ஞாயிறு, டிசம்பர் 02, 2012

காலத்தின் குரல்


இன்று நூலகத்தில் இருந்து "காலத்தின் குரல்" கவிஞர்மீராவின்முதலாம்
ஆண்டுநினைவஞ்சலி நாளில் வெளியான நூலைபடித்தேன்.

        தமிழகத்தின் முக்கிய இலக்கியவாதிகள் அவருடன் பழகிய நினைவுகளை பதிவு செய்திருந்தார்கள். நூலை படிக்கபடிக்க மீரா அவர்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொள்ளும்வாய்ப்பைபக்கத்தில்இருந்தும்தவறவிடப்பட்டுள்ளேன்.

      அவரின் அன்னம் விடு தூது இதழ் வெளிவந்த போது வாங்கிபடிப்பேன், மற்றவர்கள் குமுதம்,ஆனந்தவிகடன், கல்கி வாங்கிபடிக்கும் போது நான் செம்மலர், அன்னம் விடுதூது வாங்கி எப்போதும் கையில் வைத்து திரிவேன்.

   அப்போது இப்போது உள்ள குமுதம் இதழ் அளவில் 2 புத்தகம் வெளிவந்தது. அப்போது மதுரையில் போக்குவரத்துக்கழகத்தில் அப்பிரண்டிஸ் பார்த்த நேரம்.

அச்சமயம் கரிசல்காட்டு கதை வெளியிட்டார்கள்வாங்கி படித்தேன் வியந்தேன்  அதன்பின்தான் கி.ராஜ்நாராயணன் எல்லோரும் அறியும் நிலை ஏற்பட்டது என எண்ணுகிறேன்.

          அப்பிரண்டிஸ்முடிந்து சிவகங்கையில் 1986 ல் மருதுபாண்டியர் போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்ப பணியாளராக சேர்ந்தேன். தினசரி மதுரையில் இருந்து சிவகங்கை சென்றுவருவேன். காலை 6.20க்கு சிவகங்கை பஸ்,  பலநாட்களில் அந்த நேரத்தில் எங்களுடன் மீரா அவர்களும் சிவகங்கை பயணம் செய்வார் கையில் பிரிப்கேஷ் சூட்கேஷ் வைத்து இருப்பார் சிலநேரம் இடம் கிடைக்காதபோது நான் எழுந்து இடம் தந்துள்ளேன். அப்போது புன்னகைமட்டுமே செய்வார்,

அவரது அகரம் அச்சகத்திற்கு 2முறை சென்றுள்ளேன்.நீளமான வெரன்டாவில் அவர்கள் வெளியிட்டநூல்களை பார்வைக்கு விற்பனைக்காக வைத்திருப்பார்கள், எனது கூச்ச சுபாவத்தால் மீராவை தள்ளி இருந்தே பார்த்துவியந்துள்ளைன்.

3 வருடத்தில் பணி இடம்மாறியதால் என் தடம்மாறிவிட்டது. இந்த நூலை படித்தபோது அவரின் நினைவு என்மனதில் வந்து சென்றது. அவசியம் அடுத்தமுறை காலத்தின் குரல் சொந்தமாகவாங்கவேண்டும்.  அவரின் கவிதைஒன்று

 " என்எழுதுகோல்வெறும்எழுதுகோல்அல்ல!
   தேசம்தழுவும்பொதுவுடமைக்கு
   வரவேற்புரை எழுதும் பொதும்
   தேகம் தழுவும்
    உனக்கு என் தனியுடமைக்கு
   வாழ்த்துரை எழுதும் போதும்
    என் எழுது கோல் வெறும் எழுதுகோல் அல்ல
  
   .

செவ்வாய், அக்டோபர் 23, 2012

வேதனைக்குரல்


தன் குழந்தைக்கு டாட்டா காட்டிவிட்டு புறப்பட்ட அப்பாவை மழலை குரலில் சாக்லெட்வாங்கிவாப்பா என சொல்ல மகிழ்வோடு சரிப்பா என பைக்கில் புறப்பட்டான் குமரன்.

தொடர்மழையால் மண்பாதை நசநசத்து போய் பைக் ஓட்டுவது சிரமமாக இருந்தது, சிறிது தூரம் தான் அதன்பின் தார் ரோடு வந்துவிடும், தார்ரோடும் மழைகாரணமாக குண்டும் குழியுமாக இருப்பதும், தண்ணீர்தேங்கி இருப்பதால் டம்டம் என சப்ததுடன் ஒட்டவேண்டியுள்ளது,

சிறிது தூரம் சென்றவுடன் நான்கு வழிசாலை வர சர்வீஸ் ரோட்டில் இடதுபக்கம் திருப்பி வண்டியை வேகமெடுத்தான். கலெக்டர் அலுவலகம் வந்து வலதுபக்கம் திரும்பி நான்குவழி சாலை கடந்து ஊருக்குள் நுழையும் பாதையில் செல்லும் போது எதிரில் ஷேர்ஆட்டோ ரோட்டின் மையத்தில் வெள்ளை  கோட்டை   ஒட்டியே வந்தது.  இடதுபக்கம்  இடம்  இருந்தும்  ஏன்
இப்படி  வண்டியை ஓட்டுகின்றனர் இவர்களை சைடுவாங்குவதும் சிரமம் என மனதுக்குள் திட்டிகொண்டே வரும் போது இரயில்வே கிராஸிங்யை கடந்து வேகமாக வந்த மணல் லாரி ஹாரன் அடித்துக்கொண்டே ஷேர்ஆட்டோவை முந்த ஷேர் ஆட்டோ அப்போதும் இடதுபக்கம் ஒதுங்காமல் மையபகுதியில் செல்ல அதையும் மீறி லாரி சைடுவாங்க எதிரில் ஒரமாய் வந்த குமரன் பைக்கோடு தூக்கி எறியப்பட்டான்.






அடிபட்டவன் நிலையை கண்டவுடன் லாரி டிரைவரும் கிளினரும் ஓடிவிட கொஞ்சம் ஒதுங்கி இருந்தால் விபத்தை தவிர்த்து இருக்க வேண்டிய ஷேர்ஆட்டோவோ அதில் பயணம் செய்தவர்களோ கவலைபடாமல் சென்றுவிட்டனர்.

சப்தம் கேட்டு சிறிது தூரத்தில் உள்ள டீ கடையில் இருப்பவர்கள் ஓடிவந்து 108 க்கு போன் செய்து ஆஸ்பத்தரியில் சேர்த்தனர்.

