்கு மஞ்சகாமாலை வந்து அலோபதி வைத்தியம் பார்த்தும் குணமாகாத நிலையில் ’பாபநாசம்’  சென்று நாட்டுமருந்து தந்த பின்னரே நோய் குணமானது,
        என் அனுபவம் மற்றவர்களுக்கு பயன்படவேண்டும் என்ற நோக்கில் எழுதியுள்ளேன்.
    என் மளுக்கு இரண்டு தினங்களாக காய்ச்சல் குறையாததால் வீட்டுக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கூட்டிசென்றேன், அவர்கள் இரத்தபரிசோதனை செய்து பார்த்துவிட்டு மஞ்சள்காமாலை நோய் மற்றும் வைரஸ் தொற்று உள்ளது, என கூறி ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்த்து வைத்தியம் பார்க்கப்பட்டது,
       21.9.13 அன்று சேர்த்து தொடர்ந்து டிரிப் ஏற்றினர், டிரிப் ஏற்றுவதற்க்கு முன் வாந்தி இல்லாமல் இருந்தது  ஏற்ற ஆரம்பித்தபின்  ஒறு மடக்கு தண்ணீர் குடித்தால் ஒரு டம்பளர் அளவு வாந்தி எடுத்தால், அடுத்த இரண்டு தினம் வாந்தி நிற்கவே இல்லை, மதுரையில் இருந்து திங்கள் கிழமை அந்த மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் வருவார் அவர் வந்து பார்த்தபின் மருந்து மாற்றி தந்தனர் அதன் பின் வாந்தி நின்றது.

      21.9.13 அன்று Billirubin   அளவு .........1.8 mg
       22.9.13  அன்று Billirubin   அளவு ........2.8 mg
       24.9.13   அன்று Billirubin   அளவு .......2.6 mg
       26.9.13   அன்று Billirubin   அளவு ........7.7 mg

        1.8  இருக்கும் போது ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை எடுத்துகொண்டு இருக்கும் போதே மஞ்சள்காமாலை அதிகமாகிகொண்டு உள்ளது என் மருத்துவரிடம் கேட்டபோது அளவு கூடிதான் இறங்கும் என கூறிவிட்டனர்.

     26.9.13 அன்று ஸ்கேன் எடுக்க கூறினார்கள், அதற்குள் உறவினர்கள் வேறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிசெல்வோம் என்றதால், சாத்தூரில் ஸ்கேன் வச்திஉள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தோம், அங்கு ஸ்கேன் பார்த்து பித்தபை வீங்கியுள்ளதால்  Billirubin   அளவு .கூடியுள்ளது என கூறி மீண்டும் இரத்தம் எடுத்து முழுமையாக ஆய்வு செய்தனர் ,27.9.13 அன்று Billirubin   அளவு .7.6
     மீண்டும் டிரிப் ஏற்றினர் மருந்து ஊசிமூலம் ஏற்றப்பட்டது, 5 தினம் கழித்து 30.9.13 அன்று டிச்சார்ச் செய்துவிட்டு மூன்றுதினம் ஊசி போடவேண்டும் என கூறியதால்,

        ஏற்கனவே சிகிச்சை எடுத்த ஆஸ்பத்திரியில் சென்று ஊசி போட்டோம்,
        2.10.13 அன்று 5 நாளும்Billirubin   அளவு .பார்க்கவில்லையா என சபதம் போட்டுவிட்டு இரத்தபரிசோதனை  பார்த்தனர் அன்று Billirubin   அளவு .11.7 mg என வந்தவுடன் மருத்துவர் மதுரை சென்று ஸ்பெசலிஸ்ட்டிடம் காண்பிக்க கூறினார்கள்.
       
