தூப்புக்காரி நாவல் பற்றி என் எண்ணபதிவுகள் பதியும் முன், நாவலை வாங்கும் முன் எனக்கு ஏற்பட்ட அனுபவபதிவுகள்...,
விருத்தாசலத்தில் இருந்து எழுத்தாளரும், நண்பருமான, தம்பி கண்மணிகுணசேகரனிடம் இருந்து போன் அண்ணே தூப்புக்காரி படித்தீங்களா? இங்கு கிடைக்கவில்லை அங்கு கிடைத்தால் வாங்கி அனுப்பமுடியுமா என்றார்.
அதன்பின் ஆனந்தவிகடனில் தூப்புக்காரிபற்றி எழுதியதை படித்தேன். அதேநேரம் பேஸ்புக்கில் திருவில்லிபுத்தூர் ரத்தினவேல் அவர்கள் தூப்புக்காரி நாவல்பற்றியும் அதன் பதிப்பக விலாசம் மற்றும் போன் என்னை குறிப்பிட்டு இருந்தார். அவர்கள் குறிப்பிட்ட நாகர்கோவில் திருவள்ளுவர் புத்தகநிலையத்தை தொடர்புகொண்டபோது தற்சமயம் மிக குறைவான பிரிதியே இருப்பதால் இங்குவந்து கேட்டபவர்களுக்கு மட்டுமே தரவேண்டியநிலை,
இன்னும் பத்துநாளில் மறுபதிப்பு வந்துவிடும் என்றார்கள், உடன் நான் அங்கு உள்ள உறவினருடன் தொடர்புகொண்டு அந்த புத்தகம் வாங்கமுடியுமா என்றேன், நாளை செல்கிறேன் என கூறினார். மறுநாள் புத்தகம் வித்துவிட்டது என தகவல் கூறினார்.
அன்றைய மதுரை தினமலரில் தூப்புக்காரி நாவல் எழுதி இளம்படைப்பாளர் படைப்புக்களுக்கான சாகித்ய அகடாமி விருது பெற்ற மலர்வதி அவர்களை பாராட்டி கட்டுரை வந்து இருந்தது, அதில் அவருடைய செல்பேசி எண் குறிப்பிட்டு இருக்க, உடன் அவர்களுக்கு விருதுபெற்றமைக்கு பாராட்டு தெரிவித்து பேசினேன், நன்றி கூறி நாவல்படித்தீர்களா என்றார், நாவல்கிடைக்கவில்லை என விபரம் தெரிவித்தேன்,
அதற்கு அவர் எனக்காக இரண்டு நூல் எடுத்து வைத்துள்ளனர் நான் தங்களுக்கு அனுப்ப கூறிகிறேன் என்றார், இல்லை நான் நான்கு தினத்தில் நாகர்கோவில் அருகில் உள்ள குலசேகரம் ஊருக்கு வர இருப்பதால், முடிந்தால் நேரில் பெற்றுக்கொள்கிறேன் என கூறிவிட்டேன்.
ஏப்ரல் 10ம் தேதி உறவினர்களுடன் குலசேகரம் ஊருக்கு செல்லும் வழியில் நாகர்கோவிலில் மதிய உணவுக்காக ஹோட்டல் செல்ல நான் மட்டும் திருவள்ளுவர் புத்தககடைக்கு சென்று கடையில் விபரம் கூறி தூப்புக்காரி நாவல் வாங்கிகொண்டு, நாவல் பெற்றுக்கொண்ட விபரத்தை நாவலாசிரியர் மலர்வதிக்கு போன்செய்து நன்றிகூற, அவர் கடைக்கு ஐந்துநிமிடத்தில் வந்துவிட்டார்,
விருது பெற்றவர் வாசகனை தேடி வந்து சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. நாவல்களை படித்துவிட்டு நாவலாசரியர்களை சந்தித்த அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு ஆனால் நாவல் படிக்கும்முன்பே நாவலாசிரியரை சந்தித்த அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது.
நாவல் பற்றி
தூப்புக்காரி, மனித கழிவுகளை சுத்தம் செய்யும் ஒருபெண்ணின் மன வலிகளையும், அவள் மகளின் மனவலியையும் நம்முன் சித்திரமாக வரைந்துள்ளார்.
அழுக்கான உடைஉடுத்தி அழுக்கில் நின்றாலும் அந்த மனிதர்களின் வெள்ளை மனதை நம்முன் காட்டும்போது, நம் அழகான சட்டைகூட அழுக்காக தெரியும் மன அழுத்தத்தை நமக்கு உணர்த்தும் விதமாக உள்ளது, நாவலை படித்துவிட்டு இயல்புநிலைக்கு திரும்ப மிக சிரமமாகவே உள்ளது.
இதுவரை யாரும் சொல்லாத கதைகளம் படிக்கும் போது நம் அகத்தின் அழுக்கை நமக்கு உணர்த்துகிறது.
கதை தனிமனிதரையோ, இந்த சமூகத்தையோ சாடவில்லை, ஆனால் சுட்டிகாட்டுகிறது.
அம்மா ஆஸ்பத்தரியில் கழிவரையை சுத்தம் செய்யும் தொழிலை வெறுக்கும் மகள் பூவரசி, சந்தர்ப்பவசத்தால் அதே வேலைக்கு செல்லவேண்டிய நிலை பூவரசி கழிவரையை சுத்தம் செய்யும் போது அவளுக்கு ஏற்படும் மனவேதனையை நாம் அருகில் நின்றுகொண்டு மூக்கை பொத்திக்கொண்டு நேரில் பர்ப்பதை போன்ற உணர்வை தருகிறது கதையின் நடை. நாலுபேரு பாராட்டனும்னு பத்துபேருக்கு விழாநடத்தி உதவிசெய்வானுங்க ஆன தனியேபோய் உதவி கேட்டு போனா செய்யமாட்டாக என வசதிபடைத்தோரின் குணநலனை சாடும்போது இன்றைய அரசியல்வாதிகளின் முகமுடிகளும் நம்முன் வந்து செல்கிறது.
கிளைகளின் சலனம்
ஊருக்கு தெரியும்?
வேர்களின் அழுகை
யாருக்கு தெரியும்?
இப்படி நாவல்களின் இடையே கதாபாத்திரங்களின் வேதனைகள் கவிதைகளாக பதிவு செய்துள்ளது நாவலுக்கு அழகுசேர்க்கின்றன.
மாரியும், பூவரசியும் மனதை விட்டு அகலாத கதாபாத்திரங்களாக உலாவருகின்றனர்.
இது பெண்களின் மன உலகை சுட்டிகாட்டுவதால் ஒரு பெண்ணியநாவலாக உள்ளது. விருது பெற்றமைக்கு தகுதியுள்ள நாவல்.
21.4.2013 அன்று காலை விருதுநகரில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் தூப்புக்காரி நாவல் எழுதிய மலர்வதி அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. பல இலக்கிய படைப்பாளர்கள் கலந்துகொண்டனர். பலர் பாராட்டி பேசினர், ஏற்புரையில் மலர்வதி சிறப்பாக பேசினார்.