ஆஸ்பத்திரியில் இருந்து எங்கள் அலுவலகத்துக்கு தகவல் வந்தவுடன் நானும் நண்பர்களும் ஆஸ்பத்தரிக்கு வந்த போது ஐசியு வார்டு வாசலில் குமரன் மனைவி உறவினர்களோடு சோகமாக உட்கார்ந்திருக்க குமரனின் குழந்தை நடந்த சோகம் அறியாமல் விளையாடி கொண்டிருந்ததை நான் உட்பட அங்கு உள்ளவர்கள் சோகமாக பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஐசியு கதவு திறக்கும்போதெல்லாம் வெளியே காத்து இருக்கும் உறவினர்களிடம் ஒருவித பயம் கலந்த பதட்டம்ஏற்படும்,அவர்அவர் தனக்கு பிடித்த கடவுள் அல்லது குலதெய்வத்தை நினைத்து பால்குடம் எடுக்கிறேன் மொட்டை போடுகிறேன் என வேண்டும் வேதனைக்குரல்
அங்குள்ளவர்களுக்கு கேட்கவே செய்தது,

அப்போது கதவு திறந்து வெளிவந்த டாக்டர் குமரன் என அழைக்கவும் அவர் மனைவியும் அவரது உறவினர்களும் டாக்டரை நோக்கி ஓடினர் சிறிது நொடியில் ஐயோ என அலறல் அங்கு எல்லோரையும் திடுக்கிடவைத்தது. மார்சுவரி அறைக்கு அழதுகொண்டே செல்லும் உறவினர்களுக்கு பின்னே குமரனின் குழந்தையை தூக்கிகொண்டே சென்றது மனம்வலித்தது,

குமரனின் நட்பை எண்ணிபார்த்த போது அழுகைதான் முட்டிக்கொண்டு வந்தது, உடலை பெற்றுக்கொண்டு வேனில் செல்லும் போது விபத்து நடந்த இடத்தை கடக்கும் போது ஒரு ஷேர்ஆட்டோ ரோட்டின் மையத்திலேயே சென்றதை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

என் இலக்கிய நண்பர்கள்,,,,,,,


நான் படிக்கும் கட்டுரைகள் ,கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தால் எழுதியவருக்கு கடிதம் எழுதிப் போடுவதுதான் என வழக்கம். 

தொலைபேசியில் பேசலாம்,நாம் பேசும் போது படைப்பாளி நம் பேச்சைக்கேட்கும் நிலையில் இருக்க வேண்டும்.அவர் எந்த சூழ்நிலையில் இருக்கிறார் என்பது தெரியததால் நம் எண்ணங்களை அவருடன் பகிந்து கொள்ள முடியாமல் போகலாம் என்பதால் அவரது விலாசத்திற்கு கடிதம் மூலம் தொடர்பு கொள்வேன். 

பல நேரங்களில் படைப்பாளிகளிடமிருந்து கடிதம் வராது,நான் தொலை பேசி எண்னை குறிப்பிட்டு இருப்பேன்.பதிலும் வராமல் போய்விடும்.ஆனால் சிலரிடமிருந்து போன் வரும்.அப்போது மனதில் மகிழ்வு தோன்றும்.அத்துடன் இந்த அந்த போன் பேச்சுடன் சில படைப்பாளிகளின் தொடர்பு விட்டு விடும். 

ஆனால் அந்த தொடர்பு சிலரிடம் நட்பாக மலர்ந்து இணை பிரியா நட்பாகக்கூட மாறியுள்ளனர்.அப்படிபட்ட படிப்பாளிகளான இலக்கிய நண்பர்கள் சிலர் பற்றி நினைத்துப்பார்க்கிறேன். 

ர,சு நல்லபெருமாள்; இப்போது உள்ளவர்களுக்கு இவர்களைத் தெரியுமா என்பது தெரியாது.1970முதல்1985 வரை ஆனந்த விகடன் ,கல்கியில் பிரபலமான தொடர்கதைகள் எழுதிய நாவலாசிரியர்.அகிலன்,நா.பா போன்றவர்கள் எழுதும் போது அவர்களுக்கு இணையாக பேசப்பட்டவர். 

நான் சிறுவயதில் பள்ளி விடுமுறை தினங்களில் எனது பெரியம்மா வீடு போகும் போது வார இதழ்களில் வந்த கதைகளைத் தொகுத்து பைண்டிங்க செய்து வைத்திருப்பார்கள். 

அப்படி முதலில் நான்படித்த கதை “பொன்னியின் செல்வன” நாவல்.அதன் பின் அகிலன் எழுதிய “வேங்கையின் மைந்தன்” என வரலாற்று புதினங்கள் படித்து வந்த நிலையில் “திருடர்கள்” எனும் நாவலை படிக்கும் போது என்னுள் பிரமிப்பைத் தந்தது. 

அப்போது எழுத்தாளர் யார் என பார்த்த போது ர.சுநல்லபெருமாள் என இருந்தது.அதன் பின் அவரது கதைகளை படிக்க எண்ணி நூலகத்தில் தேடிய போது “கல்லுக்குள் ஈரம்” படித்தேன், 

இப்படி படிக்கும் போது அவர் பாளையம் கோட்டையில் இருப்பதாக தெரிந்தது.எனவே ஒரு போஸ்ட் கார்டில் ர.சு நல்ல பெருமாள் எழுத்தாளர்,பாளையம் கோட்டை என மட்டும் விலாசம் எழுதி கடிதம் போட்டேன்.அப்போது எனக்கு வயது17,18 இருக்கும். 

1980 இல்.ஒரு வாரம் கழித்து அவரிடமிருந்து கடிதம் வந்தது.அவர் எழுதிய நூல்களை பட்டியலிட்டு அது எந்த பதிப்பக வெளியீடு என குறிப்பிட்டும் கடிதமெழுதிமைக்கு நன்றி தெரிவித்தும் கார்டு போட்டிருந்தார். 

எனக்கு மகிழ்ச்சி வெள்ளம்,யாரிடம் பேசினாலும் “கல்கியில் கதை எழுதுபவரிடமிருந்து  கடிதம் வந்துள்ளது” என  பெருமையாகக் காட்டுவேன்,
ஆனால் மற்றவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லைஅதை. 

அதன்பின்படிப்பு,வேலைதேடுதல்,திருமணம் எனஎன் வாழ்க்கைப்பயணம் தொடர்ந்தது. 

இடையில் கண்மணி குணசேகரன் மூலம் நெல்லையில் SETC யில் வேலை பார்க்கும் இசக்கி என்கிற நண்பர் அறிமுகமானார். 

இருவரும் இலக்கியம் பற்றி பேசும் போது எழுத்தாளர் ர.சு நல்ல பெருமாள் அவர்களைப் பற்றியும்,சிறுவயதில் அவர்களுக்கு நான் கடிதம் எழுதி பதில் வந்துள்ளது என்றேன்.அவர் “ஆம்,நான் ஒரு தடவை நண்பரைப்பார்க்க பாளையங்கோட்டைபோயிருந்தபோதுரசுநல்ல பெருமாள் எழுத்தாளர்,வக்கீல் என போர்டு மாட்டிய வீட்டைப்பார்த்துள்ளேன்” என்றார்.அவரை முடிந்தால் சந்திக்கவும் எனக்கூறினேன். 

ஒரு மாதம் கடந்து இருக்கும்,நண்பர் இசக்கி அவர் வீடு சென்று என்னைப்பற்றி கூறியுள்ளார்.உடனே என்னுடன் பேச விரும்பி அவரது செல் பேசி மூலம் பேசினார்.