      வீடுக்கு பக்கத்தில் உள்ளவர்கள் மஞ்சல்காமாலை எனில் நாட்டு மருந்துதான் சிறந்தது எனவே பாபநாசம் கூட்டி செல்லுங்கள் எனறனர், பலரும் இப்படி கூற 3.10.1013. அன்று பாபநாசம் சென்றோம் , பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி அருகில் ஒரு வீட்டில் மஞ்சள்காமாலை நோய்க்கு மட்டும் மருந்து தருகின்றனர், நாங்கள் சென்ற சமயம் 20 பேர்  வந்து காத்துயிருந்தனர்,
   
         ஏற்கனவே பாபநாசம் அருகில் காரையாலில் ஒரு பாட்டி மருந்து தர உடல் நலம் சரியில்லாததால் பாபநாசம் வந்துவிட்டனர், பாட்டி இறந்துபோனதால் பேத்தி தற்போது மருந்து தந்தனர், நாடி பார்த்து அதிகமாக தான் உள்ளது, என்றனர், அளவு பார்த்தீர்களா என கேட்க ரிப்போட்டை காண்பித்தோம்,
     
        ஒரு வேளை  மருந்து வாயில் ஊற்றிவிட்டு நான்கு வேளை மருந்து கொடுத்து அனுப்புகின்றனர், மூன்று நாள் உப்பில்லாத பத்திய சாப்பாடு அதன் பின் 21 நாட்கள் எண்னை இல்லாமல், சாப்பாடு என அவர்கள் கூறியபடி சாபிட்டு வர மஞ்சளாக இருந்த கண் சிறிதுசிறிதாக நிறம் மாறி சாதாரணமாக மாறியது..
 
        21 நாள் கழித்து ஆய்வு செய்தபோது 24.10.13அன்று Billirubin   அளவு . 1.2 என  வந்தது.   40 தினம் எண்னை சேர்க்காமல் சாப்பிட அதன் பின் எப்போதும் சாப்பிடுவதைபோல் சாப்பிடலாம்.

         பாபநாசம் சென்றபோது பலரும் ஆஸ்பத்திரியில் காண்பித்தும் குணம் கிடைக்காமல் அங்கு வந்து மருந்து வாங்கி சாப்பிடுகின்றனர்.

        எது சிறந்த மருத்துவம் என கூறவரவில்லை நாட்டுமருந்தில் குணமானதை பதிவு செய்திள்ளேன்..
பாபநாசம் மருத்தவமனை நோட்டீஸ்



வியாழன், அக்டோபர் 24, 2013

பசுமைநடை27, புளியங்குளம் பஞ்சபாண்டவர்மலை





 27 வது பசுமைநடை 20.10.2013 ஞாயிற்றுகிழமை காலை 6 மணிக்கு கொங்கர் புளியங்குளம் பஞ்சபாண்டவர்மலை என ஒரு வாரத்திற்கு முன்னரே குறுஞ்செய்தி வந்தடைந்தது.
 
          20ம் தேதி காலை 5 மணிக்கு விருதுநகர் சூலக்கரையில் இருந்து கிளம்பினேன், முன் தினம் இரவு நல்ல மழை எனவே காலையில் குளிராக இருந்ததால்  காதை மட்டும் மறைக்கும் ஸ்வெட்டர் மாட்டிக்கொண்டு பைக்கில் புறப்புட்டேன், விருதுநகர் பைபாஸ்ரோட்டில் உடன் வருவதாக சொன்ன நண்பர் முருகனை பைக்கில் ஏற்றிகொண்டு மிதமான வேகதில் மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்தேன், கள்ளிக்குடி நெருங்கும் சமயம் வானில் வெளிச்சம் ஏறிக்கொண்டிருந்தது,
   
         திருமங்கலம் வந்தவுடன் செக்காணூரணி வழியாக செல்வோம் என முடிவு செய்து அந்த வழியாக சென்றோம் எதிர்புறம் மிக அதிகமான லாரிகள் வந்து கொண்டிருந்தது எனவே கவணத்துடன் பைக் ஓட்டவேண்டி இருந்தது, 15 கி.மீ செக்காணூரணி வந்தது, மதுரை சாலையில் திரும்பி 3 கி.மீ புளியங்குளம் வந்தது, நாங்கள் சென்ற சமயம் மணி 6.25 இன்னும் ஆர்வலர்கள் வராததால் பல்கலைகழகம் சென்றோம், அங்கு அறிமுகம் ஆன நண்பர்கள் சிலரும், புதியவர்கள் பலரும் வந்து காத்திருந்தனர்,

        இந்த முறை ஆர்வலர்களுக்காக அதிகம் நேரம் காத்திருக்காமல் ஏற்கனவே வந்து இருந்த ஆர்வலர்களுடன் இருசக்கர வாகனம், கார் என புறப்பட்டோம், 3 கி.மீ தேனிசாலை வழியாக சென்றால் இடது பக்கம் பஞ்சபாண்டவர் மலை , சாலைக்கு மிக அருகிலேயே மலை அமைந்துள்ளது.




      மலைக்கு முன்பாக ஒரு பெரியாஅழமரம் அதை ஒட்டி புதிதாக அமைக்கப்பட்ட கல்மண்டபம் அழகாக காட்சியளிக்கிறது. அங்கு இருந்து மேற்கு பக்கம் மலை பாதை ஆரம்பித்துவிடுகிறது,  சிறுசிறு பாறை வழியாக பாதை சற்றே சிரமமாக தான் உள்ளது,  சிறிது தூரம் நடந்தபின்  சமணர்பாறை உள்ள அடிவாரத்திற்கு அருகில் சமணர்வரலாற்றை சொல்லும் கல்வெட்டுகள் சமூக விரோதிகளால் ஒடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது,

     அங்கு இருந்து பாறைக்கு எளிதாக ஏற தொல்லியல் துறையினரால் இரும்பு ஏணி பாதை அமைக்கப்பட்டுள்ளது, அதில் ஏறிதான் சமணர் படுக்கைகளுக்கு போகமுடியும், அகலம் குறைந்த ஆனால் நீளமான குகை சுமார் 60 படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளது, குகையில் சமூகவிரோதிகள் குடித்துவிட்டு போடுவிட்டு சென்ற மதுபாட்டில்கள் , சீட்டுக்கட்டு கார்டுகள் சிதறி காணப்பட்டது,
        சுமார் 80 பேர் அங்கு அமர தொல்லியியல் ஆய்வாளர் ஐயா.திரு. சாந்தலிங்கம் அவர்கள் அந்த இடம் பற்றிய வரலாறு அங்கு செதுக்கிய பிராமிய எழுத்துக்களில் எழுதப்பட்ட விபரங்களை எடுத்துசொன்னார்கள்,

        சேர நாட்டுக்கும், பாண்டியநாட்டுக்கும் வணிகபாதையாக இது இருந்துள்ளது, வணிகபாதையில் சமணபடுக்கைகள் கொண்ட மலைகள் உள்ளது, எனவே அன்றைய வணிகர்கள் சமணத்தை சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.

        சாந்தலிங்கம் ஐயா பேசிக்கொண்டு இருக்கும் போது ஆர்வலர்கள் வந்துகொண்டே இருந்தனர் முடிவில் 150 க்கும் மேல் வந்துள்ளதாக கூறினர். அதன் பின் முத்துகிருஷ்ணன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று இளைஞர்கள் குகையில் காணப்பட்ட குப்பைகளை சுத்தம் செய்தனர், சிறுது நேரத்தில் அந்த குகை அழகாக மாறியது, வருங்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது எனபதை நேரில் பார்க்கமுடிந்தது.




    அங்கிருந்து மேற்கு பாதை வழியாக மலை உச்சிக்கு சென்றோம் சற்றே கடினமான பாதைதான், செல்லும் வழியில் மலை ஊற்று நிறைந்து பாறையில் தண்ணீர் வடிய குடித்துபார்த்தோம் புளிப்பு சுவையுடன் இருந்தது. அதன் அருகில் உயரமான பாறையில் தீர்த்தங்கர் சிலை செதுக்கியுள்ளனர், அந்த சிலை கிமு 910 ல் செதுக்கியுள்ளதாக தகவல் கூறினர்,