கடிதம்வந்துமுப்பதுஆண்டுகளுக்குப்பிறகுஎன்மனம்கவர்ந்தஎழுத்தாளரிடமிருந்துபோன்.10 நிமிடம் பேசினார்.பல விசயங்களை பேசினார்.மிக்க மகிழ்வான நாளும்,மறக்க இயலாத நாளுமாய் அது என்னுள் பதிவகியது. 

அதன்பின்பத்துநாட்கள்கழித்துமீண்டும்நண்பர்இசக்கியிடமிருந்து போன்,
அதிர்ச்சியான தகவல்,ர,சு நல்ல பெருமாள் இறந்து விட்டார் என/நேரில் சந்தித்து பேசும் முன்பாகவே இறந்து விட்டார். 

அ.முத்துக்கிருஷ்ணன்; உயிர்மை இதழ் கட்டுரைகள் மூலம் எனக்கு தொடர்பு ஏற்பட்டு க்ரீன் வாக் அமைப்பு மூலம் மேலும் நெருக்கமான தொடர்பு ஆனதால் இன்று நண்பரானார்.
 


மாதம்ஒரு முறை மதுரையில் சந்திக்கும் நண்பரானார். இவர் மூலம் பல படிப்பாளிகளின் அறிமுகம் கிடைத்தது.மாதம் ஒரு முறை மதுரையில் நேரில் சந்திக்கும் நண்பர் அவ்வப்போது தொலைபேசியிலும் பேசிக்கொள்ளும் நண்பர்.பேச்சைப்போலவே அவரது கட்டுரைகளும்ஆவேசம்கொண்ட கருத்துக்களை உள்ளடக்கியது. 

எஸ்,அர்ஷியா; “உங்கள் நூலகம்” மாத இதழில் நீலகண்டப்பறவையை தேடி என்ற கட்டுரையை படித்தேன்.அதன் மூலம் ஏழரை பங்காளி நாவலைப்படித்தேன்.அந்த நாவலின் கதைப்பகுதி இஸ்மாயில்புரம். 

அந்தப்பகுதியில் எனது நண்பர் கதிரவன் இருந்தார்.அங்குதான் எனது இளமைப்பருவம் பல நாட்கள் கழிந்தது என்றாலும் அந்தப்பகுதியின் கதையை ,இஸ்மாயில்புரம் தோன்றிய வரலாற்றை இந்த நாவல் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.உசேன் பாதிரப்படைப்பு என்னை வெகுவாக பாதித்தது.உடன் அவருக்கு கடிதம் எழுதினேன்.உடன் அவரிடமிருந்து போன் வந்தது.பலவிசயகளை பகிர்ந்து கொண்டோம்.மதுரை வந்தால் சந்திப்போம் என்றார்.
மதுரை NCBH புத்தகக்கடையில் ஒரு நாள் சந்தித்தேன்.முதல் சந்திப்பே மறக்க முடியாத மகிழ்வான சந்திப்பு.அந்த சந்திப்பின் நினைவாக NCBHல் இரண்டு புத்தகங்கள் ரூ 400க்கு வாங்கி அன்பளிப்பாகத் தந்தார் எனக்கு
நன்றிகூறவார்த்தைகள்இல்லாமல்செய்து விட்டார். 

இலக்கியம் மட்டுமல்லாது குடும்ப விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நண்பராகி விட்டார்.என் இலக்கிய உலகின் முதன்மையான நண்பர்.

அவரது மூன்றாவது நாவல் அப்பாஸ் தோப்பு புத்தகமாக வரும் முன் படித்துப்பார்க்கும் நண்பர்களில் ஒருவராக என்னை மாற்றியுள்ளார்.இவர் மூலமும் நல்ல இலக்கிய வாதிகள் அறிமுகம் கிடைத்தது.தரமான இலக்கிய படிப்புகள்தரும்இவர்இலக்கியஉலகில் பேசப்பட வேண்டிய எழுத்தாளர்.காலம் பதில் தருமா? 

கண்மணி குணசேகரன்;அ.முத்துக்கிருஷ்ணன் என்னோடு பேசும் போது தங்கள் போக்குவரத்துக் கழகத்தை மையப்படுத்தி வந்துள்ள நெடுஞ்சாலை நாவலைப் படித்தீர்களா என்றார். உடன்  வாங்கிப்படித்தேன்.  போக்குவரத்தின்
மெக்கானிக்,நடத்துனர்ஓட்டுனர்,பற்றிய கதை.அருமையான பதிவு. 

அவரைதொடர்புகொண்டுபேசியபோதுஅவரும்என்னைபோலபோக்குவரத்துக்
கழத்தில் மெக்கானிக் என அறிந்த போது மேலும் நெருங்கி இன்று உடன் பிறவா தம்பி ஆகிப்போனார்.(வயது வித்தியாசம் காரணமாக)இலக்கிய நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதை என்னிடம் பகிர்ந்து கொள்வார். 

அவர் எழுதிய அஞ்சலை நாவல் படிப்பவர்கள் நிச்சயமாக கண்மணி பற்றி தெரிந்து கொள்வார்கள்.கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற அவரது படைப்புகள் பற்றிய கருத்தரங்கம் சென்று வந்தேன்.மறக்க முடியாத அனுபவங்களை தந்த நிகழ்வாய் அது. 

விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா,நாஞ்சில் நாடன்,சு,வேணுகோபால் அறிமுகம் கிடைத்தது.ஒருநாள் இலக்கிய உலகில்பேசப்படும் எழுத்தாளராக வலம் வருவார்.அவரின் ஒவ்வொரு வளர்ச்சியும் எனக்கு மகிழ்வைத் தரும். 

விமலன்;விருதுநகர்  அருகிலுள்ள  பெரியபேராலி  கிராமத்தை  சேர்ந்தவர்.
சிறுகதை  எழுத்தாளர்,  புத்தக தினத்தை முன்னிட்டு விருதுநகரில்
எஸ்ஏபெருமாள்  அவர்களின்  கூட்டம்  நடைபெற்றது.  அங்குதான் சந்தித்துப்
பேசினோம். 

“நான்மூர்த்திஅரசுத்துறையில் எனதுபணிஎனகைகுலுக்கினார்.நான் பேசுவதை அதிகம்கேட்டார்,அவர் குறைவாக பேசினார்.ஆனால் நண்பர் பாண்டியக் கண்ணன்தான் இவர் விமலன்  என்கிற  பெயரில் மூன்று  சிறுகதை தொகுப்பு
களை போட்டுள்ளார்.என்றார். 

அடுத்த சந்திப்பில் அவரது சிறுகதை தொகுப்பு இரண்டு புத்தகம் தந்தார்.ஒன்று “காக்காசோறு,மற்றொன்று“வேர்களற்று”/ 

இரண்டு நூலும் சிறுகதைதொகுப்பு.எளிமையான கதைகளாக வாழ்க்கையை உணர்த்தும் கதைகள். 