    மலை உச்சியில் ஒரு கோவில் உள்ளது அது பெருமாள் கோவில்[ பெருமால் தம்தேவியர் இருவரோடு உள்ள சிலை உள்ளதால் அதை பெருமாள் கோவிலாக மக்கள் வழிபடுவருகின்றனர்]  முந்தினம் மழை பெய்து மலை குளிர்ந்து காணப்பட்டதால் மலை உச்சியில் வெகுநேரம் இருந்தோம், அங்கு இருந்து கீழே பார்த்தால் பச்சை கம்பளம் விரித்த போர்வையாக இயற்கை காட்சியளித்தது, பார்த்துகொண்டே இருக்கலாம், பலர் அங்கு உட்கார்ந்துவிட்டனர்,  ஒரு பக்கம் பூந்தோட்டத்தில் பூ பறித்துகொண்டு இருப்பதை பார்க்கமுடிந்தது, இன்னொரு பக்கம் மலை உடைத்து ஏற்படுத்திய பள்ளத்தில் மழையால் நிறைந்து குளமாக மாறிய செயற்கை குளத்தில் பக்கத்து ஊர்காரர்கள் குளித்துகொண்டு இருந்தனர். மலை  உச்சியில் இருந்து மனிதர்களை பார்க்கும் போது பொம்மையாக தெரிந்தனர்.
 






 

       மலையின் வடக்கு பக்கம் நாகமலைமுழுமையாக அருகில் பார்க்கமுடிந்தது, வெயில் சுத்தமாக இல்லை மழை மேகங்கள் வானில் சூழ்ந்து அந்த இடமே ஒரு சொர்க்கலோகமாக காட்சியளித்தது. ஆர்வலர்களுக்கு மலையைவிட்டு கீழே இறங்கவே மனம் இல்லை, மணி 9 ஆனதால் பசி எடுக்க மலையைவிட்டு இறங்கினோம்,

     இந்த முறை புகழ்பெற்ற புகைபட கலைஞர்கள் அதிகமாகவே வந்து இருந்தனர், ஸ்ரீராம்ஜெனக், சுந்தரராசன், செல்வம்ராமசாமி, ராஜன்னா, அமுதன், அருண், ரகுநாத் என பலர் கலந்துகொண்டு விலை உயர்ந்த கேமராவில் அந்த இடத்தின் அழகை கொள்ளையடித்து கொண்டு இருக்க, நானும், பாலா அவர்களும் சாதாரண  டிஜிட்டல் கேமராவில் அங்குள்ள அழகை திருடிக்கொண்டு இருந்தோம்,

    மலையில் இருந்து இறங்கி கல்மண்டபத்தில் அமர வந்திருந்த அணைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது, சிறிது நேரம் அங்கிருந்து விட்டு , பசுமைநடையின் பசுமையான நினைவுகளுடன் வீடு திரும்மினோம்.


 மீண்டும் சந்திப்போம்.......

   பசுமைநடை27  நண்பரின் அழகான பதிவை இங்கு பார்க்கவும்..  ராஜன்னா


படம் உதவி : சுந்தரராசன்,குணாஅமுதன்,செல்வம்ராமசாமி, பிரசாத்














செவ்வாய், செப்டம்பர் 03, 2013

விருட்சத்திருவிழா மதுரை [ 25 வது பசுமைநடை விழா] பகுதி2




           25 வது பசுமைநடையின் கொண்டாட்டம் அதன் பெயர் ”விருட்சத்திருவிழா”  செங்கதிரவன் இன்னும் வானில் எழும் முன் பசுமைநடை ஒருங்கினைப்பாளர்கள் சமணர்மலை அடிவாரத்தில் கூடிவிட்டனர்.  முன் தினம் இரவு அரங்கவேலைகள் முடிந்து இருந்தாலும், பசுமைநடை பேனரை விழா மேடை முன் கட்டும் பணிகளும், விழாவுக்கு வரும் வாகனங்கள்  நிறுத்தம் இடம் பற்றி அறிவிப்பு அட்டைகளை கட்டி கொண்டு இருக்கும் போதே பசுமைநடை ஆர்வலர்கள் வர ஆரம்பித்துவிட்டனர். காலை 7.30 மணிக்குள்  300 பேருக்கும் மேல் கூடிவிட்டனர்,

       காலை 9 மணிக்குள் சமணர்மலை அடிவாரம் நோக்கி கார்கள், இருசக்கரவாகனங்கள், ஆட்டோ என மக்கள் வந்து இறங்கிகொண்டே இருந்தனர். கார்களை, பைக்குகளை பார்க்கிங் பகுதியில் அவர்களாகவே நிறுத்தியது மகிழ்ச்சியை அளித்தது.


       காலை 7.30 மணிக்கு வருகை தந்தவர்களின் முகவரி, தொலைபேசி விபரங்களை பாரங்கள் தந்து நிரப்பும்பணி தொடங்கிவிட்டது, தீபா நாகராணி அவர்கள் தலைமையில் கல்லூரிமாணவிகள் குழு அந்த பணியை சிறப்பாக செய்தனர், பாரம் பூர்த்திசெய்தவர்களுக்கு அவர் அவர் பெயர் எழுதி விருட்சத்திருவிழா பேட்ஜ் வழங்கப்பட்டது, குழந்தைகளுக்கு என தனிபதிவு அவர்களுக்கும் விழா பேட்ஜ் என கலந்துகொண்டவர்கள் எல்லோர் நெஞ்சிலும் விருட்சத்திருவிழா பேட்ஜ்.

      காலை 9 மணி க்குள் சமணர்மலை அடிவாரம் முழுவதும் மனித தலைகள் தான், ஒவ்வொருவர் முகத்திலும் எவ்வளவு மகிழ்ச்சி, தன் வீட்டு விசேஷத்திற்கு வந்த உணர்வை அவர்கள் முகங்களில் காணமுடிந்தது, 20 0 ஆண்டுகளாக வளர்ந்து இருக்கும் ஆழமர விழுதுகளில் 24 பசுமைநடையின் போட்டோ   பதிவுகள்  [2அடி*1 அடி போட்டோ ] அட்டைகளில் ஒட்டி தொங்கவிடப்பட்டு இருந்தன, ஏற்கனவே பசுமைநடையில் கலந்து கொண்டவர்கள் தங்கள் முகம் தெரிகிறதா என பார்ப்பதும், வராதவர்கள் ஆர்வமாக  பார்ப்பதும் தொடர்ந்தது.

    முதல் பசுமைநடை பயணம் 18.9.2010 ல் தொடங்கி இன்றைய 25 வது பயணம் சுமார் 350 பேர் வுடன் காலை 9 மணிக்கு  செட்டிபுடவு நோக்கி  கவிஞர். P.G.சரவணன் அவர்கள் வழிநடத்தி சென்றார்,         ’ செட்டிபுடவு’ என அழைக்கப்படும் சமணர் குகை மலையின் தெற்கு பகுதியில் உள்ளது, சமணர் மலையை காணவருபவர்கள் மலையின் மேல் ஏறி அங்குள்ள’ பேச்சிபள்ளம் ‘ என்ற சமணசிற்பங்களை மட்டும் கண்டு செல்வர், செட்டிபுடவு குகையை பார்க்கமாட்டார்கள் பலருக்கும் தெரியாது.

      செட்டிபடவு செல்லும் பாதையின் இரண்டு பக்கமும் தாமரை குளங்கள் உண்டு கடந்தமுறை பசுமைநடை வந்தபோது குளத்தில் தண்ணீர் நிரம்பி தாமரை பூ மலர்ந்து காணகத்தின் ஊடே சென்ற உணர்வைதந்தது, இந்த முறை மழை பெய்யாததால் குளம் வற்றியே காணப்பட்டது.
    செட்டிபுடவு குகை செல்லும் பகுதியில் தொல்லியல்துறையினர் கற்களால் படி அமைத்து உள்ளதால் சிரமம் இல்லாமல் ஏறமுடிந்தது, குகை வாசலில் உள்ள மிகபெரிய பாறையில் ”மகாவீரர் ” உருவம் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது, அவ்வளவு உயரத்தில் இவ்வளவு அழகான சிலையா என வந்தவர்கள் வியந்துபோயினர்,  குகை வாயிலில் அமர்வதற்கு இடம் உள்ளது அந்த பகுதியில் பார்வையாளர்கள் அமர அந்த இடங்களின் சிறப்புகளை வரலாற்று பேராசிரியர், திரு.கண்ணன் அவர்களும், பேராசிரியர்.திரு. சாந்தலிங்கம் ஐயா அவர்களும் விளக்கினார்கள். தமிழகத்தில் காணப்படும் மகாவீரர் சிலைகளில்  இங்குள்ள   “மகாவீரர்” சிலையே மிகபெரியது என அறிந்துகொள்ளமுடிந்தது.