எனக்கு நெடுஞ்சாலை என்ற பெயரில் வலைத்தளம் ஏற்படுத்தித் தந்து என்னை எழுததூண்டிய நண்பர்.இன்று என் எண்ணப்பதிவுகள் எழுத்துக்களாக மாறியுள்ளதற்கு காரணமானவர். 

தினசரிபோனில்பேசும்நண்பர்இவர்சிட்டுக்குருவிஎன்ற பெயரில் வலைத்தளம் ஒன்றை நடத்தி வருகிறார்.வாரம் இருமுறை அல்லது ஒருமுறை என கதை,கட்டுரைகள் எழுதி பதிவு செய்யும் நல்ல மனிதர்.எளிமையான நண்பர்.இவர் மூலம் விருதுநகரில் இலக்கிய ஆர்வலர்கள் அறிமுகம் கிடைத்தது. 

இவர்களைத்தவிர பலஇலக்கியவாதிகள் குறிப்பாக திருமங்கலம் ஷாஜகான்,
மீரான்மைதீன்,பாண்டியக்கண்ணன்  குறிப்பிடத்தக்கவர்கள்  நான் பேச
மறந்தாலும் அவர்களாக தொலை  பேசியில்  தொடர்பு   கொண்டு   நலம்   விசாரிக்கும் இலக்கிய படைப்பாளிகள். 

எஸ்.ராமகிருஷ்ணன்,கோவில்பட்டிஉதயசங்கர் இவர்களுடன் அவ்வப்போது உரையாட அனுமதிக்கும் வாசகனாய் வலம் வருகிறேன். 

எனது இலக்கியத்தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.இலக்கிய நண்பர்களும் ளர்ந்துகொண்டேஇருக்கிறார்கள்.வட்டம்பெரிதாகும்,வட்டத்தில் வரும் நண்பர்களைப்பற்றி பிரிதொரு சந்திப்பில்,,,,,,/

வியாழன், செப்டம்பர் 20, 2012

நெசவு,,,,,,,


நண்பர்களின் இலக்கிய ஆர்வத்தால் துளிர்ந்த அமைப்பு "இலக்கியா".
26.8.12 ஞாயிற்றுகிழமை மதுரை கிரீன் வாக்கில் கலந்து கொண்டு விருதுநகர் திரும்பும் போது நண்பர் கவிஞர்.சரனிதா இன்று மாலை 6 மணிக்கு இலக்கியா எனும் இலக்கிய அமைப்பு புதியதாக ஆரம்பித்துள்ளோம்,தாங்கள் கலந்து கொள்ளவேண்டும் என்றார். நண்பர்கள் சந்திக்கும் போது ஏதோ ஏதோ கருத்துக்கள் பற்றி பேசுவோம் அப்புறம் வீடு திரும்பிவிடுவோம் அடுத்த நாள் மறந்துவிடுவோம், நாகர்கோவிலில் இருந்து வந்த நண்பர்தான் சந்திப்பை வாரம் ஒருநாளாவது முறைபடுத்துங்கள் அது மிகபயனுள்ள அனுபவங்களை உங்களுக்கு ஏற்படுத்தும் என ஆலோசனையை கூற அதை இலக்கியா என பெயர்சூட்டி அமைப்பை ஏற்படுத்தியவர் கவிஞர் சரனிதா.
நானும் அன்று மாலை 6 மணிக்கு சென்றேன் அங்கு
திரு.சக்திமுத்து கிருஷ்ணன்,
திரு.சரனிதா,
திரு.பாலசுப்பிரமணி,
திரு.நடராஜன்,
திரு.நரசிம்மன்
திரு.ரகுபதி,
திரு.விமலன்,
திரு.ஆதிநாராயணன்,
திரு.கிருஷ்ணன்,
திரு.சசிக்குமார்,
இவர்களுடன் நானும் கருத்துபட்டரையில் கலந்து கொண்டேன்.