மிகபெரிய மகாவீரர் சிலை



    வந்தவர்கள் செட்டிபுடவு குகையை கண்டபின் ஆழமரவிழா அரங்கம் நோக்கி திரும்பினோம். அங்கு காலை உணவு வழங்கப்பட்டது,  சர்க்கரை பொங்கல் ,வெண்பொங்கல், சட்னி,சாம்பார் என ருசியான உணவு வழங்கினர்.

    காலை உணவுக்கு பின், 10.00 மணிக்கு விருட்சத்திருவிழா ஆரம்பம் ஆனது, பச்சை கம்பளவிரிப்புகளில் பார்வையாளர்கள் அமர, இலக்கியவாதிகளால் தொ.ப என செல்லமாக அழைக்கப்படும், பண்பாட்டு.ஆய்வாளர்,திரு,தொ.பரமசிவம் அவர்கள்  முதல் மனிதராக வந்து அமர்ந்தார். வேட்டி சட்டையில் பார்க்க கிராமத்தான் போலவே காட்சியளிப்பார், முதன் முறையாக பார்ப்பவர்கள் அவர் பேராசிரியர் என்பதை ஒத்துகொள்ளமாட்டார்கள், அவ்வளவு எளிமை. ஆனால் அவரது பேச்சை கேட்டால் அவர்மீது காதல் கொள்வார்கள்,
          சித்திரவீதிகாரன் சுந்தர் வலைபதிவில் அழகர்மலை பற்றிய கட்டுரை  படித்தபின் தான் தொ.பா வை பற்றியும் அவர்  அவரது நூலை படிக்கவேண்டும் என ஆவல் கொண்டேன்.
     பசுமைநடையின் வெளியீடான  “ மதுர வரலாறு” புத்தகத்தை தொ.பரமசிவம் ஐயா வெளியிட முதல் பிரிதியை பெறபோவது யார்  என்பதை  ஆவலுடன் பார்வையாளர்கள் காத்திருக்க  அ.முத்துகிருஷ்ணன் அவர்கள்    முதல் பிரிதியை சமணர்மலை அடிவாரமே தன்வாழ்க்கை சக்கரத்தை நகர்த்திசெல்லும் வாழ்வாதாரமாக கொண்டு 15 ஆண்டுகளாக அந்த பகுதியில் பருத்திபால் விற்பனை செய்து வரும் ஜெயமணி அம்மாள் பெற்றுகொள்வதே சிறப்பாக இருக்கும் என அவர்களை அழைக்க , பார்வையாளர்களின் கைஓசை அடங்க வெகு நேரமானது....



மாநகர காவல் ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள்

           நூலை வெளியீட்டு பேசிய தொ.பா ...கல்வி, உணவு, வீடு, மருந்து இவை நான்கும் சமணர் கொள்கை, உண்ணாவிரதம் என்ற நல்விரதத்தை கண்டு பிடித்தவர்கள் சமணர்களே இன்று கல்விகூடங்கள் பள்ளி கூடங்கள் என அழைப்பதற்கும் சமண பள்ளிகலே காரணம் என பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்கள், அவர்பேசும் போது அரங்கமே அமைதியாக இருந்தது, சித்திரவீதிக்காரன் சுந்தர் அவரையும், அவரதுபேச்சை மட்டுமே கேட்கும் ஓர் தியான நிலையில் அமர்ந்து இருப்பதை காணமுடிந்தது.

         அடுத்து மதுரை மாநகர காவல் ஆணையாளர். திரு.V. பாலகிருஷ்ணன் அவர்கள் பேசினார்கள், அவரது உரை அனைவரையும் கவர்ந்தது. காக்கி சட்டைக்குள் ஓர் இலக்கியவாதியை காணமுடிந்தது. விருட்சத்திருவிழா அழைப்பிதழுக்கு ஓர் புது அர்த்தத்தை தந்தார், காக்கி நிறம் பொதுவாக காவலை குறிக்கும் , பச்சை நிறம் இயற்கையை குறிக்கும் எனவே இந்த பசுமைநடை இயற்கையை காக்கும் மாபெரும் இயக்கமாக மாறவேண்டும்  என வாழ்த்தினார்கள், நேரம்கிடைத்தால் பசுமைநடையில் கலந்துகொள்வதாக கூறினார்கள்.

        கீழக்குயில்குடி ஊராட்சி மன்ற தலைவர் அய்யா.தங்கராசு அவர்களின் வெள்ளந்திரியான பேச்சு கூடியிருந்தவர்களை கவர்ந்தது, தெரியாததை தெரியாது என சொல்லும் அசல் கிராமத்தான் பேச்சு, செட்டிபுடவில் உள்ள சிலையை , புத்தர்சிலை என்றே இதுவரை எங்கள் கிராமத்தினர் கருதினர் இன்றுதான் அது ‘மகாவீரர்” சிலை என்றும், அந்தகுகையின் உண்மை வரலாற்றையும் தெரிந்துகொண்டோம்.என்றார், பசுமைநடையின் காரணத்தை தேவையை புரிந்துகொள்ளமுடிந்தது.

    அதன்பின் பேரா. சுந்தரகாளி, பேரா.இ.முத்தையா, எழுத்தாளர். குட்டிரேவதி, கவின்மலர், தொலைகாட்சி தொகுப்பாளர்.சுகிதா மற்றும் சமணர்.ஆனந்தராஜ் போன்றவர்கள் இயற்கை ஏன் காக்கபடவேண்டும்,ப்சுமைநடைஅமைப்பு தேவை என்பதையும் எடுத்துரைத்தனர்.
 
     கவிஞர்.ஷாஜஹான் அவர்கள் கூட்டத்தை நேர்த்தியாக வழிநடத்திசென்றார்.

       1 மணிக்கு கூட்டம் நிறைவுபெற்றது, அதுவரை பங்குபெற்றவர்கள் எழுந்துசெல்லவில்லை, அவ்வளவு மகிழ்வுடன், நெகிழ்வுடன் பங்குபெற்றதை அவர்கள் முகத்தில் காணமுடிந்தது. சுவையான மதிய உணவு வழங்கியபின் விருட்சத்திருவிழா  நிறைவுபெற்றது.

      பசுமைநடை பங்கேற்பாளர்களின் குழந்தைகளுக்கு என தனியாக ஓர் முகாம் நடைபெற்றது. அதில் 168 குழந்தைகள் பங்கேற்றனர், அதில் கலந்துகொண்ட குழந்தைகள் வாழ்நாளில் இது போன்ற முகாமில் கலந்துயிருக்கமாட்டார்கள். அவ்வளவு மகிழ்வை பெற்றனர். விழா முடிவில் அணைத்துகுழந்தைகளுக்கும் பரிசுகள் தரபட்டது.

 பசுமைநடை விழாவில் நான் கண்ட ஆச்சரியங்கள்

  விருட்சத்திருவிழா ஆழமரத்தடியில் ஓர் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது, அந்த விழாவில் கலந்துகொணடவர்களை தவிர்த்து, விடுமுறைக்கு மலை அடிவாரகோவிலுக்கு வந்தவர்கள் இருந்தனர், மலையின் பக்கத்து கிராமத்தின் இளைஞர்களுக்கு அந்த மலை அடிவாரம் தான் விளையாட்டு மைதானம், எனினும் ஒரு சிறு சச்சரவு கூட ஏற்படவில்லை.