சனி, மே 26, 2012

பக்கத்து தெரு



சூலக்கரைமேடு எனும் பகுதி குடியிருப்புகளாக வளர்ந்து வரும் பகுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ளதால் வேகமாக வீடுகள் அங்குஇங்கும் கட்டப்பட்டும், கொய்யா தோப்புகள் பிளாட்டுகளாக மாறிவரும் பகுதி.
இந்த பகுதியில் நிலங்கள் விலை குறைவாக தான் இருந்தது,அதனால் பலர் வீட்டுமனைகள் வாங்கினர் இதனால் புரோக்கர்களுக்கு கமிஷன் தொகை கிடைப்பதை பார்த்து தள்ளுவண்டியில் அயர்ன் செய்பவரும், அரிசி கடை வைத்தவர்கள் என பலர் புரோக்கர்களாக மாறினர் மாறியவர்கள் கமிஷனுக்கு ஆசைபட்டு இடத்தின் விலையை உயர்த்தினர். அதன்பின்னர் புரோக்கர்கள் சிலர் பிளாட்டுகளை தங்கள் பெயரில் பவராக பதிவு செய்து மேலும் மேலும் இடத்தின் விலையை உயர்த்தி மிக குறைந்த காலத்தில் நாலுமடங்கு உயர்த்திவிட்டனர், பாதைகள் என்பது நேராக இல்லாமல் கோனல்மானலாகவும் ஒரு இடத்தில் பதினைந்து அடியாகவும், சில இடங்களில் இருபதுஅடியாகவும் இருக்கிறது இருபது அடி ரோடு என மணல் லாரிகள் நுழைந்து தடுமாறி போனதும் உண்டு.
வீடுகட்டுபவர்களும் ரோடு நமக்கானது என எண்ணி அங்கேயே மணல்,ஜெல்லி கொட்டி மேலும் பாதையில் தடை ஏற்படுத்தி பாதையில் செல்பவர்கள் சிரமத்தை ஏற்படுத்தியும் வருகின்றனர் பாதையில் செல்பவர்கள் கேள்வி கேட்டால் எதுக்கு இந்த பாதையில் வர என எதிர் கேள்வி கேட்டு பலமுறை சண்டை சச்சரவுகளாகவும் இருக்கும்.
அப்படிபட்ட பாதையில் தான் தினம் அலுவலகமோ அல்லது டவுனுக்கு சென்றாலும் செல்லவேண்டும். அன்றும் என் மகளுடன் பைக்கில் டவுனுக்கு சென்றபோது, அப்பா இந்த பாதையில் வேண்டாம் சுற்றி போகலாப்பா இந்தபக்கம் நாய் விரட்டும்பா என்றால்.
அந்த பாதை முடிந்தவுடன் மெயின் ரோடு வந்து விடும் மேலும் வரிசையாக வீடு இருப்பதால் அந்த இடத்தில் மட்டும் தார்ரோடு போட்டு இருக்கும் அதனால் பலரும் அந்த பாதை வழியாக செல்வார்கள், ஆனால் அந்த பகுதியில் ஒரு நாய் உள்ளது யார் வீட்டு நாய் என்றும் தெரிவதில்லை தெருவில் தான் இருக்கும், பைக் மற்றும் சைக்கிளில் செல்பவர்களை குலைத்து கொண்டு விரட்டி கடிக்க வரும் பல நேரங்களில் பைக்கில் சென்றவர்கள் கீழேவிழுந்துள்ளனர். அன்றும் அப்பா வரேன்லப்பா பயப்படாதே என அந்தபாதை வழியாகவே சென்றேன், நாயை காணவில்லை தொடர்ந்து போகும்போது ஒரு சந்துக்குள் இருந்து குலைத்து கொண்டு நாய் எங்களை துரத்த மகள் பயத்தில் 'ஆ' எனகத்தி விட்டாள், நான் நாய் கடித்துவிட்டதோ என வண்டியை நிறுத்தி பார்த்தபோது ஒன்றுமாகவில்லை, உடன் கீழே கிடந்த கல்லை எடுத்து நாயின் மீது எறிந்தேன் கல் நாயின் மீது படவில்லே என்றாலும் நாய் ஓடிவிட்டது.
நான் கல்லை எறிந்ததை பார்த்தவுடன் அருகில் இருந்த வீட்டுகாரர், ஏன்சார் நாய் மீது கல்லை எறிகிறீர்கள் என்றார்.
நாய் உங்களதா சார்? என்றேன், இல்லை ஆனா எங்க தெரு நாய், கல்லை கொண்டு எறியகூடாது என கோபமாக சொன்னார், சார் நாய் என் மகளை கடிக்க வந்துச்சு பார்த்தீங்கள்ள, அதற்கு அவர் அதெல்லாம் தெரியாது இந்த நாய் இங்கு இருப்பதால் எங்கபகுதியில் திருடுபயமே இல்லை எனவே நாயை அடித்தால் நாங்க சும்மா இருக்கமாட்டோம் நீங்க வேண்னா வேறு பாதையில் போங்க என கூறிவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டார். மனிதனை நாய் கடித்தாலும் பரவாயில்லை என நினைக்கும் இவர்கள் எல்லாம் என்ன ஜென்மமோ, என மனதில் நினைத்துக்கொண்டு பயந்துபோய் நின்ற மகளுடன் புறப்பட்டேன், அதன் பின் மணைவியுடனோ, மகளுடனோ டவுனுக்கு போகவேண்டுமெனில் பக்கத்து தெரு வழியாக போகாமல்,வேறு பாதையில் சுற்றிபோவேன். ஆனால் நான் அந்த பாதையில் போகும் போது நாய் கடிக்க வந்தால் அதன் மேல் எறிய கல்லை பைக்கில் எடுத்துபோவேன். பலமுறை சென்றபோதும் நாய் தட்டுப்படவில்லை.
அன்று மாலை அலுவலகம் முடிந்து வீடு வரும் போது பக்கத்து தெரு நாய் தெருவில் , (நாய் தெரு என என் மகள்தான் பெயர் வைத்தாள்) என்னை நாய் மீது கல்லை எறிந்தால் என திட்டியவரின் வீடு முன் கூட்டமாக இருந்தது, கூட்டத்தில் நின்ற நண்பரிடம் என்ன சார் என கேட்டேன் அதற்கு நண்பர் பைக்கில் ஒருத்தர் போனார் அவரை நாய் விரட்டியது அவர் மிரண்டு போய், வீட்டு வாசலில் நின்றகொண்டு இருந்த இந்த வீட்டுகாரர் பையன் மீது மோதி விட்டதால் கால் எலும்பு உடைந்து விட்டது என்றார், வீட்டுகாரர் என்னைபார்த்தவுடன் தலையை குனிந்து கொண்டார்.,
நான் சிரித்துக்கொண்டேன்.

புதன், மே 16, 2012

கிரிக்கெட் மோகம்...


ஒடி விளையாடு பாப்பா என்றும், மாலை முழுவதும் விளையாட்டு என்றும் கூறினார் பாரதியார். மாலை நேரம் விளையாட சொன்னால், நாள்முழுவதும் விளையாட்டை வேடிக்கை பார்த்து அது குறித்து பேசுவதையே இளைஞர்கள் இன்று வாடிக்கையாக்கி உள்ளனர்.சினிமாவில்மட்டுமே அநியாயத்திற்கு குரல் கொடுக்கும், போராடும் ஹீரோவை கடவுளாக எண்ணி கும்பிடுவது போல் கிரிக்கெட் விளையாடும் நபர்களை கடவுளாக நினைத்துக் கொண்டும் அவர்கள் வெற்றி பெற யாகங்கள் செய்யும் படித்த இளைஞர்கள் வருங்காலத்தை கேள்விக் குறியாக்கிவருகின்றனர். டிவியில் காண்பித்து கிராமத்து இளைஞர்களும் பாரம்பரிய கபடி விளையாட்டை மறந்து கிரிக்கெட் விளையாட்டு பக்கம் ஈர்த்துவிட்டார்கள்.
நாட்டில் முக்கிய பிரச்சனை ஏதும் வந்தால் எடுத்துக்காட்டாக பெட்ரோல்,டீசல் விலை உயர்வு, தொழிலாளர்,விவசாயிகள் போராட்டம் எதிர்கட்சிகள் வேலை நிறுத்தம் என வரும் போது உடனே கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி நடத்திவிடுவர்கள் ஆளும் கட்சியினர். பத்திரிக்கை டிவி போன்ற மீடியாக்கல் நாட்டின் முக்கிய பிரச்சனைகளை விட்டுவிட்டு கிரிக்கெட் விளையாட்டுக்கு மிக முக்கியதுவம் தரும். நூறு ரன் எடுத்தவரைப் பாராட்டி பிரதமர்,ஜனாதிபதி வரை வாழ்த்து தெரிவிப்பார்கள். நாட்டின் முக்கியமான பிரச்சனைகள் மக்களிடமும் இளைஞர்களிடமும் மறைக்கப்பட்டோ,மறக்கவைக்கப்படும்.
நாட்டின் பாதுகாப்புக்கு காவலர்கள் பற்றாகுறை இருக்கும்போது கிரிக்கெட் வீரர்களுக்கும்,கிரிக்கெட் மைதானத்திற்கும் அதிக அளவு போலீஸ்காரர்களை பணிபுரிய வைப்பது கவலையளிக்கிறது. உளுந்தம் பருப்பு,துவரம் பருப்பு, சீனி, காய்கறி என அணைத்துப் பொருட்களின் விலை உயர்ந்தாலும் கவலைப்பட இளைஞர் உலகம் தயாராக இல்லை கிரிக்கெட் போட்டி பார்ப்பதே முதல் கடமை விளையாட்டு நடைபெறும் சமயம் கரண்ட் கட்டாகாமல் இருக்க வேண்டுமே என்பதுதான் இளைஞர்களின் முதல் கவலை.
அரசு வேலைபார்ப்பவர்கள் வீட்டில் வேலை,அல்லது உடல்நலம் சரியில்லை என விடுப்பு எடுத்து கிரிக்கெட் போட்டியை டிவி யில் பார்க்கின்றனர். கிரிக்கெட் மேட்ச் அன்று வீட்டு வேலை செய்ய மறுக்கும் பிள்ளைகளை உருவாக்கியுள்ளது கிரிக்கெட் மோகம்.
அரசு ஊழியர்கள் வருட வருமானம் ரூ 2,00,000 பெற்றால், ரூ5000 வரி விதிக்கின்ற அரசு, ஆயிரம்கோடி ரூபாய் பணம் புரளும் IPL போட்டிக்கு வரி விலக்கு தருகிறது. விளையாட்டு வீரர்கள் சட்டையின் கையில்,முதுகில்,நெஞ்சில்,தொப்பியில்,பேண்ட் முன்பகுதி,பின்பகுதி என விளம்பரம் மூலம் பல லட்சம் பெறுகின்றனர் அதுவும் வரிவிலக்கு பெற்று. பந்து அடிக்கும் மட்டையில் விளம்பரம்,மைதானம் முழுவதும் விளம்பரம்,கிரிக்கெட் பந்தில் மட்டும் தான் விளம்பரமில்லை. மைதானத்தில் எங்கள் விளம்பரப் பலகை பந்தைஅடித்தால் விளையாட்டு வீரர்களுக்கு பரிசு என அறிவிப்பு செய்கின்றனர்.
கிரிக்கெட் டீம் என்பது தனியார் கிளப் அதற்கும் இந்திய அரசுக்கும் சம்மந்தம் கிடையாது. விளையாட்டு வீரர்களை தேர்வு செய்ய ஒலிம்பிக்சங்கத்திற்கோ அல்லது மத்திய அரசுக்கோ உரிமைகிடையாது. ஆனால் மற்றநாட்டிலோ அல்லது உள்நாட்டிலொ விளையாடும் போது இந்திய அணி என இந்தியாவின் பெயரை பயன்படுத்தி கொள்கின்றனர்.
ஐரோப்பாவில் கால்பந்துக்கு என தனித் தனி கிளப் உண்டு. அவைகள் மோதும் போது கிளப் பெயரை மட்டுமே பயன்படுத்துவர். நான்கு ஆண்டுக்கு ஒருமுறை உலக கால்பந்து போட்டி நடைபெறும் போது,அந்த அந்த நாட்டு அரசுகள் சார்பாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு நாட்டின் பெயரைதாங்கி போட்டி நடைபெறும். அது போல் இந்தியாவில் பிற விளையாட்டுக்களுக்கு ஒலிம்பிக் சங்கம் சார்பாக வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், வெளிநாட்டுக்கு இந்தியா சார்பாக இந்திய அரசு செலவில் அனுப்புவார்கள். ஆனால் கிரிக்கெட்டில் அது முடியாது, இப்படி இருக்க கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி அல்லது இந்தியா தோல்வி என எப்படி கூற முடியும். கிரிக்கெட் மூலம் பத்திரிக்கைகளும் டிவிகளும் கோடிகோடியாம் சம்பாதிக்கும் போது இது பற்றி எழுதுவார்களா என்ன?
IPL கிரிக்கெட் கிளப்பில் உள்ள தலைவர்கள் மட்டும் ஊழல் செய்வது இல்லை விளையாட்டு வீரர்கள் கூட தான் விளையாடும் டீம் தோற்க லஞ்சம் பெற்று விளையாடுவதை கண்டுபடித்து நீக்கியுள்ளனர். இது தெரியாமல் கிரிக்கெட் மோகம் தலைவிரித்து ஆடுகின்றது.
(பயணம் சிற்றிதழில் வந்த எனது கட்டுரை)

ஞாயிறு, மே 13, 2012

உயிர்எழுத்து

     சிறுகதைகள் வாரபத்திரிக்கைகளில் இரண்டு,ஒன்று எனபக்கங்களாய் சுருங்கி பின் அரைபக்க கதையாக மாறி இப்போது காணாமல் போய் விட்டது,ஆனால் மாதபத்திரிக்கையில் குறிப்பாக உயிர்எழுத்து இதழில் அதிக சிறுகதைகள் வெளிவருவது மகிழ்வை தருகிறது, இலக்கிய உலகில் முன்னனி படைப்பாளர்களின் கதைகளும், புதிய எழுத்தாளர்களின் படைப்புகளும் வருகிறது. மே மாத உயிர்எழுத்தில் எஸ்.அர்ஷியா எழுதிய "சுற்றிச்சுழலும் தட்டை பாம்புகளும் புளிபோடாத உளுவைமீன் குழம்பும்" சிறுகதை மிகமிக நல்லபடைப்பாக வந்துள்ளது.
பள்ளிவாசலில் ஆரம்பிக்கும் கதை பள்ளிவாசலில் முடிவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தந்தையின் பாசம்,பிரிந்துசென்ற மகளின் நினைவுகளின் வலிகள் கதையாக்கப்பட்டுள்ளது.
ஜீம்ஆவில் 'பயான்' செய்து கொண்டிருக்கும் ஹஜ்ரத் பேச்சு பற்றிய வர்ணனைகளும், பேச்சை கேட்கும் மனிதர்களை பற்றியும், சுற்றுபுற நிலையை பற்றிய அருமையான வர்ணனைகளுடன் கதை தொடங்குகிறது, பாசமாக வளர்த்த பெண் காதலித்து ஒடிபோய் விட்டாள் அந்த பெண்ணின் தந்தைக்கு ஏற்படும் வலிகள் உண்மையாகவே இப்படி தான் இருக்கும் என்பதொ உணரும் விதமாக கதைவடிக்கப்பட்டுள்ளது. மகள் வேறுமதத்தை சேர்ந்தவருடன் ஓடிப்போய் விட்டால் அந்த குடும்பத்திற்கு மட்டுமல்ல அந்த பெண் சார்ந்த மதத்திற்கே ஒரு அவமானமாக கருதப்படுவதும், அனைவரும் கூடி என்ன செய்யலாம் என கூடி ஆலோசிப்பதும் ஒரு பெரிய பிரச்சனையாக மாற போகும் போது என் மகள் செத்துவிட்டதாக ஜமாத்தில் அறிவித்து விடுங்கள் என முற்றுபுள்ளி வைப்பது, நாட்டில் எந்த ஒரு ஆணும் வேறு ஜாதி,மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டால் ஆண் சார்ந்த ஜாதியில்,மதத்தில் பிரச்சணையாக பார்ப்பதில்லை,அது சமயம் ஒருபெண் சார்ந்த ஜாதியிலோ,மதத்திலோ ஏற்பட்ட அவமானமாக கருதப்பட்டு வெட்டுகுத்து,கொலை என முடிந்து அந்த பெண்ணின் வாழ்க்கையை முடக்கிபோடும் சமுதாயபிரச்சனையை இந்த கதையில் உணர்த்தியுள்ளாதாக தெரிகிறது.
எட்டுவருடங்களாகியும் அடுத்த தெருவில் வசித்துவரும் தன்மகளுடன் பேசவோ பார்க்கவோ விருப்பாத ஒருதந்தை, மசூதியில் பயான் செய்துகொண்டு இருக்கும் தாயம்கானின் பெண்சாயலும் அவரது உடல்மொழியும் தன் பெண் சாயலில் இருப்பது போலவே உணருகிறார் அப்படி எனில் வெளியே பெண்ணை வெறுத்தாலும் அவளது நிணைவுடன் வாழ்ந்து வரும் தந்தையை நம் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.
தன் மகள் விபத்தில் சிக்கி சவக்கிடங்கில் கிடத்தப்பட்டு இருக்கும் போது அங்கு நடக்கும் சம்பவம் தந்தையின் உணர்வையும்,தன்மகளின் கணவனின் மேன்மையான குணத்தையும் நமக்கு எடுத்துகாட்டும் விதமும் தன் மகளை இரண்டுகையாலும் தூக்கிகொண்டு நடக்கும் போது நாமும் அவர் பின்னே நடப்பது போன்ற உணர்வை தருகிறது, ஆனால் கதையின்முடிவு யாரும் கற்பனை செய்துபார்காத வகையில் முடித்துள்ளார்.
சிறந்த கதைகளை வெளியிடும் உயிர்எழுத்து இதழை தொடர்ந்து படிப்போம்.