   தேநீர் இடைவெளியில் வழங்கப்பட்ட தேநீர் ஏதோ கடமைக்கு தந்ததுபோல் இல்லாமல், பெரிய கனமான பேப்பர் டம்பளரில் அதிகமான அளவில் தேநீர் சுவையுடன் சமோசாவுடன் வழங்கப்பட்டது, சுமார் 600 நபர்களுக்கு தேநீர் வழங்கிய போதும் நான் நீ என முந்தாமல் அமைதியாக தேநீர் வாக்கிசென்றது, பங்கேற்பாளர்களின் பண்பை உயர்த்திகாட்டியது

   விழாவில் வெளியிடப்பட்ட “மதுர வரலாறு” புத்தகம் சலுகைவிலையில் தரபட்டது ஓர் ஆச்சரியம் எனில்,  400  பிரிதிகள் 10 நிமிடத்தில் விற்பனை ஆனது.

    விழா திறந்த வெளி அரங்கமாக நடந்ததால் பெண்களுக்கு பாதுகாப்பு கருதி நடமாடும் கழிப்பறை வாகனம் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது,  விழாவில் கலந்துகொண்ட பெண்களுக்கு அது பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியது, பெரிய கட்சி மாநாட்டில் கூட இந்த வசதியை ஏற்படுத்தி தந்து இருக்கமாட்டார்கள்.

    மதிய உணவு சுமார் 750 பேருக்கு வழங்கப்பட்டது, பக்கத்து கிராம மக்கள் சிலரும் சாப்பிடவந்துவிட்டனர், எனினும் வந்த அணைவருக்கும் உணவு வழங்கப்பட்டது, சிலர் உணவின் சுவை கருதி மீண்டிம் கேட்டபோதும் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டதை பார்க்கமுடிந்தது, நெல்லிக்காய் ஊறுகாய், அப்பளம், மோர்வத்தல், கத்தரி கூட்டு என சாம்பார் சாதம், தயிர் சாதம்,  சுவையுடன் இருந்தது என பாராட்டி சென்றனர்.

   சாப்பிட்ட உணவு தட்டுக்கள் அங்கு அங்கு போடாமல் ,குப்பை தொட்டி வாகனம் மூன்று நிறுத்தி குப்பை நிறைந்தவுடன் வேறு இடத்தில் போய் கொட்டிவர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

   விழா முடிந்தபின்னர் அங்கு தவறுதலாக விட்டு சென்ற பேப்பர், டீ கப்புகளை ஓர் பையில் சேகரித்து குப்பைதொட்டியில் போட்டு அந்த இடத்தை சுத்தமாக ஒப்படைத்தனர், விழா முடிந்து சென்றபோது ஆழமரத்தடியில் விழா நடைபெற்றதா என சந்தேகம் எழும்படி அந்த இடம் சுத்தமாக இருந்தது.

    ஒவ்வொரு பசுமைநடையும் எனக்கு புதிய அனுபவங்களை என்னுள் விதைத்தது, புதிய நல்ல நண்பர்களை இனம் காட்டியது, ... இந்த  25 பசுமைநடைவிழா என் மனதில் விதைத்த ஆனந்தத்தை விருட்சகமாக்கியுள்ளது. அதன் அடி வேராக உள்ள நண்பர்களிடம் ஓர் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

     பலதொழிற்சங்க மாநாட்டில் கலந்து இருக்கிறேன், அங்கு விழா ஒருங்கினைப்பாளர்களுக்குள் ஒரு பெரிய இடைவெளி இருக்கும்,  ஆனால் இங்கு விழா குழுவினர்களுக்குள் சகோதரதன்மையை காணமுடிந்தது. அதில் நானும் ஓர் சகோதரன் என்ற மனநிறைவை இந்தவிழா எனக்கு தந்தது. 


இதற்கு தொடர்புடைய நண்பர்களின் பதிவுகள்
                                                                                                         மதுரக்காரன் 
                                                                                                          தமிழ் மணி
                                                                                                          ஷாஜஹான்