புதன், மே 09, 2012

கோடை மழை


       இன்று வேலைமுடிந்து டவுன்வழியாக வீடு செல்லும் போது வீட்டுக்கு இந்தமாதம் தேவைபடும் பலசரக்குகள் வாங்கி கொண்டு போக வேண்டும் இல்லையெனில் மணைவியின் அர்சனை அதிகமாகிவிடும், 8 தேதி ஆச்சு இன்னும் சாமான்வாங்கவில்லை என ஒரே புலம்பல் நானும் இன்று நாளை என தாமதமாகிவிட்டது, மாலை வேலைமுடிந்து வாங்கலாம் எனில் நண்பர்களை வரும்வழியில் பார்த்துவிடுவதும்,அவர்களுடன் எழுத்தாளர்களை பற்றியும் கதைகளை பற்றியும் நேரம்போவதே தெரியாமல் பேசுவதும் இடையில் வீட்டில் இருந்து போன் அழைப்புவந்தால் ஆபிஸில் ஒவர்டைம் என பொய் சொல்லி தப்பிப்பதுமாக போனது. ஆனால் இன்று ஆபிஸ் விட்டு கிளம்பும் நேரத்தில் வானம் கருமேகங்கள் சூழ காற்று வேகமாக வீசியது எந்த நிமிடமும் மழை பெய்யும் நிலை சரி இன்றும் சாமான்வாங்கமுடியாது போல் இருக்கே என்று எண்ணியவாரே பைக்கில் ஏறி புறப்பட லேசாக மழை தூர ஆரம்பித்தது சரி பெரிய மழை வருவதற்குள் வீடுபோய் விடுவோம் என பைபாஸ் பாதையில் வண்டியை திருப்பினேன், வேகமாக வண்டியை ஒட்டியபடி வானத்தை ரசித்தபடி வந்தேன் கோடையில் பெய்யும் மழை ஏனோ இடியும் மின்னலுமாக உள்ளது, சிறுதூரலாக இருந்தது பெரும் மழையாக மாறியது பைபாஸ் என்பதால் எங்கும் ஒதுங்க முடியவில்லை,தெப்பமாக நனைந்தேன்.
மழையில் நனைந்துகொண்டே வண்டியை ஒட்டுவது சிரமாக இருந்தாலும் ஆனந்தமாக இருந்தது, வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திய போது ஏன் இப்படி நனைந்தபடி வந்தீர்கள் என துண்டை தந்து விட்டு முனுமுனுத்தவாரே உள்ளே சென்றாள், தலையை தோட்டிக்கொண்டே இருக்கும்போது டீ யை தந்து விட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள், இடிமின்னலுக்கு பயப்படும் மணைவியை நினைத்து சிரித்துவிட்டு வீட்டு வாசலில் உட்கார்ந்து டீயை குடித்துக்கொண்டே மழைபெய்ந்து கொண்டு இருப்பதை ரசித்தேன். பத்து நிமிடம் கடந்தது, டீ குடித்தா டம்பளரை கழுவபோடுங்க என கேட்டவாரே என் மணைவி வீட்டில் இருந்த வெளியே வரவும் மழை சுத்தமாக நின்றுவிட்டது, கோடைமழை இப்படிதான் கொஞ்ச நேரம் பெய்யும் அப்புறம் நின்றுவிடும் டவுனில் ஒதுக்கி நின்று இருந்தால் பலசரக்கை வாங்கி வந்து இருக்கலாம் என காலியான டீ டம்பளரை வாங்கிய படி வீட்டிற்குள் சென்றாள்,வானத்தை பார்த்தேன் சிலநிமிடத்திற்கு முன் இடிமின்னல் என மிரட்டிய மழை இப்போது அமைதியாக இருந்தது...

வெள்ளி, மே 04, 2012

ஹோமியோபதி பார்வையில் அறுவைச்சிகிச்சை நோய்கள்


          நோய் ஏற்பட காரணமான உறுப்புக்கள் அல்லது நோயால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதால் மட்டுமே நோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்ற கருத்தை ஆழமாக அலோபதி மருத்துவம் மக்களை நம்ப வைக்கின்றது. இது தலைவலி என்றால் தலையை நீக்கிவிட்டால் தலைவலி வராது என்பது போல் ஆகும்.

             எந்த ஒரு நோய்களுக்கும் அறுவை சிகிட்சை மட்டுமே தீர்வு அல்ல. நோய் ஏற்பட்ட உறுப்பு முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அதனால் உயிர் இழப்பு ஏற்படும் எனில் அறுவைசிகிச்சை மூலம் தீர்வு காணலாம்.ஆனால் இன்று சிறுநீர் கற்களுக்கு கூட பெரிய அளவில் சிகிச்சை செய்யப்படுகிறது,அப்படி ஆபரேசன் மூலம் கற்களை அகற்றி கொண்டவர்களுக்கு மீண்டும் சிறுநீர்கற்கள் தோன்றியுள்ளது,அதன் பின்னர் ஹோமியோபதியில் நம்பிக்கை வைத்து மருந்துகள் மூலம் குணமாகியுள்ளனர்.


                  குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் பாதிப்பு என்பது கர்ப்பப்பையை மையமாக வைத்து வரும் உடல்நோய்களுக்கு உடன்கர்ப்பப்பை நீக்கி விடுவதே சிறந்தது என்ற நம்பிக்கை அதிக அளவில் அலோபதி மருத்துவம் பெண்களுக்கு எடுத்துரைக்கின்றது. கர்ப்பபை என்பது குழந்தைபெற்றுக்கொள்ள மட்டுமே பயன்படும் ஒரு உறுப்பாக மட்டுமே பார்க்கப்பட்டு கர்ப்பபையில் கோளாறு எனில் கர்ப்பபையை நீக்கி விடுகின்றனர்.இதனால் கர்ப்பபை நீக்கிய பெண்கள் தற்காலிகமாக வலியில் இருந்து நிவாரணம் பெற்றாலும் அதன்பின் ஹொர்மென் கோளாறுகள் ஏற்பட்டு பெண்கள் மூட்டுவலி,இடுப்புவலி என நிரந்தரமான துன்பத்திற்கு ஆளாகின்றனர்.

                சிறுநீர் கற்கள் எந்த பகுதியில் ஏற்பட்டுள்ளது எந்த வகை கற்கள் உருவாகியுள்ளது என ஆய்வு செய்து எதனால் நோயாளிக்கு கற்கள் உருவாகியுள்ளது,சிறுநீர் போவது அடக்கப்படுவதலா? கால்சியம் அதிகம் உள்ள காய்கறி,பழங்கள் சாப்பிட்டதாலா? அவர் குடிக்கும் குடிநீர் தன்மை எப்படிபட்டது என நோயாளி மூலம் கேட்டறிந்து அந்த குறிகளுக்கு ஏற்ப மருந்துகள் ஹோமியோ மருத்துவத்தில் தரப்படுவதால் ஆபரேஷன் செய்யாமலேயே சிறுநீர் கற்கள் கரைக்கப்பட்டு சிறுநீர் பாதை வழியாக சிறுநீர் செல்லும்போது கற்கள் வெளியேற வைக்கப்படுகின்றன.காந்தாரீஸ்,சரசபில்லா, பல்சட்டில்லா, பெர்பரீஸ்வல்கரீஸ் போன்ற மருந்துகள் முக்கியமாக பயன்படுத்துகின்றனர். அப்படி சிகிச்சை செய்தவர்களுக்கு பல வருடங்கள் சிறுநீர் கற்கள் உருவாக்கப்படுவதும் தடுக்கப்பட்டுள்ளது.
             
                 அப்பன்டீஸ் எனப்படும் குடல்வால் அறுவை சிகிச்சையும் அப்படிதான் குடல்வால் ஒரு தேவையற்ற உறுப்பு எனபலரும் கருதுகின்றனர், மனித உடலில் எந்த ஒரு உறுப்பும் தேவையற்ற உறுப்பு என ஒன்றுமில்லை ,எதற்கும் பயன்படாத உறுப்புதான் குடல்வால் பகுதி எனில் அங்கு ஏன் பிரச்சனை வருகிறது பெருங்குடலில் ஏதாவது ஒரு பிரச்சனை எனில் முழுஉறுப்பும் பாதிக்கப்படும் முன் நமக்கு உணர்த்தும் ஒரு உறுப்புதான் குடல்வால் பகுதி தகுந்த மருந்துஎடுத்துக்கொண்டால் முழுமையாக குணப்படுத்த முடியும்.

                      அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு விரைவில் அதன் காயம் ஆறுவதுடன் தழும்புகள் ஏற்படுவதை தடுப்பதிலும் ஹோமியோ மருந்துகள் முதன்மை பெறுகின்றது,அதில் ஸ்டெபிஷாக்கிரியா என்ற ஹோமியோ மருந்து முதன்மையான முதல் மருந்து...
               
                    ஹோமியோ மருத்துவத்தில் இருதயநோய்களுக்கு, சிறுநீர் கற்கள், அப்பண்டீஸ், கர்ப்பப்பை கோளாறு, மூல பிரச்சனை, சைனஸ் நோய்களுக்கு நிரந்திர தீர்வு அறுவை சிகிச்சை தான் என அலோபதி மருத்துவம் கூறும் நிலையில் ஹோமியோபதின் அறுவைசிகிச்சை செய்ய தேவையில்லாமல் குணமாக்கி வருகிறது.

                 அறுவை சிகிச்சை செய்யாமல் பல நோய்களை குணமாக்கிய தங்கள் அனுபவங்களை ஹோமியோ மருத்துவர்கள் ஆதாரத்துடன் புத்தகமாக வெளியிட்டுள்ளனர், நோயை முற்றும் முன் ஆரம்பத்திலேயே ஹோமியோ மருத்துவம் எடுத்துகொண்டால் அறுவை சிகிச்சை தேவைபடாமல் குணமாக்கலாம்.
                  மேலும் பிரசவநேரத்தில் குழந்தை தலை திரும்பவில்லை போன்ற காரணங்கலை கூறியும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது, கர்ப்ப காலத்தில் ஹோமியோபதி மருந்துகள் எடுத்துகொண்டவர்களுக்கு 90 சதம் சுகபிரசவம் ஏற்பட்டுள்ளது. தலை திரும்பவில்லை என கடைசி நேரத்தில் “பல்சட்டில்லா” எனும் ஹோமியோபதி மருந்து தந்து பல தாய்மார்களுக்கு சுக பிரசவம் ஏற்ப்ட்டுள்ல அனுபவம் ஹோமியோ மருத்திவத்தில் உண்டு.

                (மேற்படி எனது கட்டுரை, ஏப்ரல் 29யில் சாத்தூரில் நடைபெற்ற ஹானிமன் விழாவில் வெளியிடப்பட்ட "அவசியம் தானா இத்தனை அறுவைச் சிகிச்சைகள்? " ஹோமியோபதி ஆய்வுத் தொகுப்பு நூலில் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதி.)

            தற்போது ஜனவரி 2014 மாற்றுமருத்துவ இதழில் வெளிவந்துள்ளது.

            [ஆசிரியர்.  டாக்டர்.எஸ்.வெங்கடாசலம்  அவர்களுக்கு நன்றி|]

              குறிப்பு: இதில் குறிப்பிட்ட மருந்துகள் மருத்துவர் ஆலோசனைக்கு பின் பயன்படுத்துவும் காரணம் நமக்கு தேவையான வீரிய அளவு அவர்களுக்கு மட்டுமே தெரியும்...

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

அப்பாஸ்பாய் தோப்பு


          இந்த வாரம் படித்த நாவல் அப்பாஸ்பாய் தோப்பு
எஸ்.அர்ஷியா எழுதிய மூன்றாவது நாவல், மதுரை வைகை தென்கரையின் ஒரு பகுதி அப்பாஸ்பாய் தோப்பு, இங்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படாதவர்களும். அந்த வேளை உணவுக்காக கஷ்டப்படுவர்களும் கலந்து வாழ்ந்து வரும் நிலையில் மதுரை விரிவாக்கத்தால் வைகை கரையில் இருபுறமும் ரோடு போட அந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் புலம்பெயர்ந்து வேறு வேறு பகுதிக்கு சென்ற உண்மை கதை சிறப்பாக பதிவு செய்துள்ளார் மதுரை பேச்சதமிழை எழுத்தாக்கியுள்ளார்.

வெள்ளி, ஏப்ரல் 27, 2012

இன்று புதிதாய்,,,,,,,,,,,,

 
   வலை உலகில் புதிதாய்
   பதியனிட்டுள்ள
   என் படைப்புகளை  ஏற்று ஆதரவு  
   தருமாறும் கருத்து தெரிவிக்குமாறும்
  கேட்டுக்கொள்கிறேன் அன்புடன்/